தேர் இழுத்த தீரன்


நடந்து வருவது யாரடி - தமிழ் 
நாட்டுக் கவிஞன் பாரதி

அடிமைச் சேறும் மிடிமைப் புதரும்
    அடர்ந்து கிடந்த பூமியிலே
நொடி மின்னல்போல் கதிரைப் பாய்ச்சி 
    நுழையுது நுழையுது பாரதத்தேர்! 
வடத்தைப் பிடிப்பது யாரது! அடடா 
    வார்த்தை வடமாய் இருக்கிறதே  
தடத்தைப் பார்த்தால் ஆஹா காலடி 
    தணலைப் போலே ஜொலிக்கிறதே! 

நடந்து வருவது யாரடி - உயர் 
ஞானக் கனலாம் பாரதி

மானம் வீரம் ஞானம் எல்லாம் 
    மண்டிக் கிடந்த பூமியிலே 
ஈனம் என்னும் சொல்லின் பொருளே 
    இருண்டு கிடந்த கார்ப்பொழுதில்
மோனம் கலைக்கும் இசையோடிங்கே 
    முன்னே வருகுது பாரதத்தேர் 
தானாய் அதனை இழுத்து வருவது 
    தமிழ் கர்ஜிக்கும் சிங்கமடி!

நடந்து வருவது யாரடி - மறம் 
நாட்டுந் தமிழன் பாரதி

கவியும் இசையும் களிப்பும் சூழக் 
    காற்றில் அம்பாய் வருகுதடி
தவமும் வரமும் துணிவும் புகழும்
    தர்மத்துடனே பெருகுதடி!
எவரும் எதிரே நிற்கா வண்ணம் 
    எரியும் தழலாய் தேர்வரவு
அவனே அதனை இழுத்து வரவும்
    அண்டம் முழுதும் ஒளிநிறைவு 

நடந்து வருவது யாரடி - கவி 
நாயகன் எங்கள் பாரதி 

தேரைக் கண்டு பரவசம் கொண்டு 
    தேசத்தவர்கள் பாடுகிறார்
யாருக்கெல்லாம் பயமோ அவர்கள்
    அதிர்ச்சி கொண்டே ஓடுகிறார்
வேரடியெல்லாம் தண்ணீர் கொள்ள 
    வேட்கைச் சூரியன் கால்பதித்தான் 
பாரதி என்னும் பெயரொன்றாலே 
    படர்ந்திடும் வேட்கை நெல்விதைத்தான்! 

நடந்து வருவது யாரடி - சொல் 
நட்டு வளர்த்த பாரதி

அவன்போல் பலபேர் விதைத்தையே நாம் 
    அறுவடையாகக் கொள்கின்றோம்
தவம்போல் தம்மைத் தந்தவராலே
    சுவாசம் ஆசை பெறுகின்றோம்
எவரோ சொல்லும் கதைகள் கேட்டு 
    இயல்பை மறந்தால் எதுநன்மை? 
தவறும் சரியும் அவரவர் தீர்ப்பு
    தர்மம் அன்பு மிகவுண்மை!

நடந்து வருவது யாரடி - நம் 
நற்றமிழ்த் தலைவன் பாரதி! 

-விவேக்பாரதி
11-09-2022

Comments

Popular Posts