உயிர்த்தெழுந்தவர்

ஒவ்வொரு ஞாயிறும் 
என் வருகையை நோக்கி  
காத்திருக்கும் ஆண்டவரிடம் 
விடுப்பு கேட்க நினைத்தேன்!

என்ன காரணம் சொல்லலாம்
என் விரல்களைக் கேட்டேன்

“உடம்பு சரியில்ல ஆண்டவரே”
என ஆள்காட்டி விரல்
சோம்பல் முறித்தது! 

அதற்குப் பரிசுத்த ரத்தத்தைப்
பரிசளித்துவிடுவாரே என்றேன்! 

“மனசுன்னு சொல்வோமா?”
நடுவிரல் நக்கலடித்தது
பாவ மன்னிப்புக் கூண்டில்
அவர்தானே இருக்கிறார் என்றேன்!
 
”தூங்கிட்டேன்ன்னு?”
மோதிர விரலின் கேள்விக்கு
முறைப்பையே பதிலாக்கி 
சோம்பலைக் கடந்தேன்! 

“அலுவலக வேலை?”
சுண்டுவிரல் சொன்னதற்கு
சரி எனத் தலை அசைக்கையில், 

அனைத்தையும் பார்த்த பெருவிரல்,
வழிமாறிவிட்டதாகச் 
சொல்லிப் பார்க்கச் சொன்னது,

அதையே மனமாறச் சொல்லி
நூலகம் ஒன்றினுக்குள் நுழைந்தேன்,

பிடித்த கவிதைப் புத்தகத்தின் 
பக்கம் திருப்பி 
முதல்வரி வாசிக்கையில் 
அருகில் அமர்ந்து கேட்டிருந்தார் 
உயிர்த்தெழுந்தவர்!!

-விவேக்பாரதி
17-04-2022

Comments

Popular Posts