Posts

Showing posts from 2022

வண்ணக் கனா படைத்தாய் வைரமுத்து!

Image
கவிப்பேரரசு வைரமுத்து அண்மையில் வெளியிட்டுள்ள கனாக் கண்டேன் பாடல் கேட்டேன். கண்ணன் எழுதும் காதல் கவிதை என்ற தலைப்பே உள்ளே நுழைய வைத்தது. பழைய மரபில் கால் ஆழமாக வேரூன்றியவர் அவர் என்பது, இந்தப் பாடலிலும், இதற்கு முன்னதாக கொண்டல் மேகம் ரெண்டு என்ற பாடலிலும் வெட்ட வெளிச்சமாகிறது.  கொண்டல் மேகம் ரெண்டு பாடல், அண்ணாமலையார் காவடிச் சிந்து வகையைச் சார்ந்தது.  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த அம்பிகாபதி படத்தில் கூட அந்தமேவும் அரவிந்த மாமலரில் வந்த வேத வல்லியாள் என்று நடையிலேயே துள்ள வைக்கும் பாடல் உண்டு. இது அதே சந்தம். அதனை சங்கர் மகாதேவனின் குரலிலும், தவிலும் நாதஸ்வரமும் துள்ளும் இசையிலும் நம்மை ஆட வைத்திருப்பார்கள். அதன் தாக்கமே தினசரி கேட்கும் பாடலாக மாற்றியுள்ள நிலையில், தற்போது கனாக்கண்டேன் வெளியாகி கொள்ளை கொண்டுள்ளது.  https://www.youtube.com/watch?v=h99r2UoR1go  https://www.youtube.com/watch?v=agZXNt8rbJI  ஆண்டாள் எழுதியதுபோலவே கலிப்பா வகையில் களிப்பாக அமைந்திருக்கிறது பாடல். அணில் ஸ்ரீநிவாசன் இசையில், ஹரிசரன் உயிரையே உருக்கி குரலாய்க் கொடுத்திருக்க, ஒவ்வொரு துளியும் ஆயிரம் தடா நெய்

அம்மா என்னும் பேரரண்

Image
இருப்பை வாழ்த்தும் இதயம் நீ - உன்  இசையில் ராகம் நான்  கருப்பை சுமந்த கடவுள் நீ - உன்  கண்முன் தேவதை நான்  விருப்பை பொழிந்த மேகம் நீ - சிறு விதை உன் சாயல் நான்  நெருப்பில் வடித்த நீர்மை நீ - உன்  நிழலில் சிறு புல் நான்  அகத்துக் கோயில் விளக்கும் நீ - அதன்  அடியில் பூ இதழ் நான்  முகத்தில் புதிரின் முறுவல் நீ - உன்  முதுகில் பெருஞ்சுமை நான்  சுகத்தை சேர்க்கும் சுகந்தம் நீ - அதன்  சுடரில் ஒளிர் மதி நான்  யுகத்தில் காணா நேர்மை நீ - அதன்  உறுதியில் சுழல்கோள் நான் அம்மா என்றன் பேரரண் நீ - அதை  அறியா அரசே நான்  இம்மா உலகின் ஆதியும் நீ - வெறும் இருட்டில் மிரள் மனம் நான்  எம்மா நிலைகள் அடைந்தாலும் - மிக எளிமை பூண் நிலவே  சிம்மா சனமே தாய்மடியே - உன்  சீர் தொழும் அடிமை நான் - அதனால் சீர் பெறும் பொம்மை நான்!! -விவேக்பாரதி 08-05-2022

