மிடுக்குடன் நடந்து வா!


சுயமரியாதை மாதத்தின் முத்தாய்ப்பு நிகழ்வாக நடந்த அணியம் அறக்கட்டளையின் “மிடுக்கு” நிகழ்ச்சிக்கு வாழ்த்து

ஏன் எனக்கு வாய்த்ததென்று நெஞ்சிலே வெதும்பிநீ  
நாணி நாணி வாழ்ந்த வாழ்க்கை நேற்றிலே புதைந்தது
கூனி நிற்றல் வீணென்(று) ஆச்சு கூனலை நிமிர்த்துவாய் 
ஞானமா மிடுக்குடன் நடந்துவா நடந்துவா!

பேசினோர்கள் யாரும் உன்னை போல் துணிந்த ஆளிலை
ஏசினோர்க்கு பூமி மீதில் வேறு வேலை ஒன்றிலை
கூசி, அஞ்சி உள் ஒடுங்கும் பண்பினை வெறுத்துநீ
வீசும் கீர்த்தி இகழ் கிழிக்க வேங்கையாய் நடந்துவா! 

அவன், அவள், அவர்கள் யாரும் ஒன்றெனும் சமத்துவம்
தவழ வேண்டும் பேத எண்ணம் மாற  வேண்டும் தங்கமே!
மவுனமாய் இருத்தல் போதும் மனம் முழுக்கத் தெம்புடன்
எவரும் எதிரி இல்லை என்னும் ஏற்றமாய் நடந்துவா! 

பாலை வைத்துப் பார்த்த பேதம் பஞ்சுபோல் எரிந்தது
சாலை எங்கும் வான வில்லின் நிறம் நடந்து போகுது
காலம் என்ற கருவி நந்தம் கையிலே கிடைத்தது
ஓலம் அல்ல, கர்ஜனைகள் ஓங்க நீ நடந்துவா! 

அழகின் அர்த்தம் மனதில் என்னும் ஆதியை உரைக்கவா, 
பழைய எண்ணம் கீழ் கிடக்கப் பாதையை மிதித்துவா, 
தொழுது பின்னர் அடிமை செய்யும் தொல்லையாம் பழக்கம், நீ 
எழுந்த தீயில் பொசுங்கிப் போக ஏகமாய் நடந்துவா! 

மீசை, கூந்தல், ஆடை, அழகும் ஒன்றுதான் நீ ஆடிவா 
ஆசையோடு நெஞ்சில் உள்ள காதல் யாவும் பாடிவா
நேசம் என்னும் சக்தி நம்மைச் சேர்ப்பதைப் புகழ்ந்துவா
ஓசை செய்த ஊரடக்கும் உறுதியில் நடந்துவா! 

துடுக்குடன் சிரிப்பதும் துடிப்புடன் குதிப்பதும்
எடுப்புடன் நடப்பதும் மதர்ப்புடன் கடப்பதும்
ஒடுக்கிடும் பலர்க்குநாம் வெடிப்புடன் சுழற்றியே 
சொடுக்குகின்ற சாட்டைதான் மிடுக்குடன் நடந்துவா!!

விவேக்பாரதி
25 ஜூன் 2022

Comments

Popular Posts