இளமைத் திருவிழா - எராட்டிகா


அண்மையில், (எழுதத் தொடங்கும்போது இப்படித்தான் ஆரம்பித்தேன். ஆனால், நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது)  சென்னை ஆர்ட் தியேட்டரின் தயாரிப்பான எராட்டிகா நாடகத்தின் நான்காம் பகுதியை நண்பர்களுடன் பார்க்கச் சென்றிருந்தேன். முன்னம் இருந்த மூன்று பகுதிகளையும் பார்த்துக் களித்தவன் என்ற முறையில், நண்பர்களுக்கு புத்தம் புதிய அனுபவத்தை உண்டாக்குவதாக உறுதி அளித்தே அழைத்துச் சென்றிருந்தேன். அதை நாடகக் குழுவினர் காப்பாற்றினார்கள்.

ஓரினச் சேர்க்கையாளர்களையும், மூன்றாம் பாலினத்தவரையும் மையப்படுத்தி உருவாக்கப்பட்ட நான்கு நாடகங்கள், புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநருமான ஏ.பி.நாகராஜனின் மேடை அரங்கத்தில் அரங்கேற்றப்பட்டது. நான்கும் நான்கு ரகம். நான்கும் நான்கு தரம். 

ஆரம்பத்திலேயே பார்வையாளர்களின் மனங்களை மொத்தமாய்க் கொள்ளையிடும் வகையில், பழமையும் புதுமையும் நிறைந்த நாடகம் காட்டப்பட்டது. ஷேக்ஸ்பியரையும், நெட்பிளிக்ஸையும் ஒன்றிணைத்த விதமும், அந்த “டடம்”  சத்தமும் நாடகத்தைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பார்த்து, கேட்டு, புளிக்காத கதைகளில் கூடுதல் சுவாரஸ்யங்களாக ஓரினச் சேர்க்கையின் தத்துவம் கலக்கப்பட்டது, நெடுங்காலமாய் இருக்கிற இளநீரில் புத்துணர்ச்சியாய் ஒரு சர்பத் குடித்த ஆனந்தம் கிடைத்தது. ஜூலியட்டாக நடித்தவரின் நடனங்கள், பசுமையாய் மனத்திரையில் ஓடிக்கொண்டே இருக்கிறது. கடைசி பன்ச்சாக விழுந்த “லவ் யூ டூ ப்ரூட்டஸ்,” “சபாஷ்டா” என்று உரக்கச் சொல்ல வைத்தது. பாடல்களும், நடனங்களும், நளினங்களும், காட்சிகளும் தனித்துவம். ஷேக்ஸ்பியருக்கும், நெட்பிளிக்ஸ் மேலாளருக்கும் இடையில் நடந்த உரையாடல்கள் ரசனைக்குரியவை.

தொடர்ந்து வந்தது அமைதியும் ஆழமும் நிறைந்த கலைப்படைப்பு. உரையாடல்களின் தொடக்கத்தில் தெரிந்த சாதாரண படைப்பு, பெயர்களின் உச்சரிப்பில் இதிகாச அந்தஸ்தைக் காட்டிக் கொண்டது. தமது மென்மையான குரலாலும், நளினமான உடல் மொழியாலும் உத்தராவாக நடித்தவர் மனங்களில் குடிகொண்டார். பிருஹன்னளை கதாபாத்திரத்தில் நடித்தவரின் வசன வெளிப்பாடு தெளிவாக இருந்தாலும், அவரது உடல்மொழி மூன்றாம் பாலினத்திற்கான நளினத்தையோ, நிஜ கதாப்பாத்திரமான அர்ஜுனனையோ காட்டவில்லை என்பதையும் பதிவு செய்தாக வேண்டும். ஆனால், அது கொஞ்சம்கூட தெரியாத அளவிற்கு, உத்தரா சேர்த்து நடித்தார். வசனங்கள் அபாரம்.

ஒரு தனி மனிதனாக 25 நிமிடங்கள் மொத்த ரசிகர் கூட்டத்தையும் கட்டிப் போடுவது சாதாரண விஷயம் அல்ல. ஆனால், அதைச் செய்துகாண்பித்தார், மூன்றாவதாக அரங்கேறியவர். வெறும் வசனங்களை வைத்தே இருக்கைகளின் விளிம்புகளுக்கு கொண்டு வந்தார். அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது அவருடைய இயல்பான மொழியும், அதன்வழி அவர் கடத்திய உணர்ச்சிகளும்தான். 

நான்காவதாக மேடை ஏறிய இரு ஆண்களும், அத்தனை ஆழமாக முத்தமிட்டுக் கொண்டது மட்டும்தான் கண்களை விட்டு நீங்காமல் அப்படியே உறைந்துபோய் இருக்கிறது. ஓரினச்சேர்க்கையின் பின்புலத்தில், அதுவும் ஆண்களின் உலகில் எத்தனை உளவியல் பூகம்பங்கள் ஒளிந்திருந்தன என்பதை நிறைவாக அரங்கேறிய நாடகம் தெளிவாகக் காட்டியது. அதில் நடித்தவர்களின் முகபாவங்கள், தேர்ந்ததொரு நடனத்தை ரசித்தததைப்போல் இருந்தது. 

மொத்தத்தில் இளமையின் திருவிழாவாக, பிப்ரவரி மாதத்தில் பூமியில் நடந்த மற்றொரு மதன விழாவாக நிறைவுற்றது எராட்டிகா. ஒவ்வொருமுறையும் தவறாமல் கலந்துகொள்ளும் என்னை, தவறாமல் பரவசமூட்டியது எராட்டிகா. 

வாருங்கள், அடுத்த சீசனுக்காகக் காத்திருப்போம். 

விவேக்பாரதி
23-03-2022

Comments

Popular Posts