ஒரு பிடி சுயபார்வை

Image
தாவிக்   கொண்டே   இருக்கின்றேன்   நான் தங்கும்   பீடம்   எங்குவரும் ? தத்தித்   தத்திப்   போகும்   வாழ்வில்   தரைவிட்   டுயர்தல்   என்றுவரும் ? கூவிக்   கூவிக்   கேட்கின்றேன்   எனைக் கூட்டிச்   செல்லும்   கைகளெது ? கூட்டம்   நடுவில்   தொலைந்திடாமல் கூடித்   தொடரும்   கால்களெது ? முடியும்   புள்ளி   தெரியாமல்   நான்   முயன்று   போகும்   பயணமிதில் முள்குத்தாமை   கேட்டிடவில்லை   முதுகில்   தட்டும்   கைவேண்டும்   விடியும்   என்றே   எதிர்பார்த்து   நான்   விழித்துக்   கடக்கும்   பொழுதுகளில் விளக்கைக்   கூட   கேட்டிடவில்லை   வியப்புக்   கனவின்   சுவைவேண்டும் !  தூரம்   தெரியத்   தேவை   இல்லை துணைக்கென்   றொருவர்   கரம்வேண்டும் துவளும்   போதில்   சிரித்தாலும்   எனைத் தோளில்   சாய்க்கும்   மனம்வேண்டும்   பாரம்   போன்ற   எதிர்பார்ப்பும் ,  சிறு   பாசம்   என்ற   கைவிலங்கும்   பற்றாமல்   ஒரு   மெய்யுறவு   தினம் பக்கம்   இருக்கும்   வரம்வேண்டும் !! -விவேக்பாரதி 01-05-2022

உயிர்த்தெழுந்தவர்

Image
ஒவ்வொரு ஞாயிறும்  என் வருகையை நோக்கி   காத்திருக்கும் ஆண்டவரிடம்  விடுப்பு கேட்க நினைத்தேன்! என்ன காரணம் சொல்லலாம் என் விரல்களைக் கேட்டேன் “உடம்பு சரியில்ல ஆண்டவரே” என ஆள்காட்டி விரல் சோம்பல் முறித்தது!  அதற்குப் பரிசுத்த ரத்தத்தைப் பரிசளித்துவிடுவாரே என்றேன்!  “மனசுன்னு சொல்வோமா?” நடுவிரல் நக்கலடித்தது பாவ மன்னிப்புக் கூண்டில் அவர்தானே இருக்கிறார் என்றேன்!   ”தூங்கிட்டேன்ன்னு?” மோதிர விரலின் கேள்விக்கு முறைப்பையே பதிலாக்கி  சோம்பலைக் கடந்தேன்!  “அலுவலக வேலை?” சுண்டுவிரல் சொன்னதற்கு சரி எனத் தலை அசைக்கையில்,  அனைத்தையும் பார்த்த பெருவிரல், வழிமாறிவிட்டதாகச்  சொல்லிப் பார்க்கச் சொன்னது, அதையே மனமாறச் சொல்லி நூலகம் ஒன்றினுக்குள் நுழைந்தேன், பிடித்த கவிதைப் புத்தகத்தின்  பக்கம் திருப்பி  முதல்வரி வாசிக்கையில்  அருகில் அமர்ந்து கேட்டிருந்தார்  உயிர்த்தெழுந்தவர்!! -விவேக்பாரதி 17-04-2022

அழகருக்கு விண்ணப்பம்

Image
. மதுரையில், அழகர் ஆற்றில் இறங்குவதைப் பார்க்கப் போவதாய்ச் சொன்ன தோழி, வேண்டுதல் இருக்கா எனக் கேட்க, அனுப்பி வைத்த விண்ணப்பங்கள். அவ்ளோதான, அப்றம் எனக் கேட்க கேட்க 11 பாடல்களாக அடுத்தடுத்து வந்த பரவசப் பதிவு அப்படியே!  குதிரையின் மீதேறி கொண்டாட்ட உருவாகி  கோயில்கள் சுற்றும் அழகா  மதுரையின் நாயகா மங்கையர் நெஞ்சத்தில்  மையல்நோய் செய்யும் தலைவா  நதியிலே இறங்கிநீ நீராடும் வேளையில்  நல்மனம் குளிர்வதைப் போல்  விதியெனும் கடல்மீது விளையாடும் மக்கட்கும்  மனநலம் அருளுவாயே! தங்கத்துத் தேரிலே பல்லக்கில் தோளிலே  தரையளந் துருளும் அழகா  மங்களக் கல்யாண நிகழ்ச்சிக்கு வழிதேடி  மதுரையில் அலையும் தமையா  பொங்கிடும் வையையில் உன்தலை நனைகையில்  பொழில்குளிர் அடைவதைப் போல் எங்கெங்கும் சுற்றியே காண்கின்ற மக்கட்கும்  இதக்குளிர் அருளுவாயே..! மண்டகப் படிகளும் பக்தர்கள் சுற்றமும்  வளமான புடை சூழவும்  பெண்டகை லட்சுமி மார்பினில் தூங்கவும்  பெருமாட்டி மனம் கொள்ளவும்  உண்டகை கழுவிட அரக்கன்கை வைத்ததால்  உருவான நதியில் நனைவாய்  தண்டனை என்னவே புவிவாழும் மக்கட்கு  தண்ணிதம் அருளுவாயே..!  நாற்புரம் பக்தர்கள் சூழ்ந்திருக்க வைய

