சரித்திரத் தேர்ச்சி கொள்


வந்தவர் நின்றவர் சென்றவர் எத்தனை 
வாழ்ந்தவர் எத்தனை சொல்லுகடீ - இன்னும் 
வாழ்பவர் யாரெனச் சொல்லுங்கடீ - உயிர் 
தந்தவர் எத்தனை நொந்தவர் எத்தனை 
சரித்திரத் தேர்ச்சி கொள்ளுங்கடீ - எது 
சரியெனக் கண்டுதான் சொல்லுங்கடீ 

முன்னம் இருந்தவர் முற்றும் வளர்ந்தவர் 
முழுமை அறிவு பெற்றவராம் - ஞான 
முதிர்ச்சி நிலையை உற்றவராம் - வந்து 
பின்னம் இணைந்தவர் பின்னம் புரிந்ததில் 
பிழைத்த தெதுவும் இல்லையடீ - அந்தப் 
பிழையில் வந்தது தொல்லையடீ 

ஆண்ட பரம்பரை என்றுரைப்பார் அவர் 
ஆண்டது மண்ணா மனங்களையா? - இல்லை 
ஆற்றிய போரின் பிணங்களையா? - புகழ் 
கொண்ட பரம்பரை என்றுரைப்பார் சிலர் 
கொடுத்துச் சென்றது கோடியடி - பலர் 
குரைத்துக் கிடக்கும் பேடியடீ 

பொன்விளை பூமியில் மண்ணும் மலடெனப் 
போட்டது யாரடி முள்விதையை - நிஜ
போக்கில் அறிக அதன்கதையை - இங்கு 
தன்விளை யாட்டுக்கு நாட்டை வளைக்கிற 
தலைமை வந்த கதையென்னடீ - அந்த
தகைமை கண்ட விலையென்னடீ 

யாவும் உணர்ந்திட ஆழ்ந்து படிக்கணும் 
யாருக்கும் யாவும் சமவுரிமை - இங்கும் 
யாவர்க்கும் உண்டு பொதுவுடமை - உள்ள 
நோவுக்கு நல்ல மருந்து கிடைத்திட 
தேடிச் சரித்திரத் தேர்ச்சிகொள்ளு!!

-விவேக்பாரதி
11-12-21

Comments

Popular Posts