நானொரு பூமர்


துப்பட்டாவை 
சரி செய்யச் சொல்லும்
பூமருக்குப் பின்னால்
தன்னைக் கட்டுப்படுத்த முடியாத
ஓர் ஆண்தான் ஒளிந்துகொண்டிருக்கிறான்!

அறிவுரை சொல்லி
விரிவுரை ஆற்றும்
ஒவ்வொரு பூமருக்குக்கும்
அதை மட்டுமே கேட்டு வளர்ந்த
வரலாறு மட்டுமே உண்டு! 

பல் இளித்து
ஜொள் ஊற்றி, 
வசனம் பொறுக்கி வந்து
கவிதை பேசும் பூமர் 
சிங்கிள் நிலையில் பார்க்கப்படாத
ஒரு பருவத்தின் மிச்ச எச்சம்! 

எந்த பூமரும் அவசியம் இன்றி,
இப்போதும் தன் நெடு நேரத்தை
ஸ்வைப் செய்தே கழிப்பதில்லை

வெளியில் சுற்ற 
அதிகம் யோசித்துக் 
காசுகளின் கணக்கை 
விரல்களில் எண்ணும் நபருக்கு
பூமர் என்றுதான் 
பெயர்வைக்கிறார்கள்! 

வீண் சவடாலையும் 
சண்டையையும் தவிர்ப்பவனை
முன்னர் சாம்பார் என்ற சமூகம்
இன்று பூமர் என்கிறது! 

பொத்தவும் முடியாமல், 
காலத்துக்கேற்ப கத்தவும் முடியாமல்
ஒரு பூமர் அடையும் அழுத்தம்
கடலினும் பெரிது! 

அடக்குமுறையை ஆபத்து என்பீர்களா?
அவன் இயல்பைப் பார்க்காமல்
சதா பூமர் பூமர் என 
அவனை நீங்கள் குத்தும் ஊசிகள்
அவனுக்குள் ஏவுகணை ஆகும்
அடக்குமுறையை என்ன சொல்வது?

ஒரு பூமர்
இன்னும் நிம்மதியாகத் தூங்குகிறான்!
பாடல்களை தவரவிறக்கித்தான் கேட்கிறான்!
கே டிவி பார்க்கிறான்! 
ரேடியோ பன்பலைகளை நேசிக்கிறான்!
தன்மேல் எறியப்படும் 
அத்தனை மீம்களையும் 
தாடியை முழுதும் மழித்ததால் 
பெரிதாகத் தெரியும் 
கட்டை மீசையின் ஒரு
புன்னகையுடனே கடக்கிறான்! 

மேற்கண்டவற்றில்
ஒன்றேனும் எனக்கும் பொருந்துமென்பதால்
நானும் ஒரு பூமரென 
பெருமையுடன் சொல்வேன் 
டக் இன் செய்த சட்டை காலர் தூக்காமல்!!

விவேக்பாரதி
24-03-2022

Comments

Post a Comment

Popular Posts