காணாமல் போகும் நான்


கவிதைகள் உருவாகும் பொழுதில் எல்லாம் 
காணாமல் போகின்றேன் நானும் மெல்ல! 
புவிதைக்கும் அழுத்தங்கள் ஏதும் என்னுள் 
புகுவதில்லை, காற்றோடு துகளாய் மாறிச் 
செவிதைக்கும் சொல்லாகிச் சேர்கின்றேன் நான்!
தெரிந்தவரும் வியப்பார்கள், கவிதை என்னும் 
தவத்துக்கு நான்வாழ்க்கைப் பட்ட பின்னர் 
தனியான மாயசக்தி வேண்டுமா சொல்!

மலையருவி பாடுகையில் தண்ணீர் ஆவேன்
மாமரத்தில் கனியாகி ஆடல் காண்பேன்! 
அலையழகைப் பாடுகையில் கரையாய் ஆகி,
அதிலாழ்ந்தும் எழுகின்ற சிப்பி ஆவேன்! 
சிலைவனப்பு பாடும்போழ்(து) உளியாவேன் நான்
சிங்கத்தைப் பாடுகையில் பிடறிக் காற்று
விலையுள்ள பொருட்களைநான் எழுதும் போதும் 
விரைந்ததிலே கரைகின்ற உள்ளம் கொண்டேன்! 

பின்னெதற்கு மறையுமொரு சக்தி வேண்டும்? 
பிழைக்கின்ற சொல்வழியே எனது மாயம்! 
முன்னவர்கள் பலரின்னும் வாழும் யுக்தி
முறைவைத்துக் கற்பிக்க இயலாச் சித்தி
தன்னிறைவின் அண்டத்தில் துளிகள் ஆகி
சல்லிசல்லியாய் நொறுங்கிப் பொடியும் ஆகி
என்னிறையும் நானுமெனக் கலந்து போவோம்
எழுத்தொடு நான்மறைந்து தோன்றி நிற்பேன்!

கண்விட்டு மறைவதுதான் மறைவா? இந்தக் 
காலத்தை விட்டகல்தல் மறைவா? வாழும் 
மண்விட்டு மறைவதொரு மறைவா? அன்பு 
மனம்விட்டு மறைவெதன்ன மறைவா? என்னை 
பண்தொட்ட நொடியினிலே நெருப்பு தொட்ட 
பஞ்சாகிச் சாம்பலின்றி மறைந்து சென்று
விண்தொட்டு மறுகணமே வீதி தொட்டு
மீண்டிருப்பேன் என்மாயம் புதுமை அன்றோ!! 

விவேக்பாரதி
28-11-2021

Comments

Popular Posts