காதல் மனப்பாடப்பகுதி | #நூல்நோக்கம்

ஒரு பயணத்தின் பெரும் சுவட்டில் பல கோடி கவிதைகள் மலர்ந்தும், உதிர்ந்தும் விடுகின்றன. இயந்திர ரயில் பெட்டியோ, பேருந்தோ நம்மை இடம் பெயர்க்கும்போது வரும் களைப்பை, காணாத ஜன்னல் ஓரக் காட்சிகள் மறக்கடிக்கச் செய்கின்றன. இதைத்தான் இலக்கியமும் செய்கிறது. வாழ்க்கைப் பயணத்தில் நமக்கான ஜன்னல்களை திறந்துவைக்க வேண்டிய காரணத்தை வழங்குகிறது. 

அப்படி, அண்மையில் சுவைத்த பயணத்தில், ஜன்னல் ஓரத்துடன் நான் தொட்டுக்கொள்ள கிடைத்த கவிதைத் தொகுப்பு - கவிஞர் வைகைச்செல்வனின் காதல் மனப்பாடப்பகுதி. 

தேர்ந்த தமிழ் மரபின் பாற்கடலைக் கடைந்தெடுத்த இலக்கியவாதி கவிஞர் வைகைச் செல்வனின் அநாயாசப் படைப்பு இந்தக் கவிதை நூல். அளவிலும், அட்டைப் படத்திலும் வசீகரிக்கும் புத்தகம், தலைப்பின்மூலம் நம்மைப் பள்ளிக் காதலுக்குக் கொண்டு செல்கிறது. மனப்பாடப்பகுதி என்று பெயரிடப் பட்டதாலோ என்னவோ, நிறைய கவிதைகள் பார்த்தவுடன் மனத்தில் பதிந்து, நெட்டுருப்போடத் தேவையின்றி, மனதுக்குள் நீள வேர் பரப்பத் தொடங்குகிறது. 

இந்தப் புத்தகம் முழுவதும் கவிஞர் விதைகளை இட்டிருக்கிறார். அது மனதில் ஊன்ற ஊன்ற உடனே விரியும் கிளைக் காட்சிகள் காணக் களிப்பைத் தருகின்றன. அளவில் பார்த்தால், நம் வீட்டு முற்றங்களிலும், இப்போது மாடித் தோட்டங்களில் பூஞ்சாடிக்குள் குடியிருக்கின்றனவே டேபிள் ரோஜாக்கள், அத்தகைய கவிதைகள். பார்த்து ரசித்து எளிதில் கடக்கக்கூடிய அழகியல் மிக்கவை. ஆனால், கடந்து போகும் பயணத்தில் அந்த டேபிள் ரோஜாக்களின் நிறம் நம் மனதுள் தங்கி விடுவதுபோன்று பச்சென்று ஒட்டிக்கொள்ளும் சிந்தனைகள். 

இதில், நான் ரசித்த முக்கியக் குறிப்பு என்னவெனில், புத்தகத்தில் உள்ள கவிதைகளில் ஒன்றுகூட காதலை மிகைப்படுத்திப் பேசவில்லை என்பதே. வீட்டு வாசலில் சன்னமான குரலில் காலையில் கூவும் குயிலைப் போல, மத்தியான வெயில் மந்தத்தில், மரக்கிளைகளில் இளைப்பாறும் பறவைகளைப் போல, அன்றாடம் பார்க்கும் வீட்டு வெளித்தரையில் திடீரெனப் பூத்திருக்கும் ஒரு துரும்புப் புல்லைப் போல யதார்த்தங்களின் படப்பிடிப்புகளாக இந்தக் கவிதைத் துளிகள் உறைந்துபோய் இருக்கின்றன.

ஒவ்வொரு பக்கத்தையும் தொடத்தொட, அந்த உறைந்திருக்கும் பனித்துளிகள் விரல்களை ஈரம் செய்து, மனங்களில் குடியேறி விடுகின்றன. 

காதலை 143 என்று சொல்லிப் பழக்கப்பட்ட 90 கிட்ஸின் காலத்தவன் நான் என்பதால், இந்த புத்தகம் 143 பக்கங்களுடன் நிறைவடைந்திருப்பது புதிய பரவசத்தைத் தருகிறது.  

கவிதைகள், ஆதாம் ஆப்பிளைக் கடித்த அந்த நிமிடத்தில் இருந்து தொடங்குகிறது. காதலின் தொடக்கமும் அதுவாகவே இருப்பதால், இது காதலின் தொடக்க காலத்தில் இருந்து நம்மை கூட்டிச் செல்கிறது என்றும் சொல்லலாம். இது நவீனமான வடிவமைப்பையும் தோற்றத்தையும் கொண்டு, உள்ளே நகரம் அதிகம் அறியாத கிராமத்துக் காதலைப் பேசுவது - இதன் அழகு முரணான உத்தி. 

