சதுரங்க வாழ்க்கை


காலமாம் வெளியினில் கருப்புடன் வெள்ளையாய்
    கட்டங்கள் நிற்குதம்மா - அந்தக் 
கதையிலென் பாத்திரம் ஏதென்று தெரியாமல் 
    கணக்குகள் விக்குதம்மா!
பாலனாய்க் குமரனாய் மனிதனாய்க் கவிஞனாய்ப் 
    பலவேடம் போடுகின்றேன் - எனில்
பாடங்கள் சொல்கின்ற விளையாட்டில் என்னுடைய
    பணியென்ன தெரியவில்லை! 

ஓரடி நகர்கின்ற சிப்பாயும் ராஜாவும் 
    ஒன்றெனத் தோன்றுகிறார் - எனில் 
ஒருவரைக் காத்திட இன்னொருவர் போராடி
    உழைத்தாலும் வீழுகின்றார்
நேரடி நகர்கின்ற யானையின் பாய்ச்சல்போல்
    நிறையபேர் தோன்றுகின்றார் - அவர் 
நேரான பார்வையை மட்டுமே கொள்கிறார்
    நெளிவுசுழிவில் தோற்கிறார்

மும்மூன்று கட்டத்தில் வளைகின்ற குதிரைபோல்
    முயற்சியில் மாற்றிமாற்றி - சிலர் 
முன்வைத்த கால்போல பின்வைக்கவும் செய்து 
    மயக்கிக் குழப்புகின்றார்
தம்பாதை தம்போக்கு மந்திரி போல்சிலர்
    தரையினில் வாழுகின்றார் - அவர்
தம்பட்டம் செய்தாலும் சரியாக உதவாமல் 
    தண்டமாய் வீழுகின்றார்

எப்பக்கம் பார்ப்பினும் ராணியின் ராஜ்ஜியம் 
    எதிர்ப்பவர் நிலை பூஜ்ஜியம் - ஆக 
எவராய் இருப்பினும் ராணியை வீழ்த்தவே
    இயக்கம் தொடக்குகின்றார் 
உட்பக்கம் வெளிப்பக்கம் பகைசூழ்ந்த விளையாட்டில்
    எப்பக்கம் நான் சேர்வதோ? - இந்த 
உலகத்து சதுரங்க ஆட்டத்தில் எதிலென்றன் 
    உண்மையை நான் காண்பதோ??

-விவேக்பாரதி
27 ஜூலை 2022

Comments

  1. சொல்லும் பொருளும் சிறப்போ சிறப்பு.

    ReplyDelete

Post a Comment

Popular Posts