திருமலை தரிசனம்


-வேண்டல் பத்து-
(கூட்டிக் கொள்ள வேண்டி இறைஞ்சியது)

திருமலை நாதா உன்றன்
    திருப்பதி காணவே யாம்
விரும்பினோம் இதுதான் சின்ன
    விளையாடல் என நினைத்தா
திரும்பிய பக்கமெல்லாம்
    தடைகளை வைக்கின்றாய் நீ?
அரும்புநின் பாதம் காணா(து)
    அடங்கிடோம் அறிவாய் ஐயா! 

உன்மலைக் குளத்தில் வாழும்
    உருசிறு மீனாய் ஆக 
என்றமிழ்க் கவிஞன் கேட்க 
    எண்ணமாய் ஆக்கி வைத்தாய்!
தன்மகள் திருமணத்தை 
    சரிவர நடத்த எங்கள்
முன்னவன் தூது விட்டான் 
    முழுதுற நடத்தி வைத்தாய்!  

வேண்டிய பக்தருக்காய் 
    விதவித நாடகங்கள்
ஆண்டவா செய்த கீர்த்தி 
    அனைத்தையும் நூல்கள் சொல்லும் 
மீண்டும்யாம் சொல்லுகின்றோம்
    மின்னிடும் உன் பதத்தை
ஈண்டுயாம் காணாவிட்டால் 
    இருதயம் ஓய மாட்டோம்

திருப்பதி சென்று வந்தால்
    திருப்பமாம் சொல்லுகின்றார்
திருப்பமா கேட்டோம்? உன்றன்
    திருப்பதம் போதும் ஐயா 
அருளுளார் வழியில் எம்மை 
    அமைதியாய் அழைப்பாய்! இன்றேல்
பொருளிலார் ஆகிப் போவோம்!
    பொறுப்புளன் நீயே ஆவாய்! 

திடம்பெறு கடவுள் உள்ளார்
    திருவருள் தருவார் உள்ளார் 
விடம்பெறும் இறைவர் உள்ளார் 
    வியன்றலைப் பெறுவார் உள்ளார் 
இடம்பெறும் கடவுள் உள்ளாட் 
    இவர்களின் நடுவில் எம்போல்
கடன்பெறும் கடவுள் என்றால்
    கலியுகத் திறைநீ அன்றோ!

நகரமே வாசமாகி 
    நலத்திலே விழைவு கொண்டு 
சிகரமே ஏறி நின்று 
    ஶ்ரீதவழ் திருமார்போடு 
முகமெலாம் சிரிப்பு மின்ன 
    முழுதிரு மண் துலங்க 
தகித்திடும் அழகே உன்னைச் 
    சரணென பாரம் விட்டோம் 

எழுமலை தெரியும் காட்சி 
    இனிதுநீ நிற்கும் காட்சி 
வழிகளில் இயற்கைக் காட்சி 
    வனத்திலே வனப்பின் காட்சி 
உழைத்திடும் மக்கள் எங்கள் 
    உளத்தினில் அருளின் ஆட்சி 
வழமையின் அருள்வாய் ஐயா 
    வாழ்க்கையுன் விளையாட் டென்றே

மாலைகள் தவழும் உன்றன்
    மார்பினைக் காண வேண்டும்
காலையை மலர்த்தும் அந்தக்
    காணமும் கேட்க வேண்டும் 
வேலையை மறந்து நாங்கள்
    வேங்கட குளுமை காட்டும் 
சோலையில் சிறுகல்லாகி    
    தொழில்பெறும் வரமே வேண்டும் 

மலைகளின் அழகை எங்கள்
    மனதினில் பதிக்க வேண்டும் 
அலைமகள் மார்பா உன்றன் 
    அருட்பதம் ஜடாரி எங்கள்
தலைகளைத் தொடவும் நாங்கள்
    தணலென ஜொலிக்க வேண்டும்
கலையெலாம் வளர எங்கள்
    கவிதை நீ கேட்க வேண்டும்

துளசியின் வாசம் வீச 
    தூபமும் கமழ, உன்றன்
வளமையின் சிரிப்பு தோன்ற, 
    வார்குழல் ஜொலிக்க, எங்கள்
உளத்தினில் உன்னை ஏற்றி 
    உருப்படும் வழியைத் தேர்ந்து 
விளங்கிட வைப்பாய் எங்கள்
    வேங்கட நாதா போற்றி!!