நானொரு பூமர்

Image
துப்பட்டாவை  சரி செய்யச் சொல்லும் பூமருக்குப் பின்னால் தன்னைக் கட்டுப்படுத்த முடியாத ஓர் ஆண்தான் ஒளிந்துகொண்டிருக்கிறான்! அறிவுரை சொல்லி விரிவுரை ஆற்றும் ஒவ்வொரு பூமருக்குக்கும் அதை மட்டுமே கேட்டு வளர்ந்த வரலாறு மட்டுமே உண்டு!  பல் இளித்து ஜொள் ஊற்றி,  வசனம் பொறுக்கி வந்து கவிதை பேசும் பூமர்  சிங்கிள் நிலையில் பார்க்கப்படாத ஒரு பருவத்தின் மிச்ச எச்சம்!  எந்த பூமரும் அவசியம் இன்றி, இப்போதும் தன் நெடு நேரத்தை ஸ்வைப் செய்தே கழிப்பதில்லை வெளியில் சுற்ற  அதிகம் யோசித்துக்  காசுகளின் கணக்கை  விரல்களில் எண்ணும் நபருக்கு பூமர் என்றுதான்  பெயர்வைக்கிறார்கள்!  வீண் சவடாலையும்  சண்டையையும் தவிர்ப்பவனை முன்னர் சாம்பார் என்ற சமூகம் இன்று பூமர் என்கிறது!  பொத்தவும் முடியாமல்,  காலத்துக்கேற்ப கத்தவும் முடியாமல் ஒரு பூமர் அடையும் அழுத்தம் கடலினும் பெரிது!  அடக்குமுறையை ஆபத்து என்பீர்களா? அவன் இயல்பைப் பார்க்காமல் சதா பூமர் பூமர் என  அவனை நீங்கள் குத்தும் ஊசிகள் அவனுக்குள் ஏவுகணை ஆகும் அடக்குமுறையை என்ன சொல்வது? ஒரு பூமர் இன்னும் நிம்மதியாகத் தூங்குகிறான்! பாடல்களை தவரவிறக்கித்தான் கேட்கிறான்! கே டிவி

இளமைத் திருவிழா - எராட்டிகா

Image
அண்மையில், (எழுதத் தொடங்கும்போது இப்படித்தான் ஆரம்பித்தேன். ஆனால், நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது)   சென்னை ஆர்ட் தியேட்டரின் தயாரிப்பான எராட்டிகா நாடகத்தின் நான்காம் பகுதியை நண்பர்களுடன் பார்க்கச் சென்றிருந்தேன். முன்னம் இருந்த மூன்று பகுதிகளையும் பார்த்துக் களித்தவன் என்ற முறையில், நண்பர்களுக்கு புத்தம் புதிய அனுபவத்தை உண்டாக்குவதாக உறுதி அளித்தே அழைத்துச் சென்றிருந்தேன். அதை நாடகக் குழுவினர் காப்பாற்றினார்கள். ஓரினச் சேர்க்கையாளர்களையும், மூன்றாம் பாலினத்தவரையும் மையப்படுத்தி உருவாக்கப்பட்ட நான்கு நாடகங்கள், புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநருமான ஏ.பி.நாகராஜனின் மேடை அரங்கத்தில் அரங்கேற்றப்பட்டது. நான்கும் நான்கு ரகம். நான்கும் நான்கு தரம்.  ஆரம்பத்திலேயே பார்வையாளர்களின் மனங்களை மொத்தமாய்க் கொள்ளையிடும் வகையில், பழமையும் புதுமையும் நிறைந்த நாடகம் காட்டப்பட்டது. ஷேக்ஸ்பியரையும், நெட்பிளிக்ஸையும் ஒன்றிணைத்த விதமும், அந்த “டடம்”  சத்தமும் நாடகத்தைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பார்த்து, கேட்டு, புளிக்காத கதைகளில் கூடுதல் சுவாரஸ்

