மறதியின் மகத்துவம்


மறந்து போவதில் இருக்கும் 
மகத்துவம் சொல்கிறேன்! 

உங்களுக்குள் ஒட்டித் திரியும் 
கொஞ்சூண்டு இறைமையை 
மனிதத்தைக் கடந்து 
ஸ்பரிசிக்க முடியும்! 

போன வருடத்தில்
இந்த நாளில் 
இத்தகைய வார்த்தை சொல்லி 
திட்டியவன் எதிரே வந்தாலும் 
நம்மை அறியாமல் 
புன்னகை தோன்றும்! 

பார்க்கும் அனைத்தையும் 
புத்தம் புதிதாகவே 
பார்க்க முடியும் 
இன்று புதிதாய்ப் பிறந்தோம் 
என்பதெல்லாம் 
இன்னும் அருகில் புலப்படும்! 

சில பாடல்கள், 
சில சொற்கள், 
சில இசைகள், 
சில தனிமைகள்,
சில முகங்களைத் தவிர 
வேறெதுவும் உங்களைச் 
சலனப்படுத்திவிட முடியாத 
ஜென் நிலை கிடைக்கும்... 

எத்தனை நிரப்பினாலும் 
காற்று கழன்றோடும் 
ஓட்டை பலூனைப் போல 
கனம் கொள்ளாத மனம் 
தட்டையாகவே இருக்கும்!

கர்வம், 
ஒரு சிட்டிகையும் ஏறாது! 

அகிம்சை 
உயிரின் இயல்பாகிவிடும்!

சதா அலையடிக்கும் மனசு
சில நேரங்களில் 
உள்ளிழுத்துக் கொண்ட கடலாய் 
ஊமையாகும்! 

தத்துவம் அறிந்தும் 
அதனைச் சாதனை என்று எண்ணாத 
சாதாரண ஞானியாய், 

அத்தனை உணர்ச்சியையும் 
புதிதாய்த் தரிசிக்கும் குழந்தையாய், 

நடித்தலை உடல் மேல் 
பூசிக் கொள்ள தேவையற்ற 
ரகசிய பார்வையாளாய்,

வாழும் கணங்களை 
வசந்தத்தோடு பிணைத்துக்கொண்டு 
வாழ முடியும்! 

இந்தச் சொர்க்கத்தை எல்லாம் 
ஒருகணம் அனுபவித்துப் பாருங்கள்! 

மறதிக்கார பட்டம் 
மணி மகுடமாகும்! 
மறந்துபோகும் பொழுதுகள் 
மகா உன்னதமாகும், 

தேசிய வியாதி உள்ளவர்கள் பட்டியலில் 
நீங்களும் இணைந்து கொள்ளலாம் 

நான் 
அப்படித்தான் வாழ்கிறேன்
நாள்தோறும், 
கணந்தோறும், 
விட்டால் யுகந்தோறுமும் அப்படியே 

ஆமாம், 
நாம் என்ன பேசிக் கொண்டிருந்தோம்!??? 

-விவேக்பாரதி
19-10-2021

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி

கவிதை ஆண்டாள் - 1