வல்லவளே நின்னருளே வாழ்த்து


எங்கோ இருந்தவெனை எப்படியோ கண்டெடுத்துத் 
தங்கத் தமிழ்த்தேர்த் தடங்கொடுத்து - மங்களமாய்ச் 
சொல்லளித்துப் பாடவைக்கும் சொக்கன் உடல்கொண்ட 
வல்லவளே நின்னருளே வாழ்த்து! 

சூலமெழ வில்லை! தாம்பூலம் துப்பவில்லை! 
பாலருந்த வில்லை! பணிதவெனை - மேலெழுப்பி 
செல்மகனே வெல்கென்று சேர்த்து மொழிசொன்னாய்! 
வல்லவளே நின்னருளே வாழ்த்து!
 
ஆற்றலெனச் சொல்வார்! அறிவென்பார்! ஆதியதன்
தோற்றமெனச் சொல்வார்! துதிசெய்வார் - காற்றிலுறும் 
எல்லாமாய் நிற்பவளே என்மனத்துக் கோவிலமர் 
வல்லவளே நின்னருளே வாழ்த்து!

விவேக்பாரதி
07-01-2018

Comments

Popular Posts