துயரங்கள் விற்பனைக்கல்ல - பாலு | #நூல்நோக்கம்

Image
பாலு வும் பிரியமுமாய் நிறைந்து, 140 பக்கங்களில் 14 கதைகளைத் தாங்கிய ‘துயரங்கள் விற்பனைக்கல்ல’ புத்தகம் கையில் வந்து சேர்ந்தது. உள்ளிருக்கும் ஒவ்வொரு கதையுடனும் கூடுமான அளவு சஞ்சரித்து, சிலாகித்துக் கதைக்குக் கதை தேவைப்பட்ட அவகாசங்களை எடுத்துக் கொண்டு தொகுப்பை நிறைவு செய்தேன். என் தனிமைகளில் துணை செய்தது இந்தப் புத்தகம்.  புத்தகம் வெளியாவதற்கு முன்பே, இதிலுள்ள கதைகளைப் பற்றி பாலு பேஸ்புக்கில் வெளியிட்ட அறிமுக உரைகள், கதைகளைப் படித்தாக வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கியது. அந்த ஆர்வக் கனலுக்கு ஏற்ற சரியான சுள்ளிகளைச் சுமந்துகொண்டுதான் கதைகளும் வந்திருக்கின்றன. அறிமுகங்களைப் படித்துவிட்டு, உறவாடக் காத்திருந்த இந்த வாசகனைக் கதைகள் ஏமாற்றவில்லை.  பாலுவின் எழுத்துகளை ஆரம்பத்தில் இருந்து கவனித்துவரும் நண்பன் என்ற முறையில், அவை இப்போது புனைந்து கொண்டிருக்கும் அழகியலும், முதிர்ச்சியும் மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது. இதோ நான் ரசித்து வாசித்த சில பற்றிய துளிகள்-   உயிர்த்தெழுதல் - நீண்ட நெடுங்கதையாக விரிந்த உயிர்த்தெழுதலின் கதைகளுக்குள் பெரும்பாலும் அனைவரும் தங்களைப் பொறுத்திக் கொள்ள முடியும். இந்

காதல் மனப்பாடப்பகுதி | #நூல்நோக்கம்

Image
ஒரு பயணத்தின் பெரும் சுவட்டில் பல கோடி கவிதைகள் மலர்ந்தும், உதிர்ந்தும் விடுகின்றன. இயந்திர ரயில் பெட்டியோ, பேருந்தோ நம்மை இடம் பெயர்க்கும்போது வரும் களைப்பை, காணாத ஜன்னல் ஓரக் காட்சிகள் மறக்கடிக்கச் செய்கின்றன. இதைத்தான் இலக்கியமும் செய்கிறது. வாழ்க்கைப் பயணத்தில் நமக்கான ஜன்னல்களை திறந்துவைக்க வேண்டிய காரணத்தை வழங்குகிறது.  அப்படி, அண்மையில் சுவைத்த பயணத்தில், ஜன்னல் ஓரத்துடன் நான் தொட்டுக்கொள்ள கிடைத்த கவிதைத் தொகுப்பு - கவிஞர் வைகைச்செல்வனின் காதல் மனப்பாடப்பகுதி.  தேர்ந்த தமிழ் மரபின் பாற்கடலைக் கடைந்தெடுத்த இலக்கியவாதி கவிஞர் வைகைச் செல்வனின் அநாயாசப் படைப்பு இந்தக் கவிதை நூல். அளவிலும், அட்டைப் படத்திலும் வசீகரிக்கும் புத்தகம், தலைப்பின்மூலம் நம்மைப் பள்ளிக் காதலுக்குக் கொண்டு செல்கிறது. மனப்பாடப்பகுதி என்று பெயரிடப் பட்டதாலோ என்னவோ, நிறைய கவிதைகள் பார்த்தவுடன் மனத்தில் பதிந்து, நெட்டுருப்போடத் தேவையின்றி, மனதுக்குள் நீள வேர் பரப்பத் தொடங்குகிறது.  இந்தப் புத்தகம் முழுவதும் கவிஞர் விதைகளை இட்டிருக்கிறார். அது மனதில் ஊன்ற ஊன்ற உடனே விரியும் கிளைக் காட்சிகள் காணக் களிப்பைத் தருகின

காதல் என்பது யாதெனக் கேட்கின்...

