துருப்பிடித்த யாழிலிருந்து ஒரு மின்னல்


தேவனவன் வானிருந்து காதுக்குள்ளே
    தெளிவற்ற முணுமுணுப்பாய் சொல்வதை நான் 
பாவனையால் ஓரளவு சொல்லப் பார்ப்பேன்
    பாட்டுக்குள் அவன்பாதம் தெரியுதா சொல்?
காவியமும் கவிச்சுவையும் கற்றுக் கொண்டே 
    காற்றுவாக்கில் சற்று கால்கள் நீட்டி 
ஓவியமாய் கையசைக்கும் குழந்தை வாயில்
    உதிர்க்கின்ற சொல்மழலை கேட்குதா சொல்! 

வேடரிலாக் கானகத்தில் ஒன்றை ஒன்று 
    விரட்டிக்கொண்(டு) அலைகின்ற பறவைகள் போல் 
பாடலிலா வேளையில்,என் சொற்கள் எல்லாம் 
    படபடக்கும் சிறகடிக்கும்; முட்டி முட்டி 
தேடலிலே லயிக்கின்ற சிறிய நெஞ்சைத் 
    தெளியவிட்டுப் பின்கலக்கும் ஓய்வே இன்றி 
ஆடவைத்து பின்சிரிக்கும் அந்த நேரம் 
    அந்தகார இசையென்றன் உதடு செய்யும்! 

அப்பொழுதை உனக்காக இசைக்கின்றேன் நீ 
    அதுவேண்டாம் எனச்சொன்னால் என்ன செய்வேன்? 
இப்பொழுது வரும்கவிதை மின்னல் உன்னை 
    ஈர்க்கவிலை ஆனாலும் இதுவும் மின்னல்! 
ஒப்பிடவே முடியாமல் ஓடி ஓடி 
    ஒருகணத்தில் நானோயும் நேரம், என்வாய் 
செப்பாமல் வெளிவந்த சொற்கள் கொஞ்சம் 
    சிந்தியதால் வந்ததிது! துருப்பிடித்த 

யாழொன்றை என்கைகள் இசைக்க எண்ணி 
    எப்போதும் வாசிக்கப் பிராண்டும் நேரம் 
வீழாத கீறல்கள் அதிலே வீழ 
    விரல்மேய்தல் நிறுத்துகையில் ஒற்றைத் தூசி 
மேலாக வந்துவிழ அதற்கசைந்த 
    மென்னெஞ்சத் தந்துபியின் இசையே இஃது!  
ஆழாத வகையில்லை என்னும் போதும் 
    அதிர்வலையில் கரைந்தேநான் மீண்ட(து) உண்மை!!

-விவேக்பாரதி
20-04-2022

Comments

Popular Posts