மீனாட்சி தரிசனம்


Illustration by SCD Balaji 

தீபத்தின் திரிவிண்ணை நோக்கிச் சுடர்ந்தாலும் 
திசையாட்டும் காற்றுக் கலையும் 
திசைமாற்றும் காற்றுக்கும் முடிவுவரும் வேளையில்
திருந்திவிண் நோக்கிச் சுடரும் 

ஆபத்தை உணராமல் அதுபோல நானுமென் 
ஆசையால் ஆடுகின்றேன் 
ஆட்டங்கள் ஓய்கின்ற உனதுசன் னிதிமுன்னம் 
அடையாளம் காணுகின்றேன் 

தாபத்தை மனதோடு மறைக்கத் தெரிந்தாலும் 
சரித்திடத் தெரியவிலையே
தர்மத்தின் பாதையினைக் கர்மப் புதர்மறைக்க
தகுந்தவழி புரியவிலையே 

கோபத்தை நெஞ்சுக்குள் அடக்கத் தெரிந்தாலும் 
கொன்றுவிட இயலவிலையே 
கொஞ்சுதமிழ் மதுரையில் கோயில்கொண் டாடிடும் 
குலதெய்வ மீனாட்சியே!!

-விவேக்பாரதி
20-01-2022

Comments

Popular Posts