கனவில் உதிர்ந்தது


கனவில் யாரிடமோ நான் சொன்ன கவிதை ஒன்றை கூடிய மட்டும் நகலெடுத்துள்ளேன்...

புதியநடை புதியமொழி புதிய சிந்தை 
புதுப்பாடல் நாள்தோறும் கிடைக்க வேண்டும் 
மதியலொரு புதுமின்னல் நாளும் வந்து 
மனதிலுள்ள இருளெல்லாம் விலக்க வேண்டும் 
எதினிலினிமை எனத்தேடும் எண்ணம் அற்று 
எதுபுதுமை எனநானும் தேட வேண்டும் 
இதையுன்றன் சன்னிதியின் வரமாய்க் கேட்பேன் 
இறைவாநீ மனம்குளிர்ந்து வழங்கு வாயே
 
பழமையிலே வேரூன்றி புதுமை காணும் 
பக்குவத்தை நீகொடுத்தால், பூமி வாழ 
மழைதருமோர் பயனெனவே வாழ்வேன் அன்றி 
மண்ணுக்கு நான்பாரம் ஆக மாட்டேன் 
எழுதுகிற பொழுதினிலென் அகத்துக் குள்ளே 
ஏகாந்தமாய் உண்மை நிலைக்க வேண்டும் 
முழுதுமெனைப் பிழிந்தாலும் மீண்டும் மீண்டும் 
முதுகெலும்பை நானிமிர்த்தும் வலிமை வேண்டும்

ஓடச் சலிக்காத கால்கள் வேண்டும் 
ஒதுங்குதற்கு அன்பர்கள் நீழல் வேண்டும் 
தேடித் தவிக்காத பாதை வேண்டும் 
தெளிவாக என் தேடல் நிகழ வேண்டும் 
பாடிக் களிக்கின்ற நாட்கள் வேண்டும் 
பயம்வேண்டும் கூடவே துணிவும் வேண்டும் 
வாடிக் கழல்சேர்ந்து வீழும் போது 
வள்ளல் கரங்களெனை அணைக்க வேண்டும்!! 

-விவேக்பாரதி
16-10-2021

Comments

Popular Posts