Image
உள்ளத்துப் பறவைகள் கூடுகட்டும்       உணர்வென்னும் பெருவானம்! கண்களாலே  கள்ளைத்தான் இருநெஞ்சம் மாற்றி மாற்றிக்       கலந்துண்ணும் வைபோகம்! வெற்றிடத்துப்  பள்ளத்தில் அன்பென்னும் நீரைப் பாய்ச்சிப்       பயிர்செய்யும் விவசாயம்! ஆசை என்னும்  வெள்ளத்தில் சிக்குண்டும் நீந்தக் கற்கும்      வெள்ளந்தித் தனமிந்தக் காதல் ஆகும்!  மேலழகு பார்க்குமொரு காதல் உண்டு       மென்மனத்தின் அழகுக்கும் சேர்வதுண்டு  பாலழகை எண்ணாமல் காதல் உண்டு       பழகியதால் நட்பாகிக் கனிவதுண்டு காலத்தில் யார்கைகள் எங்கே சேரும்       கணக்கின்றி விளையாடும் தாயக்கட்டை!  மூலத்தில் விதைக்குள்ளில் விழுந்த தண்ணீர்       முளைக்கின்ற கணவியப்பு காதல் ஆகும்!  காதல்களை எழுதிடலாம், இசையில் கோத்துக்      கானமென இசைத்திடலாம், பிரம்மாண்டங்கள் பாதைகளில் செய்திடலாம், மௌனம் கூட்டிப்      பத்திரமாய்க் காத்திடலாம், செல்ல ஊடல்  மோதல்கள் வந்திடலாம், முடியும் நேரம்       முத்தத்தின் சுவைபெறலாம், கடவுள் போல பேதங்கள் இல்லாமல் அனைத்தும் ஏற்கும்       பெரியமதம், புதியநிலை காதல் ஆகும்!  மனதுக்கும் மூளைக்கும் தினம் நடக்கும்       மல்யுத்தம் நமையென்றும் இய

திங்கள்... செவ்வாய்... புதன்....

Image
நண்பர்களுடன் காளமேகப்புலவர் பற்றி பேசிக்கொண்டிருக்கையில், ஒன்று முதல் பதினெட்டு வரையிலான எண்களைக் கொண்டே அவர் எழுதிய வெண்பாவை சொல்ல நேர்ந்தது. அதேபோல் வெண்பாவின் பாதியில் பெருமாளின் பத்து அவதாரங்களையும் அவர் பாடியிருப்பார். அவற்றையெல்லாம் பகிர்ந்த பரவசத்தில் வந்த பாக்கள்.... வாரத்தின் ஏழு நாட்களும் ஒரே வெண்பாவில் வருமாறு அமைந்தது.. இறைவாநின் சன்னிதியில் என்றும்நான் கேட்கும்  நிறைவரம் ஒன்றுண்டு நீகேள்! - உறு திங்கள்  செவ்வாய் புதன்வியாழன் வெள்ளிசனி ஞாயி(று) என ஒவ்வொரு நாளும் உதவு! ** வள்ளிமண வாளா வயித்தியநா தாதுயரை எள்ளிநகை யாடும் இயல்கேட்பேன் - உள்ள திங்கள் செவ்வாய் புதன்வியாழன் வெள்ளிசனி ஞாயி(று) என  ஒவ்வொரு நாளும் உழைத்து!! விவேக்பாரதி 25-01-22

மீனாட்சி தரிசனம்

Image
Illustration by SCD Balaji  தீபத்தின் திரிவிண்ணை நோக்கிச் சுடர்ந்தாலும்  திசையாட்டும் காற்றுக் கலையும்  திசைமாற்றும் காற்றுக்கும் முடிவுவரும் வேளையில் திருந்திவிண் நோக்கிச் சுடரும்  ஆபத்தை உணராமல் அதுபோல நானுமென்  ஆசையால் ஆடுகின்றேன்  ஆட்டங்கள் ஓய்கின்ற உனதுசன் னிதிமுன்னம்  அடையாளம் காணுகின்றேன்  தாபத்தை மனதோடு மறைக்கத் தெரிந்தாலும்  சரித்திடத் தெரியவிலையே தர்மத்தின் பாதையினைக் கர்மப் புதர்மறைக்க தகுந்தவழி புரியவிலையே  கோபத்தை நெஞ்சுக்குள் அடக்கத் தெரிந்தாலும்  கொன்றுவிட இயலவிலையே  கொஞ்சுதமிழ் மதுரையில் கோயில்கொண் டாடிடும்  குலதெய்வ மீனாட்சியே!! -விவேக்பாரதி 20-01-2022

விழி எம் தோழா!

