மேஜை புத்தர்கள்எங்கள் மேஜையில் இருக்கும் 
சிரிப்பு புத்தர்களில் 
ஒருவருக்குக் காது கேட்காது! 
 
மூடிக்கொண்டார்  

அவர் ஏனதைச் செய்தார் என 
யோசிக்கும் போதெல்லாம் 
மற்றவர்கள் சத்தம் 
கொஞ்சம் மந்தமாய்க் காதில் விழும்! 

கண்களை மூடிக்கொண்ட 
சாம்பல் நிற உடை புத்தர் 
கேட்கும் சத்தங்களால்
பயமடைந்து கத்துகிறார்! 

வாயை மூடிக்கொண்ட 
பழுப்பு நிற உடை புத்தர் 
அநியாயக் குரல் கேட்டும் 
வாய் திறவாதிருக்கிறார்! 

எனக்கென்ன என்றமர்ந்த 
காவி நிற புத்தரோ 
கனவுலகில் இருந்துகொண்டு 
சம்பந்தமின்றி ஜே பாடுகிறார்! 

இவர்களின் சத்தம்
எதுவுமே தெரியாத 
அந்த நீல உடை புத்தர் 
காதுகளை மூடியபடி 
ஏதேதோ முனுமுனுக்கிறார்! 

ஐம்புலத் தேர்ச்சி என்பது 
அடக்கி ஆள்வதே அன்றி 
அடக்கி வைப்பதன்று 

காதுகேளாத புத்தரை 
புண்ணியவான் என்று வர்ணித்து 
அருகே சென்றால், 
உலகம் இருக்கும் நிலை அறியாமல் 
அவர் காண்பதே உண்மையென 
பேசிக் கொண்டிருக்கிறார்! 

என்னவோ 
அதுதான் மற்றவர்களைவிட 
ஆபத்தானதாகத் தெரிகிறது! 

இவர்களோடு புழுதியளைந்த களேபரத்தில் 
ஒருகணம் நானும்கூட புத்தனோ என்று 
வியந்துவிட்டேன்!
ஒருவேளை ஆனால், 
கைகளைக் கூட கட்டாத 
சுதந்திர புத்தனாக விழைகிறேன்! 

புத்தர்களுக்கு 
அவ்வளவு சுதந்திரம் கிடையாது! 

இப்போது புத்தர்களைவிட 
சித்தார்த்தன்கள் அவசியமாகிறார்கள்! 

- விவேக்பாரதி
17.12.2021

Comments

Popular Posts