-வழிநடைப் பத்து- 
(கூட்டிச் சென்ற நேரம் முணகியது)

திருமலை வாழும் திருமண வாளா திசையளந்துன்
அருமலை காணும் அடியவர் பாதை அமைதியுடன்
பெருமலைச் சல்கள் பிணித்திடா வண்ணம் பிழைக்கவருள்!
வருமலை அன்னார் வளம்பெறும் காற்றே வழித்துணையே!

மூலா எனவே முதுபெரும் பக்தன் முனைந்தழைக்க
காலால் விரைந்து கருடனைத் தூக்கிக் கடமைசெய்த
மாலா அழகிய வேங்கடம் வாழும் மலையரசா
ஏலா(து) அதுபோல் எளியேன் அழைத்தால் எதிர்ப்படுமே! 

மூவா யிரம்படி முன்னே நடக்க முயற்சியுடன்
தேவா உனது திருமுகம் காணும் சிரத்தையுடன் 
காவாய் எனவுன் கனிப்பெயர் சொல்லிக் கடமைசெய்வோம்
சேவா லயத்துன் திருவடி சேரும் திறமருளே!

படிகளில் குங்குமம் பக்தியில் வைத்துப் பணிவுடனுன்
அடிகளைக் கும்பிடும் ஆசையில் வந்தோம் அடியவரெம் 
மிடிகளைந்(து) எங்களை மீட்டிடு வாயொரு மின்னிடையை
நொடிகளை யாமலுன் நூதன மார்பில் நுழைத்தவனே! 

குங்குமம் மஞ்சள் குலவிடும் பாதை குறுகிவர 
சங்கமம் ஆகும் தரிசனத் தைமனம் சார்ந்திருக்க 
மங்களம் தங்கிடும் மாலவ நின்பேர் மனத்திருத்தி 
தங்கிடும் உன்றன் திருமலைக்(கு) ஏறத் திடமருளே!

கால்வலி நோகக் கருத்திருள் கொள்ளக் கடும்தோள்கள் 
மேல்வலி கொள்ள மிரண்டென் இதயம் மிகத்துடித்தேன்
கால்வலி ஏறி கடுகி நடந்துன் கழலுருவைப் 
பால்வலி போலப் பருகப் பலம்தா பரம்பொருளே! 

மூச்சும் இரைக்க முதுகு வலிகொள முன்வழிதான் 
ஆச்சர்ய மாக அளவினில் நீள அகத்துசுகம் 
பாய்ச்சும் உனது பதத்தினைக் காணப் படிநடந்தோம்
வீச்சும் நடையில் விரைவும் தெளிவும் விளையவையே!  

என்வினை மூட்டை எடுக்கக் கணம்தான் எனினுமதை 
உன்னருள் முன்னம் உருத்தெரி யாமல் உடைத்துவிட 
என்வழி மொத்தமும் என்னைச் சுமந்துநீ ஏறவிட்டாய் 
உன்சிறு நாடகம் உண்மையில் உத்தமம் உத்தமனே!

காத்திருக் கின்றோம் கடும்வலி யோடுன் கடைநிலையைப் 
பார்த்திருக் கின்றோம் பரந்தா மனேவுன் பதத்தைநெஞ்சில்
சேர்த்திருக் கின்றோம் செகத்தை மறந்தோம்! தினந்தினமும் 
வேர்த்திருக் கின்றவெம் வாழ்வில் திருப்பம் வழங்குகவே! 

கோவிந்த கோவிந்த கோவிந்த என்கிற கோஷமொன்றே
நோவிந்த தேகம் நெறிபெறும் மார்க்கம் நுவலுமெனச்
சேவித்துப் பொன்மலை சேர்ந்திடும் நேரம் செகம்ஜொலிக்க
ஆ!விந்தை யாகவுன் அற்புதத் தோற்றம் அரும்பியதே!!

விவேக்பாரதி
28-07-2022Comments

Post a Comment

Popular Posts