அழகருக்கு விண்ணப்பம்


.
மதுரையில், அழகர் ஆற்றில் இறங்குவதைப் பார்க்கப் போவதாய்ச் சொன்ன தோழி, வேண்டுதல் இருக்கா எனக் கேட்க, அனுப்பி வைத்த விண்ணப்பங்கள். அவ்ளோதான, அப்றம் எனக் கேட்க கேட்க 11 பாடல்களாக அடுத்தடுத்து வந்த பரவசப் பதிவு அப்படியே! 

குதிரையின் மீதேறி கொண்டாட்ட உருவாகி 
கோயில்கள் சுற்றும் அழகா 
மதுரையின் நாயகா மங்கையர் நெஞ்சத்தில் 
மையல்நோய் செய்யும் தலைவா 
நதியிலே இறங்கிநீ நீராடும் வேளையில் 
நல்மனம் குளிர்வதைப் போல் 
விதியெனும் கடல்மீது விளையாடும் மக்கட்கும் 
மனநலம் அருளுவாயே!

தங்கத்துத் தேரிலே பல்லக்கில் தோளிலே 
தரையளந் துருளும் அழகா 
மங்களக் கல்யாண நிகழ்ச்சிக்கு வழிதேடி 
மதுரையில் அலையும் தமையா 
பொங்கிடும் வையையில் உன்தலை நனைகையில் 
பொழில்குளிர் அடைவதைப் போல்
எங்கெங்கும் சுற்றியே காண்கின்ற மக்கட்கும் 
இதக்குளிர் அருளுவாயே..!

மண்டகப் படிகளும் பக்தர்கள் சுற்றமும் 
வளமான புடை சூழவும் 
பெண்டகை லட்சுமி மார்பினில் தூங்கவும் 
பெருமாட்டி மனம் கொள்ளவும் 
உண்டகை கழுவிட அரக்கன்கை வைத்ததால் 
உருவான நதியில் நனைவாய் 
தண்டனை என்னவே புவிவாழும் மக்கட்கு 
தண்ணிதம் அருளுவாயே..! 

நாற்புரம் பக்தர்கள் சூழ்ந்திருக்க வையை 
நதியுனை மிக நனைக்க 
ஏற்புடைப் பொன்னிறக் குதிரைதுள்ள கூட 
ஏராள மக்கள் துள்ள
ஆர்பரித் தெழுகிற அலைகளைப்போல் உன்னை
அன்பர்கள் சூழும் சுகம்போல்
சேர்ப்புகள் மாட்டிய மக்களின் வாழ்க்கையும்
செழுமைக்குள் நிற்க அருளே..! 

கோவிந்த கோவிந்த கோவிந்த என்றுன்னைக் 
கூட்டமே வரவேற்றிட 
சேவித்து சேவித்து தங்கள் குறைதீர்ந்த 
சந்தோஷத்தில் பூக்க 
தாவிக் குதித்துநீ சாய்ந்தாடி வைகையில் 
தண்ணீரில் ஆடும் சுகம்போல் 
பாவியாம் கொடுவெயில் மாய்க்கின்ற மக்களைப் 
பார்த்துக் குளிர்த்தியருளே..! 

வாராரு வாராரு வாராரென் றுன்னையே 
வாழ்த்துவார் மிகத் துள்ளுவார் 
பேராரும் மதுரையின் வீதியெல்லாம் உன்றன் 
பேர்சொல்லி புகழ் பாடுவார் 
நீராடும் உன்னழகு நிகழ்ச்சியைக் காணவே 
நிறையவரும் மக்கள் கூட்டம் 
சீரோடும் சிறப்போடும் குளுமையாய் வாழ்ந்திட
சில்லென்று கனிவை அருளே..! 

சித்திரைத் திருவிழா சுள்ளென்ற வெயிலிலும் 
சில்லென்று வீசும் இன்பம் 
முத்திரை ஆகநீ நீர்தாண்டும் காட்சியை 
முழுமையாய்ப் பார்க்க இன்பம் 
இத்தனை எண்ணியே பலகோடி ஊர்சேர்ந்து 
இணைந்துன்னை காண வருவார் 
அத்தனை மக்களின் மனமுடல் மெய்யெல்லாம் 
அன்பில் குளிர்த்தி அருளே..! 

தேரொன்று வீதியை மொத்தமாய் வந்ததில் 
தெய்வங்கள் வீதி நிறைக்க 
போரொன்று வந்ததைப் போலவே உற்சாகப் 
போதையில் சரணம் ஒலிக்க 
நீரென்னும் அமிழ்தத்தில் இறங்கிடும் அழகனே 
நிழல்நிஜம் நடுவில் ஆடும்
பாருன்னை வாழ்த்திடும் உன்னருள் கையினால் 
பக்தர்க்கு கனிவை அருளே..! 

ஆட்டமும் பாட்டமும் மக்களின் கூட்டமும் 
அழகனே உன்னைச் சுற்றி 
தேட்டமும் ஊட்டமும் இன்பத்தின் ஈட்டமும் 
தேவனே உன்னைப் பற்றி
வாட்டமும் வழுக்கலும் சறுக்கலும் மக்களிடை
வாழுமோ கள்ள அழகா 
ஓட்டமாய் ஆடும்நீர் உற்றிடும் சுகத்தைநீ 
ஊட்டியெம் மக்கட் கருளே!

கல்லுகல் கல்லென்று கொக்கரிக்கும் குதிரை 
கவிதையாய் நடைநடக்க 
சொல்லுசொல் சொல்லென்று கருப்பன்ன சாமிகள் 
துணையாக குதிகுதிக்க 
வில்லுவில் வில்லென்ற புருவத்து ஆண்டாளின் 
வியன்மாலை தோள்சூடியே 
நில்லுநில் நில்லாமல் நீராடும் சுகமெலாம் 
நீமக்கள் மீதில் அருளே..! 

சர்க்கரைப் பொங்கலும் கருப்பட்டித் தூள்களும் 
சரியாக கையில் சேர
தக்கதாய்ப் புளியோத ரையுடன் கேசரி 
தங்கமாய் கைக்கிடைக்க 
மக்களின் பசியையும் மனங்களின் பசியையும் 
மண்மீதில் தீர்க்கும் தயவே 
மிக்கவே நீராடும் இன்பத்தை மக்கட்கும் 
விரைவாக நல்கி அருளே..! 

-விவேக்பாரதி
16-04-2022

Comments

Popular Posts