பூ அவிழும் சமிக்ஞை - நூல்நோக்கம்


அன்புள்ள நண்பர் தரணுக்கு,  

கவிதைகளை எதற்காக எழுத வேண்டும்? - அவை 

கணங்களுக்கு இறவாமை தருவதாலே! 


என்று உற்சாகமாகச் சொல்வார் கவிமாமணி வவேசு. அப்படி இறவாமை பெற்ற கணங்களை எங்கள் கரங்கள் கொண்டாட வைத்தது ‘பூ அவிழும் சமிக்ஞை’ புத்தகம். தங்களுக்கு கிடைத்த அத்தகைய உணர்வுப் பொழுதுகளை வார்த்தைகளில் பதுக்கி வைத்து எங்களுக்கு இளஞ்சூட்டுடன் இறக்கித் தந்திருக்கிறீர்கள். இதற்கு வாழ்த்துகளோடு நன்றியையும் உரித்தாக்குகிறேன்.


உங்கள் முன்னுரையில் நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல் புத்தகம் முழுக்கவும் அன்பு நிறைந்திருக்கிறது. அது என்னவெல்லாம் செய்தது என்பதை கொஞ்சமாய் எழுதுகிறேன்! நீங்கள் ரசிக்க, 


உள்ளிருந்து 

அழுதுவிடுவது போல 

நம்மால் 

அவ்வளவு எளிதாக 

உள்ளிருந்து சிரித்துவிட முடிவதில்லை 


இது மனதைப் பிசைத்து அடுத்த பக்கத்திற்கு நகரவே 10 நிமிடங்கள் பிடித்தது.


நகர்ந்தால் அடுத்த இடத்திலேயே அடையாளங்கள் குறித்த தெளிவைச் சொன்னது இந்த வரிகள் 


நாம் யார் என்பதை 

சொல்ல 

நம் 

ஒற்றைப் புன்னகையே

போதுமாய் இருக்கிறது!


16 ஆம் பக்கத்தில் இருக்கும் தூவல் கவிதையைப் படித்துக் கடந்த நொடியில், அந்தக் குளத்தில் என் மனமும் கொஞ்சம் தூவப்பட்டிருப்பதாக தோன்றியது! கைகளில் அந்த பச்சை மீன் வாசம் அடித்தது. கிணற்றில் விழுந்த நிலா, பழைய மெட்டுக்குப் புது பல்லவி போல் இசைத்தது. 


கண்ணாடி பார்க்கும் பொழுதெல்லாம் 

என்னிலிருந்து எழுந்து 

எதிரில் நிற்கிறது 

என்னிலிருக்கும் நான்! 


அத்வைத சிந்தனையின்பால் அதிகம் ஈர்ப்பு கொண்டதால் எனக்கு இது கண்ணாடியில் சுந்தரனாய்த் தன்னைக் கண்ட சிவபெருமானை கண்முன் காட்டியது! எழுதியவர் பெயர் என்ன? ஓ! கங்காதரன்... 


ஒரு நல்லிரவுக்காக 

கருத்த இருளை 

அள்ளி வந்து 

என் அறையெங்கும் 

நிரப்பி வைக்கிறேன் 

கொஞ்ச நேரத்திற்குள்ளாக  

இருள் 

மெல்ல மெல்ல 

வெளிச்சத்தைச் சொட்டுகிறது! 


தெரிந்தோ தெரியாமலோ, புத்தகத்தை வாங்கி வந்த இரவை நான் இந்தக் கவிதையுடன்தான் சந்தித்தேன். அந்த வெளிச்சத்தைச் சொட்டும் இருள், என்னுடைய கனவு சொட்டும் நேரம் கவிதையை நினைவுப்படுத்தியது. (கவிதை - கனவு சொட்டும் நேரம் (vivekbharathi.com)


இயக்குநர் சசி குறிப்பிட்டதுபோல் பகலை கொண்டு போய் இமைகள் இரவில் கலப்பது என்கிற கவிதை ஒரு Visual Treat ஆகவே இருந்தது. சந்திப்பு என்ற கவிதையில், “பகலிரவின் சந்திப்பே மாலையாகும்” (சந்திப்பு (vivekbharathi.com))  என்று நான் எழுதியதும் நினைவுக்கு வந்தது...  


37 ஆம் பக்கத்தில் உள்ள பொறாமையின் துகில் மொத்தமும், அனுபவக் கடலில் அள்ளிக் கோத்த முத்துகள். சீவச் சீவக் கொம்பு முளைத்துக்கொண்டே இருக்கும் பொறாமைக்குப் பக்கத்து வீட்டுக்காரர் பெயர் இருப்பது எனக்கு மிகவும் நியாயமாகவே படுகிறது. அதேபோல் இன்னொருவர் காதருகே வாய் வைத்திருக்கும் பொறாமையின் போலியான சிரிப்பை படித்துக் கடக்கையில் நன்றாகவே உணர முடிந்தது. 


