சொல் இருந்தால் வருகிறேன்


நேற்றிரவு ஜன்னல்வழி மிகத் தெளிவாக நிலவும், அதை உரசியபடி இருந்த மேகங்களும் தெரிந்தன. ஆசை ஆசையாய்ப் பார்த்துக்கொண்டு அப்படியே தூங்கியவனை, பாதி இரவில் மீண்டும் எழுப்பி நிலா அதே காட்சியை இன்னும் ரம்மியமாக காட்டியது. அப்போது தூக்கம் கலைத்த மேகங்களிடம் முணுமுணுத்த கவிதை... 

நீல நெடுவானில் - நிலவை 
நீவிக்கொண்டே செல்லும் மேகங்களே
காலம் அறிந்தீரோ - எனைக் 
கனவினை விட்டேன் எழுப்பிவிட்டீர்?
மூலப் பெருங்காற்றில் - நிலவை 
முத்தமிட்டே செல்லும் முகிலினங்காள் 
வேலை மறந்தீரோ - ஏன் 
வேகமாய் வந்தென் துயில்கலைத்தீர்?

வெண்ணெய்க்கட்டி நிலவை - தினம் 
மேலுறத் தொட்டுத் தழுவிடுவீர்
உண்மைச் சுவைமொழிவீர் - நிலா 
உப்புக் கரிக்குமோ? தேனினிப்போ?
கண்மை நிறஇரவில் - என் 
காதலியின் குழல் மல்லிகைபோல்
வண்ணம் அமைத்துவந்தீர் - அந்த 
வானம் சுடுமோ? குளிர்பரப்போ?

அன்பரைக் கண்டவுடன் - மனம் 
ஏறி அமர்கின்ற நாணத்தைப்போல்
சன்னிதி முன்னிலையில் - வந்து 
தரிசனம் போர்த்திடும் கண்ணீர்போல்
ஜன்னலின் கம்பிவழி - எனைச் 
சாரத் தழுவும் நிலவொளியை
மென்மைத் துகிலெனநீர் - வந்து
மூடி மறைத்திடும் நாடகமேன்?

காற்றில் அழைப்பதுமேன்? - வெளிக் 
காற்றாய்க் கலந்திடச் சொல்வதுமேன்?
தோற்றத் தடையின்றியே - உம்போல் 
தோன்றிட ஆசைகள் செய்வதுமேன்?
நேற்றின் நினைப்புமின்றி - நாளை 
நிகழ்வதைப் பற்றிய எண்ணமின்றி
ஆற்றலுடன் பறப்பீர் - என் 
ஆழ்மன பாரத்தை யார்சுமப்பார்? 

செல்லுங்கள் மேகங்களே - நிலாச் 
செழுமை முழுவுடல் தீண்டிடட்டும் 
எல்லைகள் ஏதுமின்றி - என்
ஏக்கங்களை அது தீர்த்திடட்டும் 
வெல்லுக உம்பயணம் - நாளை 
வேண்டுமென்றால் வந்து கூப்பிடுங்கள்
சொல்லிருந்தால் வருவேன் - அன்றி 
தூங்கிவிட்டால் துயில் நீக்கவேண்டா!! 

விவேக்பாரதி
17 ஜூன் 2022

Comments

Popular Posts