எதுவெனப் பட்டியல் இட முடியாத அளவு, அனைத்துக் கவிதைகளின் உயிர்நாதமாகவும் விளங்கி நிற்பது, அந்தக் கிராமத்துக் காதலைக் கொண்டாடும் பிள்ளை மனம்தான். அந்த மண் வாசனையைப் புத்தகம் முழுவதிலும் உணர்ந்து, மீண்டும் ஒருமுறை எழுதியவர் பெயரைப் பார்த்தேன். வைகைச் செல்வன்! சரியாகத்தான் இருக்கிறது! 

உலகத்தைக் கவிஞர்கள் பார்க்கும் பார்வை என்பது இன்னதென வரையறுக்க முடியாததுதான். ஆனால், கூடுமான வரையில் பாமரன் பார்வையில் பார்ப்பதும், அவன் பேச எண்ணாததைப் பேசிவிடுவதுமான சாதுர்யமாக இருக்கிறது. அப்படித்தான், காதல் எறும்பு கடித்ததும் காளையர்கள் உச்சரிக்கும் அனைத்து மயக்கச் சிந்தனைகளையும் இந்த மனப்பாடப்பகுதி உரைத்துவிடுகிறது. 

மேலும், கடலில் சிறிய அலைகள் கால் நனைத்துக் காதல் செய்ய, அவ்வப்போது எழும் பேரலைகள் களவாடிக்கொண்டு இழுத்துச் செல்லுமே, அதுபோல் புத்தகத்தில் சிறிய கவிதைத் துளிகளுக்கு மத்தியில் வரும் பெருமழைகள், முழுமையாக நனைத்து, உலர்த்தி புதியதாக்கிவிட்டு கரைகின்றன. இது, தொகுப்பில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அழகியல். 

கையில் கிடைத்த தேன் பாட்டிலில் இருந்து சில துளிகளைச் சிந்துகிறேன். 

“யோசித்துப் பார்க்கையில், 
சிறுவயதில் உனக்கு 
சரடுதாலி கட்டியபோது
தொடங்கியது 
நம் காதல் வாழ்க்கை!
 ”

“சிறுவயதில் பார்த்ததுபோல் 
உன் அம்மா இல்லை,
அப்போதெல்லாம் 
மருமவனே 
என் மகளைக் கட்டிக்கிறியா 
எனக் கேட்பாளே!”


“நீ பள்ளிக்குப் போகாத 
நாட்கள் எல்லாம் 
எனக்கு விடுமுறை நாட்கள்!
 ”

“என் வீட்டுப்பாடத்தை 
நீ செய்து தந்தபோது 
நாளை என் வீட்டிற்கு 
சொந்தமாவோம் என 
நினைத்தாயா?
 ”

“மேகத்தின் ஓரத்தில் மிச்சம் இருக்கும் 
நிலவுக்கும் தெரியும் என் காதல்”

“உன் பிறந்தநாள் 
தெரியாததால்
ஆண்டு முழுவதும் 
மிட்டாய் கொடுத்துக்கொண்டே இருக்கிறேன்”

“கேள்வித்தாளை போல
உன்னை
சாய்ஸ்ஸில் விட 
முடியவில்லையே”

“வருகைப் பதிவிற்காக 
ஆசிரியர் உன்னைப் 
பெயர்சொல்லி அழைப்பது 
கோபமாகத்தான் இருக்கிறது” 

“நன்றாக அடித்துவிட்டேன் 
உன் கட்டை விரலைக் 
காயப்படுத்திய அந்தக் கல்லை” 

ஆ! அப்படியே எல்லாவற்றையும் சிந்திவிட்டால் ஆகுமா? நான் மேலே சொன்னவை எல்லாம் புத்தகத்தின் முற்பாதி மட்டுமே. பிற்பாதி இன்னும் படிக்க, காதல் ஈரத்தைத் தேக்கி, உறைந்திருக்கும் பனித்துளியாக அப்படியேதான் இருக்கின்றன. காதல் மனப்பாடப்பகுதி - நற்றிணை பதிப்பகத்தில் கிடைக்கிறது. 

ரூ.70-க்கு ஒரு தேன்கூடு வாங்க நினைப்பவர்கள், கவிஞர் வைகைச்செல்வனின் காதல் மனப்பாடப்பகுதியை வாங்கிச் சுவைக்கலாம். 

வைகைச்செல்வன் சாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும், நன்றிகளும்!

விவேக்பாரதி
20-02-2022

Comments

Popular Posts