வானநாடகம்


சிறுசிறு மென்நடை நீநடந்தே - கரைச்
    சிப்பிகளோடு பேசுகிறாய் 
விறுவிறுவென்றே அலைசினுங்கி - உன் 
    விரல்தொட முந்திப் பாய்கிறது 

அருகினில் வந்ததும் பேச்சிழந்து - உன் 
    அழகிய கால்களில் வெள்ளிகளாய் 
நுரையெனத் தீர்ந்து மறைகிறது - பின் 
    நுழைந்திட மறுஅலை எழுகிறது 

கடற்கரை எங்கிலும் இப்படியே - உன் 
    கால்படும் இடங்களில் கவிதைகளாய்
நடந்தவுன் சுவடுகள் சிரிக்கிறது - இந்த 
    நாடகத்தை வான் ரசிக்கிறது!

வான்
மண்ணெனப் பிறந்திட நினைக்கிறது - உன் 
    மலர்ப்பதம் தொடும்வரம் கேட்கிறது  
தண்ணீ ராகப் பிறந்தேனும் - உனைத் 
    தழுவிடும் ஒருவரம் வேட்கிறது!

வெறுமனே உன்னைப் பார்த்தபடி - உன் 
    விளையாட்டெல்லாம் வியந்தபடி 
நிறுவிய கல்லாய் இருப்பதனால் - வான் 
    நிம்மதி இழந்தே அழுகிறது!

அதில்,
ஒருசிறு மழைத்துளி கசிந்தவுடன் - நீ 
    ஒதுங்கி விடாமல் நனைந்திருந்தாய் 
பெருவரமாய் உனைத் தழுவியதாய் - வான் 
    பேரிடியாகிச் சிரித்தடடி!!

விவேக்பாரதி
03-09-2022

Comments

Popular Posts