சொற்கள் கூத்தாடும் திருப்புகழ்


-கவிமாமணி கனடா பசுபதி அவர்களது திருப்புகழ் அந்தாதியின் தொடர்ச்சியாய் எழுந்த பாடல்கள்-

குதிக்கும் கவிதைகளால் குன்றத்துக் வேலைத்
துதிக்கும் அருணகிரி சொற்கள் - மதித்து
தினந்தோறும் பாடுங்கால் தித்திக்கும் பூந்தேன்
மனந்தோறும் வீசும் மலர்ந்து! (1)

மலரால் அருச்சனை வார்க்காமல் சொல்லாம்
மலரால் முருகன் மணத்தாள் - குலவித்
திருப்புகழ் தந்த அருணகிரி நாதர்
குருப்புகழ் பாடல் குறி! (2)

குறியென்றால் வாழ்வில் குகனின்றாள் சேர்தல்! 
நெறியென்ன கேட்டாலென் நெஞ்சே - வெறிகொண்டு
சொற்கள்கூத் தாடும் திருப்புகழை நாள்தோறும்
கற்க கனிக கசிந்து! (3)

கசிந்துருகி கோயிலெலாம் காலால் நடந்து
இசைந்துருளும் சந்தம் இலங்க - விசைந்தருளிக்
கந்தமார்க்கம் காட்டிக் களித்தார் அருணகிரி
எந்தமார்க்கம் வேண்டும் இனி?  (4)

இனிக்கும் உரைக்கும் இயக்கும் இடிக்கும் 
தனிக்கும் நெருக்கும் தகிக்கும் - மனத்துள்
அருணகிரி நாதர் உருகிவழி செய்த
திருப்புகழை பாடுந் தினம்! (5)

தினம்பாடத் தித்திக்கும், சீர்பொருளைக் கற்றால்
மனம்பாடம் கற்று மலரும் - இனும்பாடு 
பாடென்று நாகேட்கும் பக்தித் திருப்புகழைத்
தேடென்று சொக்கும் செவி! (6)

செவிகுளிரச் செய்யும் திருப்புகழை, கந்தன் 
கவிகுளிரத் தந்த கனலைத் - தவங்குளிரப்
பாடுவார் ஆடுவார் பக்தி மிகவெய்தி 
கூடுவார் அன்பர் குழாம்! (7)

குழாமிட்டுக் கூடிக் குகன்புகழை ஓதும்
விழாவிற்கு வந்து வியன்றமிழைத் - துழாவி
அருணகிரி பாடுவார் அன்பர்கள் நாமோ 
சரணமொழி போட்டால் சதம்! (8)

தம்புரா கையில்லை தாளத்தை ஏந்தவிலை
நம்புந் தமிழே நடமிடக் - கும்பிடும் 
கைகளைக் கொட்டிக் கவிசெய்(து) அருணகிரி
மெய்களைந்(து) ஏகினார் வீடு! (9)

வீடுவரும்; எண்ணம் விரிவடையும்; நன்றாகப் 
பாடவரும்; செந்தமிழ்மேல் பக்திவரும் - தேடிவரும்
திண்டாட்டம் போக்கும் திவ்ய திருப்புகழைக்
கொண்டாடித் தீர்ப்போம் குதித்து!! (10) 

விவேக்பாரதி
09 ஜூலை 2022

Comments

Post a Comment

Popular Posts