என் இசை கேளுங்கள்


என்னிசை கேளுங்கள் - அது
இன்பத் தனிதியானம் 
புன்னகை தாருங்கள் - கதை 
புரிந்த மறுநிமிடம்!

வாழ்த்திசை எனதாகும் - நல்ல 
வார்த்தைகள் அதிலதிகம் 
தாழ்த்தி இசைக்காதீர் - அது 
தர்மத்தின் இசையாகும்!

மங்கள இசையெனது - அதில் 
மனிதர்களே கடவுள் 
பொங்கிடும் உற்சாகம் - நான்
பூஜை செய்யும் மதம்

மெல்லிசை அதுவானால் - உமை 
மென்மை மலராக்கும் 
வல்லிசை ஆனாலோ - உங்கள் 
வாழ்க்கையைக் கல்லாக்கும் 

துள்ளிசையும் வரலாம் - உங்கள் 
தூக்கம் தடைபடலாம் 
உள்ளிசையாக வரும் - சில,இவ்
ஊரிசை ஆகவரும் 

எவ்விசை என்றாலும் - அதில்
இலங்குவ(து) என்சுருதி 
செவ்விசையாய் வருமே - இந்த 
ஜகத்தின் நலன்கருதி 

மரண இசைதருவேன் - அதில் 
மரித்தவர் புகழடைவார் 
சரண இசைபடைத்தால் - இறை 
தரிசனம் அதிலிருக்கும் 

படைக்கும் இசையெனது - எனில் 
படைப்பவன் நானல்ல 
கொடுக்கும் இயற்கையொன்றே - நான் 
கும்பிடும் இறையாகும்

இசைக்கும் கருவிகளை - என் 
இதயம் சுமப்பதனால் 
அசைக்கும் மூச்சினிலும் - இசை 
ஆடிப் பிறக்கிறது! 

வரம்பே இல்லாமல் - இசை
வாழ்வாய் அமைகையிலே 
மரபும் புதுமையும்தான் - இந்த 
மண்ணில் உயிர்க்கிறது

கணக்கு தெரிவதில்லை - நான் 
காற்றில் படைக்குமிசை 
மனத்துக் குளத்தினிலே - அவை 
மண்டும் உணர்வினலை

பிறந்த(து) இசைப்பதற்கே - நான் 
பிழைப்பதும் இசைப்பதற்கே
பறப்பதும் இசையாலே - என் 
பாடல்கள் உங்களுக்கே!! 

-விவேக்பாரதி
22-12-21

Comments

Popular Posts