வாழ்க்கை இதுதானோ?ஆழ்நினைவில் இருட்குழியில் துளியாய் விழுந்தோம்,
   அறிவுவர உருவம்வர மெதுவாய் வளர்ந்தோம்,
வீழ்கையிலே வீல்வீலென் றழுதே விழுந்தோம்,
   வீற்றிருந்து நேற்றிருந்த தன்மை மறந்தோம்,
 
சொந்தங்கள் பந்தங்கள் சூழ்ந்தே வளர்ந்தோம்,
   சுறுசுறுப்பு சேர்கையிலே அச்சம் துறந்தோம்
சிந்தனைகள் மெருகேறத் தானாய்ப் பயின்றோம்,
   சிலபலவாய் உணர்வலைகள் நீந்திக் கடந்தோம்,

வந்தவையும் சென்றவையும் எல்லாம் அறிந்தோம்,
   வாசலுக்கு வாசல்வரும் மாற்றந் தெளிந்தோம்,
எந்தவித பேதமுமே இல்லாது ழைத்தோம்,
   எப்படியோ ஒருபொழுதில் அயர்வைப் பிடித்தோம்,
 
இடையில்வரும் எதனோடோ நம்மை இணைத்தோம்,
   அதுநாம்தான் நாமதுதான் என்றே நிறைத்தோம்,
உடைமையெனும் ஒன்றிற்காய் ஓடிக் களைத்தோம்,
   ஒருவயதில் அமைத்திக்காய் எல்லாம் முடித்தோம்,

நடைமுடிந்து நிற்கின்ற நேரம் நெருங்க 
   நல்லபொழு தாயமைய நாமும் நினைக்க
எடைதீரும் மேகம்போல் வாழத் துடிப்போம்
   இதுதானே வாழ்வென்னும் பாடம் படிப்போம்!!

-விவேக்பாரதி 
17-05-2019 

Comments

Popular Posts