42 ஆம் பக்கத்தில் விவேகானந்தரின் சித்தாந்தமே வேறு வகையில் புலப்பட்டது. வள்ளலாரின் மரபையும் தரன் கைக்கொண்டவர் என்பது தெளிவாயிற்று. கொஞ்சமாய் பசிக்கவும் செய்தது! - அது ஞானப்பசி. 


49 ஆம் பக்கத்தில் காட்டின் நகர்வைக் காட்டிய வரிகள் அபாரம். பெருமிதம் என்ற தலைப்புக்கான கவிதையாய் இதற்கு நூற்றுக்கு நூறு தரவே தோன்றுகிறது! 


அச்சம் பகுதியில் நீங்கள் சொல்லியிருப்பதுபோல் மண்டையில் ஒரு ரயில் கால இடைவெளியின்றி எனக்குள்ளும் ஓடிக் கொண்டிருக்கிறது. வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் என்பதால் அதன் அனுபவங்களை தனிப்பட்ட முறையில் பகிர்ந்துகொள்ளவும்! ஒரு மருத்துவ ஆலோசனையைப் போல்…  (அதுவும் கவிதையாய் இருப்பின் பரவசம் கொள்வேன்)


58 ஆம் பக்கத்தில் இருக்கும் ‘ம்’ பேசுவதை நேசிக்கும் அநேகமானோர் யாசிக்கும் செல்வம். (தமக்கு இம்மென்னும் முன்னே இருநூறு பேசும் செல்வம் கிடைத்துள்ளதால் அந்தக் கவிதை எங்களுக்கானதாய் மட்டும் எடுத்துக் கொள்கிறோம்.. ஹாஹா) 


கொஞ்சம் வேகமாக ஓடுகிறேன்… அடுத்து 72 ஆம் பக்கம். கண்களில் வழிந்தோடும் கண்ணீரில் வடிவில் கடவுள் உருண்ட உருவகம் அபாரம். விரைவில் இத்தனை உயிரோட்டமுள்ள வரியை திரைப்பாடல் வழியே அனைவரும் பாடும் வாய்ப்பு கிடைக்க வாழ்த்துகிறேன்…


துரோகத்தின் எக்ஸ்ரே நிதர்சனம். 83 ஆம் பக்கத்தில் குழந்தை வரைந்த இரண்டு ஓவியங்களும் தெய்வக் குழந்தைகள் படைப்பில் மானுட வியப்பென்றே சொல்லத் தோன்றுகிறது. சில நாட்களுக்கு முன் இனி வளர்க்கப்போகும் நாய்க்கு சங்கிலி பூட்டுவதில்லை என்று நான் மனதார உறுதிமொழி எடுத்துக் கொண்டதன் நினைவு வந்து, என் குழந்தைத்தனத்தையும் இறைமையும் உறுதிப்படுத்தியது. 


கவிதை எழுதும், ஏன் எழுதும் இன்றைய இளைய கரங்கள் அடிப்படை இலக்கணத்தில் அடிக்கடி சறுக்குவது எனக்கு அளவு கடந்த கவலையையும், ஆதங்கத்தையும் வரவழைக்கிறது. அந்த வகையில் பார்த்தால் பூ அவிழும் சமிக்ஞை, இன்றைய கவிஞரில் பண்பட்ட ஒருவரது படைப்பாக, துமியளவு இலக்கணப் பிழைகளுடன் மட்டுமே தென்பட்டது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. நவீனத்துவ சிந்தனைகளை மரபில் வேரூன்றிய ஒருவர் எழுதுவதாக உங்கள் பார்வையை நான் உணர்கிறேன். நிறைய உருவகங்கள் பொதிந்த கவிதை வரிகள் அதற்கு உதாரணமாக இருக்கின்றன. மேலும், யதார்த்தம் உங்கள் கவிதைகளின் அடிநாதமாக இருப்பதால் ஒரு கடற்கரை தென்றலைப் போல் எந்தவொரு அந்நியத்தனமும் இல்லாமல் இயல்பாய் உணர முடிகிறது. 


அடுத்த தொகுப்புக்காக காத்திருக்கிறேன்! 


(பின்குறிப்பு - யாருக்கும் கிடைக்காத பொக்கிஷமாய் அனுவின் கையொப்பம் உள்ள தங்கள் புத்தகம் என்னிடம் இருக்கிறது. அதில், அடுத்துநாம் சந்திக்கும்போது நீங்களும் கையொப்பம் இட்டுத்தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.) 


அன்பன் 

விவேக்பாரதி 

10-01-2022

Comments

  1. கற்றாரைக் கற்றாரே காமுறுவர்..... தேர்ந்த கவிஞராக அல்லாமல் இரசிகராகத் தங்களின் பதிவை பார்த்த வேளையில், பூ அவிழும் சமிக்ஞை உணர முரலும் சுரும்பானேன்

    ReplyDelete

Post a Comment

Popular Posts