குரங்கம்மையும் ஓரின வன்மமும்

LGBTQ பற்றிய எனது முதல் பதிவாக இதைத்தான் எழுத வேண்டும் என்று காலம் நிர்ணயித்திருப்பது ஒருபக்கம் ஊக்கமும் மறுபக்கம் வேதனையும் அளிக்கிறது. ஆனால், கண்ணில் பட்டதைப் பேசாமல் விடுவதற்கு சாதாரண விஷயமாக இதை என்னால் கடந்து செல்ல முடியவில்லை. 

நம்மில் பலருக்கு வெளியில் சொல்ல முடியாத கொடும் மன நோய் இருக்கிறது என்று நான் சொன்னால் நீங்கள் என்னை அடிக்கக் கூட வரலாம். ஆனால் அதுதான் உண்மை. அதன் பெயர் ஓரினச்சேர்க்கையாளர் மீதான பயம். இதை ஆங்கிலத்தில் Homophobia என்று சொல்கிறார்கள். 

ஒரு மனிதனின் உளவியல் கோட்பாட்டை உணராமல், அவன் மற்றவருடன் கோள்ளும் தொடர்பின் பின்னணி பற்றி அறியாமல் இன்னும் எத்தனை நாள் பழைய ஜாதி பெருமையைப் பேசப்போகிறோம் என்பது ஆச்சர்யத்தையும் அவமானத்தையும் தருகிறது. 

அதன் பரிமாணத்தில் ஒன்றுதான் இன்று (தெரிய) வந்திருக்கும் குரங்கம்மை நோயுடன் துளியும் சம்பந்தம் இல்லாத ஓரினச் சேர்க்கையாளர்களை இணைத்துப் பேசும் வக்கிரபுத்தி. கிட்டத்தட்ட குரங்கம்மையை பதிவு செய்யும் அனைத்து செய்தி ஊடகங்களும் இதை இந்தக் கண்ணோட்டத்துடன்தான் பதிவு செய்கின்றன. 

ஆனால், உண்மை வேறு.

உலக சுகாதார மையம் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குரங்கம்மை குறித்து போதிய தகவல்களை வழங்கியுள்ளது. அதில் ஓரினச்சேர்க்கை என்ற சொல் ஓரிடத்தில் கூட கிடையாது. விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியுள்ள நோயான குரங்கம்மை, மனிதர்களுக்குள் உடல்வழி வரும் திரவங்களால் பரவுகிறது என்பதைத் தவிர வேறு குறிப்பு கிடையாது. 

கொஞ்சம் உரக்க ஓரினச்சேர்க்கை என்று கூட சொல்ல கூசும் ஒரு சமூகம் எத்தனை எளிதில் அதன்மேல் ஒரு நோயின் வன்மத்தை திணிக்கிறது என்பது காண கலக்கத்துடன் சினத்தையும் ஏற்படுத்துகிறது. 

சரி, உலக சுகாதார மையம் சொன்னால் போதுமா என்றால் உலக மருத்துவர்களும் இது ஓரினச் சேர்க்கையாளர்களால் பரவும் என்பது சுத்த பொய் என்றே தெரிவித்துள்ளனர். இதை ஊடகங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். 

உடல் திரவங்களால் நோய் பரவும் என கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாலுறவின்போதும் அம்மைத் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர்கள் சொல்கிறார்களே அன்றி, இதில் ஓரினச் சேர்க்கையாளர்கள்தான் காரணம் என எவ்விடத்தும் குறிக்கப்பெறவில்லை. 

“ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களை நாங்கள் கொஞ்சம் கவனமாக இருக்கச் சொல்லி இருக்கிறோம். ஏனென்றால் ஆண்கள் மூலம் ஆண்களுக்கு பரவுவதாகவே தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன” என்று லண்டனில் உள்ள ஹெல்த் செக்கியூரிட்டி ஏஜென்சியின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஆனால் இதையெல்லாம் கொண்டு ஓரினச் சேர்க்கையாளர்களால் மட்டுமே இந்நோய் பரவுவதாக வெளியாகும் செய்திகள், ஏற்கனவே பல்வேறு உளவியல், சமூகவியல் சிக்கல்களுக்கு ஊடாக  தவித்து வரும் ஒரு சமூகத்தின் மீது வன்ம திணிப்பாக இறங்குகிறது. 

இன்று ஊடகங்களே சக்திவாய்ந்த ஆயுதம். கவனமுடன் செயலாற்ற வேண்டியது நம் கடமை ஆகிறது. ஹோமோபோபியாவால் திணிக்கப்பட்டும் வன்மத்திற்கு எதிராக குரல்கள் உயர்த்தப்பட வேண்டும். 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! 

விவேக்பாரதி
21-05-2022

Comments

Popular Posts