நீ தூங்கவே


நெஞ்சோரம் நீசாய்ந்து கிடக்கின்ற அழகை 
கொஞ்சாமல் போவேனோ கொண்டாட்ட மயிலே?
பஞ்சாரம் நானாக நீயென்னில் தூங்க 
சஞ்சாரம் அதுசொர்க்கம் சந்தோஷக் குயிலே!

தலைகோதி காதோரம் அசைந்தாடும் குழையை 
இலைபோல நானூதி இதமாக்கி வைப்பேன்!
சிலையான உன்மேனி சிரமங்கள் நீங்க
தலகாணி நானாகி உன் தூக்கம் சேர்ப்பேன்

இதயத்தின் துடிப்போசை நீகேட்க கூடும் 
அதுசொல்லும் மொழிகூட உன்பெயரே ஆகும் 
உதயத்தின் கதிரென்று நீகண்கள் வைத்தாய் 
மெதுவான மதிபோல உன்பார்வை வைத்தாய்

நீ தூங்க நான்பாடும் மௌனங்கள் ராகம்
நீ தூங்க என்மார்ப்பு தெய்வத்து மெத்தை
நீ தூங்க என்மூச்சு தென்றல்கள் கூட்டு 
நீ தூங்கவே நாளும் நான்பாடும் பாட்டு!!

-விவேக்பாரதி
09-08-2022


 

Comments

Popular Posts