மௌனப் புலம்பல்


நீச்சல் உயிர்க்கலை நீர்தொடா நாளும் நினைவிருக்கும்
பாச்சொல் திறனது போல எனநான் படித்துவைத்தேன் 
காய்ச்சல் அடைந்தவன் கண்ணை மறைத்திடும் காரிருள்போல்
ஏச்சுப் பெறக்கவி என்னில் மறையுமோ என்றமிழே!

ஏழை எனக்குனை ஏந்தி அளித்தனை, என்முனொரு 
பேழை திறந்தது போல விரிந்தனை, பொன்மணிகள் 
வாழக் கொடுத்தனை வண்மை படைத்தனை, வாய்த்ததெல்லாம் 
தாழச் சறுக்குவ னோதுவண் டேன்நான் தழுதழுத்தே

தழுத்தழுத் தென்நா தமிழை மறந்து தடைபடுமோ?
கொழுத்துத் தடித்து குழம்பித் தவித்துக் குழம்பிடுமோ?
முழுவதும் கற்ற முதுமை மரபுகள் முற்றுமறந்(து)
அழிவிடை போமோ அறியா துழகிறேன் ஆதரியே!

ஆதரித் தாய்வந்(து) அருளின் முகவரி அடைகொடுத்தாய்
காதலித் தாய்நான் கவிதைகள் கற்கக் கரம்பிடித்தாய் 
சோதரி, தாய்துணை தோழி இறைவியாய்த் தோன்றிநின்றாய்
பாதியி லப்பெரும் பந்தம் விலகுமோ பைந்தமிழே

பைந்தமிழ் தொட்ட பருவ வயதிலென் பாவமெல்லாம் 
நைந்தன வென்பது நான்கண்ட உண்மை; நடந்தகதை! 
சிந்தனை எங்கணும் செந்தமிழ் வாழ்ந்த சிறுவயதில்
அந்தமில் தெய்வ அரும்பதம் கண்டேன் அருளிதன்றோ

சிற்பக் கலைகள் செதுக்கப் பிறந்தவன் சிற்றளவாம் 
அற்ப வயிற்றை அமைதியில் வைக்கும் அமைப்பினுக்காய் 
விற்பனைக் கம்மி விதங்களைக் கொத்தும் வினைநுழைந்தேன் 
சிற்பியின் கற்பனைச் சிந்தை அதனால் சிதைவுறுமோ?

ஓங்கிய கற்பனை உள்ளெழும் சிந்தனை ஒவ்வொன்றிலும் 
தேங்கிய சொற்சுவை தேனின் பொருட்சுவை சேர்ந்துவர 
வாங்கிய மூச்சிலும் வார்த்தைகள் சந்தம் வடிந்திருக்கத் 
தூங்கிய போதிலும் சொற்கள் உளறித் துயின்றதுண்டே 

ஏனிவை இன்றைக் கிருப்பதில்லை என ஏங்குகிறேன் 
வானம் திடீரென வற்றிய தாக வதங்குகிறேன் 
கானம் தொலைந்ததோ காற்று விலகிக் கரைகிறதோ 
ஞானம் எனும்புது நாடகமோ சொல்லு நற்றமிழே!!

விவேக்பாரதி
23 ஜூன் 2022

Comments

Popular Posts