அகலா அழகே அகிலா


கதவு திறந்தாய் கண்திறந்தாய் என்
கவலை விலக்கிக் கருணை தந்தாய்! 
உதவ அழைத்தேன் உள்நுழைந்தாய் நல் 
உதயம் கொடுத்தாய் நிழல் கொடுத்தாய்!
மிதவை எனக்குன் மடிகொடுத்தாய் நான் 
மிதந்து களிக்க வழிகொடுத்தாய் 
பதிலுக் கெதனை நான் கொடுப்பேன் என் 
பாடலில் கண்ணீர்த் துளிகொடுத்தேன்

அகலா அகலா அழகே,
அகிலா அகிலா உமையே!

எனக்குளில் நானே என்னைத் தேடி 
ஏங்கிக் கிடக்கும் இப்பொழுது
மனதுக்குத் தேவை முன்னே நகர்த்தி 
வாழ்வு கொடுக்கும் சிறுபடகு
உனக்கிது தெரிந்தும் உள்ளம் புரிந்தும் 
ஊமை போல நிற்பதென்ன
அனைத்தையும் காலம் சேர்க்கும் என்றால் 
அம்மா நானும் கற்பதென்ன?  (அகலா)

ஆறுகள் எல்லாம் கடலைச் சேரும் 
அம்மா என்வழி எதில்சேரும் 
மாறுதல் எல்லாம் முடிவில் நேரும்
வாழ்க்கை மாற்றம் எதில்நேரும்
ஏறிடும் மலையில் எதுஎன் உயரம்
எங்கே நிற்பது சொல்லிவிடு
தூறிடும் மழைபோல் கண்முன் வந்து 
சோர்வை நீயே கொன்றுவிடு! (அகலா)

பச்சயம் போல கவிதை என்னில் 
படைத்து வைத்த போதினிலும் 
இச்சமயத்தில் மௌனம் என்னை 
இழுத்து மூடும் நிலையென்ன 
உச்சிமயத்தில் சுடரும் அழகை 
உள்ளம் மாந்தும் நேரத்தில் 
நிச்சலனத்தில் புல்லாங் குழலாய் 
நெஞ்சம் இசைக்கும் கதையென்ன?  (அகலா)

சன்னிதி வந்தேன் சகலம் தந்தேன்
சரண்நீ என்று நான்விழுந்தேன் 
உன்னிதி கேட்கும் எண்ணம் கொண்டேன்
உன்னைக் கண்டதும் மெய்மறந்தேன்
என்விதி இன்னும் எப்படி ஆட்டும்
எழுதிக் கையில் கொடுப்பாயா? 
என்விதி அன்றோ என்பா டென்றே 
ஏங்கித் துடிக்க விடுவாயா?? (அகலா)
 
-விவேக்பாரதி
03-06-2022

Comments

Post a Comment

Popular Posts