சீக்கிரம் வந்தால்....

தம்பி, கவிஞர் வெ.விஜய் கொடுத்த ஈற்றடிக்கு எழுதிய வெண்பாக்கள்.  

தலைவனை எண்ணிக் காத்திருக்கும் தலைவி 


மாமன் நினைப்போடே மாதம் கழிக்கின்றேன் 
காமன் கணைபட்டுக் காய்கின்றேன் - சாமத்தில் 
பேய்க்கனா கண்டு புரள்கின்றேன்! காதலன் 
சீக்கிரம் வந்தால் சிறப்பு!

திருமணத்துக்காகக் காத்திருக்கும் தலைவன் 
கன்னி பெயராகக் காத்திருந்து நோகின்றேன்!
வண்ணக் கரம்கோக்க வாழ்கின்றேன் - பெண்மையின் 
பூக்கரம் பற்றிப் புகழ்பெறக் கல்யாணம் 
சீக்கிரம் வந்தால் சிறப்பு! 

பட்டிணத்தடிகள் 


இதயத்துக் குள்ளே இறைகண்டு கொண்டேன்
சதையெத்துக் கென்றே சலித்தேன் -  விதியென்னும் 
பேய்க்கரும்பு தித்தித்துப் பேறுதரும் நன்னாள்தான்
சிக்கிரம் வந்தால் சிறப்பு!

மழைக்குக் காத்திருக்கும் உழவன் 


காய்ந்த வயல்வெளியால் கண்களிலே நீர்பெருக 
ஓய்ந்து வலியாலே உள்நொந்தேன் - சாய்ந்தநெல் 
தீக்கிரை யாகுமுன் தீரா முகில்மழை
சீக்கிரம் வந்தால் சிறப்பு!

மரணத்திற்குக் காத்திருக்கும் முதுமை


நோய்வந்து நச்சரிக்க நோவில் உடல்கொதிக்க 
வாய்வந்து பேசா வரிகுளறப் - பாய்வெந்து 
யாக்கைகிடக் காமல் யமன்கொண்டு போகும்நாள் 
சீக்கிரம் வந்தால் சிறப்பு! 

சம்பளத்துக்குக் காத்திருக்கும் குடும்பஸ்தன்


காலண்டர் தேய்வதுபோல் காசும் உருத்தேய்ந்து
நூலன்ன நிற்குதடி நோவுதரக் - பாலுக்கும்
போக்கிடம் தேடிப் புழுங்காமல்! சம்பளமும் 
சீக்கிரம் வந்தால் சிறப்பு!

கைக்காசுக்குக் காத்திருக்கும் இளைஞன் 


மாதக் கடைசி வழிச்சருகாய் நாமானோம்
ஏது சுகம்?நீ எழுந்திந்திருடா - போதையினி
டீக்கடையே நாதியாகித் தீர்த்திருப்போம்! கைக்காசு 
சீக்கிரம் வந்தால் சிறப்பு!  

விடுமுறைக்குக் காத்திருக்கும் மாணவன்


தேர்வு நெருங்கிவந்து தின்னுதம்மா! பாடங்கள்
சோர்வுதரும் அன்றி சுகமில்லை - தீர்வென்ன 
பாக்கியின்றி லூட்டியிட்டுப் பாயும் விடுமுறைதான் 
சீக்கிரம் வந்தால் சிறப்பு! 

விடுதலைக்குக் காத்திருக்கும் போர்வீரன்


வெள்ளையன் போட்ட விலங்குக் கடங்காமல் 
துள்ளி எழுந்தோம், தொடர்ந்திருப்போம் - கொள்ளையாம் 
தூக்கத்தை நீக்கித் துளிர்க்கும் விடுதலைநாள் 
சீக்கிரம் வந்தால் சிறப்பு!

பொதுவுடமைக்குக் காத்திருக்கும் போராளி


சாதிமதம் சொல்லி சறுக்கி விடும்கூட்டம் 
ஆதிவழி நின்ற அறிவுணர்ந்து - மேதினியில்
வாக்குரிமை மூச்சுரிமை வாழுரிமை ஒன்றெனும்நாள், 
சீக்கிரம் வந்தால் சிறப்பு!!

-விவேக்பாரதி
21-12-2021

Comments

Popular Posts