விழி எம் தோழா!


ஊரையெலாம் பொய்த்திரையால் உண்மை மறக்கவைத்து, 
வேருள்ள(து) என்பதையும் வெற்றாய் மறுத்துரைத்துப் 
பேரழிக்கப் பார்ப்பதையும், பேச்சடக்கி வைப்பதையும், 
நேரெதிரில் கண்டும் நெளிந்து கிடப்பாயோ? 
கூருடைய வேலர் குலத்திற் பிறந்தவனே!
போரறிவும் ஆட்சிசெயும் பேரறிவும் வாய்ந்தவர்தம் 
சீரெனவே வந்தவனே! செல்வத் தமிழ்மகனே! 
வீரக் கனலே விழியேலோர் எந்தோழா! (1) 

நாட்டை அரசாளும் நாடகத்தை செய்பவர்தாம் 
வீட்டை அழிக்கும் விளையாட்டும் செய்கின்றார்! 
கூட்டைக் கலைத்துக் கொடுவானின் கற்பனையை 
மீட்டிவைத்(து) உன்னை மிரட்டி அமிழ்த்துகிறார்! 
நீட்டி மடக்கிவைக்க நீயென்ன தார்ப்பாயா?
பூட்டி அடக்கநீ பூச்சியா? கண்திறவாய்! 
ஊட்டம் அடைவாய்! உயிர்த்தெழுவாய்! தீதையெலாம் 
வேட்டும் திறமே விழியேலோர் எந்தோழா! (2)

முன்னை வரலாற்றை முற்றும் மடைமாற்றி,  
உன்றன் அடையாளம் உள்ளதெலாம் பொய்யாக்கி, 
அன்னை மொழிமாற்றி அன்றடிமை செய்ததுபோல்,  
இன்னும் அடிமைக்(கு) இயற்றுகிறார் பேய்த்திட்டம்!
ஒன்றும் அறியாமல் உள்ளே குறட்டையொடு 
சென்ற தலைமுறைக்கும் சேர்த்துத் துயில்வாயோ? 
இன்னல் களைய எழுந்திருக்க வேண்டாவோ?
மின்னற் சுவையே விழியேலோர் எந்தோழா! (3)

யாதும்நம் ஊரென்றோம், யாவருமே கேளிரென்றோம், 
தீதொடு நன்றும்நம் செய்கை எனத்தேர்ந்தோம்,  
போதம் அனைத்தும் புகழ்ந்திருந்த நம்நிலத்தில் 
தீதைத் திணித்துத் திசைமாற்றி, கும்மிருட்டில் 
போதைகளைக் காட்டிப் புரட்டுகிறார்! உன்படிப்பால் 
ஈதெல்லாம் போக்கி, இருந்தநிலை மீண்டுவர 
வாதங்கள் செய்யாமல் வாய்திறந்தா தூங்குவது? 
வீதிக்கு வந்து விழியேலோர் எந்தோழா! (4)

நல்லார் இவரென்பார், நன்றாய்ப் புகழுரைப்பார், 
இல்லை நிகரென்(று) இயம்பிநிற்பார், பின்னாலே 
பொல்லாப்(பு) அறியவந்தால் பொய்யென வேறுசொல்லி 
எல்லாரும் தூங்க அடுத்த கதைபடிப்பார்! 
எல்லாரும் தூங்கிவிட்டால் ஏற்றங்கள் எப்போது?
பொல்லாரை நல்லார் புறந்தள்ளல் எப்போது?
சொல்லால் மயங்கிவிட்டால் சோதிவரல் எப்போது?
வல்லவர்தம் செல்வ! விழியேலோர் எந்தோழா! (5)

ஒவ்வொரு நாளும் உறுதிமொழி மாற்றிடுவார், 
ஒவ்வொரு நாளும் உலகப் புளுகுரைப்பார்,
ஒவ்வொரு நாளும் உழைத்துக் களைப்பவரை 
ஒவ்வொரு போதும் உதைத்துக் களித்திருப்பார்! 
ஒவ்வொரு நாளாய்நாம் எத்தனைநாள் தள்ளுவது?
எவ்வொரு நாளில் எழுச்சிவரக் காணுவது?
இவ்விதம் எண்ணாமல் இன்னும் உறங்குதியோ 
வெவ்வினை தீர விழியேலோர் எந்தோழா! (6)

குறளில் வழிகண்டோம்! கூறுதமிழ்ச் சங்கம் 
நிறுவிய பாட்டில் நெறிகண்டோம்! வாழ்வில் 
புறத்தோ(டு) அகம்கண்டு பூரித்தோம்! சந்தஞ்
சிறந்த இசைத்தமிழில் சிந்தித்தோம், பின்பேன் 
பிறமொழியின் ஆதிக்கம்? பேசுந் தமிழாம் 
கறந்தநற் பாலில் கசப்பேனென்(று) உன்வாய் 
திறந்து வினவாமல் தேவையா தூக்கம்?
மறத்தின் வடிவே விழியேலோர் எந்தோழா! (7)

உழைக்க பயமில்லை! ஊர்ப்பழிக்கே அச்சம்! 
அழைப்பில் தவறில்லை ஆதிக்கம் குற்றம்! 
விழைவுக்(கு) உரிமைகளை விற்றுவிடல் பாவம்!
நுழைந்தோர் அரசாளும் நூதனமே மோசம்! 
தழைக்கும் இவற்றைச் சருகாக்க, உன்றன் 
எழுச்சிக் குரலே எழுகதிராம், காற்றில் 
அழுந்தக் கிளம்பும் அனல்போலுன் கண்ணின் 
விழிப்பில் பொசுக்க விழியேலோர் எந்தோழா! (8) 

தெய்வந் துணையுண்டு! சான்றோரின் சொல்லுண்டு! 
செய்வ(து) அறியும் திறனுண்டு! மென்மேலும், 
செய்யத் துணிவுண்டு! சேரும் இனமுண்டு! 
வெய்ய படைவீழ்த்த வெற்றி உனக்குண்டு!
பொய்யைப் புறங்காட்டிப் போர்க்களத்தே ஓடவிடத் 
துய்ய மறமுண்டு! தூக்கம் விடுத்தாலுன்  
கையும் விரல்களும் காலும் திடவுடலும் 
மெய்யுமுன் பக்கம் விழியேலோர் எந்தோழா! (9)

ஆற்றல் உடையவனே அண்டங்கள் கைக்கொள்வான்! 
மாற்றும் நசையிருந்தால் மண்கையில் பொன்னாகும்!
ஏற்றக் கதவுனக்காய் எப்போதும் தாள்திறக்கும்! 
போற்றிகள் சொல்லிப் புனைந்துரைக்கத் தேவையிலை!  
ஊற்றுக்கண் பொங்கிவரும்! உண்மையெலாம் கைகொடுக்கும்! 
கூற்றும் பணிந்திருக்கும்! கொள்ளரணாய்க் கூடவரும்!
தூற்றம் கெட,வுன் துயில்நீங்கி னால்விடியல்
வீற்றிருக்க வேண்டா விழியேலோர் எந்தோழா! (10) 

-விவேக்பாரதி
10-01-2022

Comments

Popular Posts