ஸ்ரீ கிருஷ்ண பஞ்சகம்


வாழ்வெனும் கடலிலே தினம்வரும் அலைகளில்
    வரிசையாய் வீழுகின்றேன்
வழுக்குவேன் சறுக்குவேன் மீண்டெழ முயலுவேன்
    மறுபடி வழுக்கி விழுவேன்
தாழ்வெனும் பாதையில் சோம்பலால் சேர்கிறேன்    
    தைரியம் அற்றுப்போவேன்
தலைவிதி என்றுநான் எண்ணுவேன் உன்னிடம் 
    தள்ளாடி மனு கொடுப்பேன்
ஏழ்மையின் பிடியினில் ஏங்குவேன் தூங்குவேன்
    என்றாலும் கலங்கவிலையே
ஏகாந்த நாதனே மோகத்தின் ராஜனே 
    என்னோடு நீநிற்கவே!

நம்பினார் வாழுவார் என்பதே எந்நாளும்
    நான்மறைத் தீர்ப்பானதாம்
நான்படும் பாடுகள் என்வினை மூட்டையின் 
    நல்லதோர் சேர்ப்பானதாம்
வெம்பினால் காக்கநீ விரையுவாய் என்பதை 
    வேதங்கள் சொல்கின்றதாம்
வெற்றிக்கு நீசொன்ன கீதையின் சாரத்தை 
    விரும்புதல் வழியென்பதாம்
அம்பினால் வீழ்ந்தவன் கண்முன்னம் வந்துநின்
    அவதாரம் காட்டும் குருவே 
ஆதார மூர்த்தியே சீதரா மாதவா  
    அடியனோடே நிற்கவே! 

சக்கரம் ஏந்தினாய், வேய்ங்குழல் ஏந்தினாய் 
    சங்கினை நீ ஏந்தினாய்
சரம்சர மாகவே புடவைகள் ஏந்தினாய்
    சத்திய மலை ஏந்தினாய்
அக்ரமம் நேர்கையில் தேரடி சக்கரம் 
    அதனையும் நீயேந்தினாய்
ஆநிரை பாலுடன் வெண்ணெய்யும் ஏந்தினாய்
    அடியனை என்றேந்துவாய்?
சிக்கனம் தெரியாமல் செல்வமும் இல்லாமல் 
    தீர்கிறேன் நொடி நொடிக்கு
ஸ்ரீகிருஷ்ண காந்தனே திரிலோக நாதனே
    சிறியனோ(டு) உடன் நிற்கவே!

ராக்கதர் உன்னிடம் பட்டதைப் போலநான் 
    ராவெலாம் நோவு கண்டேன்
ரசனையின் பெயரிலும் நட்பெனும் பெயரிலும் 
    ரணங்களே அதிகம் பெற்றேன்
காக்குமோர் கரம்வரும் என்றுதான் நாளெலாம் 
    கடமைகள் செய்யுகின்றேன்
கண்ணீரைத் தண்ணீரில் கரைக்கிறேன் விரைந்தோடக்
    கால்களில் வலு சேர்க்கிறேன்
வாக்குளே மந்திரம் ஆக்கிடும் வித்தையால் 
    வாழ்கிறேன் தேவதேவா
வழுக்கிடும் என்கரம் முழுக்கிடும் முன்னம்நீ
    வறியன் என்னுடன் நிற்கவே! 

நட்பினை வேண்டியே நாட்டினில் திரிகிறேன்
    நண்பரென் றொருவரிலையே
நாளுமென் தனிமையை உன்னுடன் தீர்க்கிறேன் 
    நாதிவே றெதுவுமிலையே
உப்பினைத் தின்றவன் அருந்திடத் தண்ணீரை 
    உதவுவார் எவருமிலையே 
உரைத்தேனே என்றுமுன் சொல்பவர் நான்படும்
    உள்வலி அறிவதிலையே
தப்பெனும் சேற்றினில் தவித்திடும் என்னிடம் 
    தருவதற் கென்னவுண்டு 
தகுதியே இல்லையென் றாலுமென் தலைவனே
    தளிருடன் நீ நிற்கவே!! 

-விவேக்பாரதி
19 ஆகஸ்ட் 2022

Comments

Popular Posts