அம்மா என்னும் பேரரண்இருப்பை வாழ்த்தும் இதயம் நீ - உன் 
இசையில் ராகம் நான் 
கருப்பை சுமந்த கடவுள் நீ - உன் 
கண்முன் தேவதை நான் 
விருப்பை பொழிந்த மேகம் நீ - சிறு
விதை உன் சாயல் நான் 
நெருப்பில் வடித்த நீர்மை நீ - உன் 
நிழலில் சிறு புல் நான் 

அகத்துக் கோயில் விளக்கும் நீ - அதன் 
அடியில் பூ இதழ் நான் 
முகத்தில் புதிரின் முறுவல் நீ - உன் 
முதுகில் பெருஞ்சுமை நான் 
சுகத்தை சேர்க்கும் சுகந்தம் நீ - அதன் 
சுடரில் ஒளிர் மதி நான் 
யுகத்தில் காணா நேர்மை நீ - அதன் 
உறுதியில் சுழல்கோள் நான்

அம்மா என்றன் பேரரண் நீ - அதை 
அறியா அரசே நான் 
இம்மா உலகின் ஆதியும் நீ - வெறும்
இருட்டில் மிரள் மனம் நான் 
எம்மா நிலைகள் அடைந்தாலும் - மிக
எளிமை பூண் நிலவே 
சிம்மா சனமே தாய்மடியே - உன் 
சீர் தொழும் அடிமை நான் - அதனால்
சீர் பெறும் பொம்மை நான்!!

-விவேக்பாரதி
08-05-2022

Comments

Post a Comment

Popular Posts