Image
ஊரையெலாம் பொய்த்திரையால் உண்மை மறக்கவைத்து,  வேருள்ள(து) என்பதையும் வெற்றாய் மறுத்துரைத்துப்  பேரழிக்கப் பார்ப்பதையும், பேச்சடக்கி வைப்பதையும்,  நேரெதிரில் கண்டும் நெளிந்து கிடப்பாயோ?  கூருடைய வேலர் குலத்திற் பிறந்தவனே! போரறிவும் ஆட்சிசெயும் பேரறிவும் வாய்ந்தவர்தம்  சீரெனவே வந்தவனே! செல்வத் தமிழ்மகனே!  வீரக் கனலே விழியேலோர் எந்தோழா! (1)  நாட்டை அரசாளும் நாடகத்தை செய்பவர்தாம்  வீட்டை அழிக்கும் விளையாட்டும் செய்கின்றார்!  கூட்டைக் கலைத்துக் கொடுவானின் கற்பனையை  மீட்டிவைத்(து) உன்னை மிரட்டி அமிழ்த்துகிறார்!  நீட்டி மடக்கிவைக்க நீயென்ன தார்ப்பாயா? பூட்டி அடக்கநீ பூச்சியா? கண்திறவாய்!  ஊட்டம் அடைவாய்! உயிர்த்தெழுவாய்! தீதையெலாம்  வேட்டும் திறமே விழியேலோர் எந்தோழா! (2) முன்னை வரலாற்றை முற்றும் மடைமாற்றி,   உன்றன் அடையாளம் உள்ளதெலாம் பொய்யாக்கி,  அன்னை மொழிமாற்றி அன்றடிமை செய்ததுபோல்,   இன்னும் அடிமைக்(கு) இயற்றுகிறார் பேய்த்திட்டம்! ஒன்றும் அறியாமல் உள்ளே குறட்டையொடு  சென்ற தலைமுறைக்கும் சேர்த்துத் துயில்வாயோ?  இன்னல் களைய எழுந்திருக்க வேண்டாவோ? மின்னற் சுவையே விழியேலோர் எந்தோழா! (3) யாதும்ந

பூ அவிழும் சமிக்ஞை - நூல்நோக்கம்

Image
அன்புள்ள நண்பர் தரணுக்கு,   கவிதைகளை எதற்காக எழுத வேண்டும்? - அவை  கணங்களுக்கு இறவாமை தருவதாலே!  என்று உற்சாகமாகச் சொல்வார் கவிமாமணி வவேசு. அப்படி இறவாமை பெற்ற கணங்களை எங்கள் கரங்கள் கொண்டாட வைத்தது ‘பூ அவிழும் சமிக்ஞை’ புத்தகம். தங்களுக்கு கிடைத்த அத்தகைய உணர்வுப் பொழுதுகளை வார்த்தைகளில் பதுக்கி வைத்து எங்களுக்கு இளஞ்சூட்டுடன் இறக்கித் தந்திருக்கிறீர்கள். இதற்கு வாழ்த்துகளோடு நன்றியையும் உரித்தாக்குகிறேன். உங்கள் முன்னுரையில் நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல் புத்தகம் முழுக்கவும் அன்பு நிறைந்திருக்கிறது. அது என்னவெல்லாம் செய்தது என்பதை கொஞ்சமாய் எழுதுகிறேன்! நீங்கள் ரசிக்க,  உள்ளிருந்து  அழுதுவிடுவது போல  நம்மால்  அவ்வளவு எளிதாக  உள்ளிருந்து சிரித்துவிட முடிவதில்லை  இது மனதைப் பிசைத்து அடுத்த பக்கத்திற்கு நகரவே 10 நிமிடங்கள் பிடித்தது. நகர்ந்தால் அடுத்த இடத்திலேயே அடையாளங்கள் குறித்த தெளிவைச் சொன்னது இந்த வரிகள்  நாம் யார் என்பதை  சொல்ல  நம்  ஒற்றைப் புன்னகையே போதுமாய் இருக்கிறது! 16 ஆம் பக்கத்தில் இருக்கும் தூவல் கவிதையைப் படித்துக் கடந்த நொடியில், அந்தக் குளத்தில் என் மனமும் கொஞ்சம் த