நினைவு அழுக்கு


காது மடல்கள் தூக்கி நிற்க
முன் துருத்திய முகம் 
நீள வாக்கில் இருக்க
இறைவன் வரைந்த அவனுக்கு 
வாலில்தான் இதயம்!

பூச்சொரியும் 
வீதி மரங்களின் நிழலில் 
அவனது மூத்திர எழுத்து 
எங்கள் தெரு முழுக்க 
அன்பின் எல்லைக் கோடுகளை 
நிரப்பி இருக்கும்!

பொன்மாலை ஒளியில் 
கொஞ்சம் காஃபிபொடி கலந்த 
கரும்பழுப்பாய்த் தெரியும் 
அவன் கண்ணுக்குள் 
என் உலகத்து பாஷை
எல்லாம் வருடல்கள்!

குரைத்தால் கடிக்காது.... 
என்ற பழமொழி
உண்மையாக்கும் பிரயத்தனத்தில் 
அதுவரை கடித்து
காயம் செய்யாததை எல்லாம்
சேர்த்து வைத்துப் புண்ணாக்கினான் 
லாரியில் அடிபட்டுக் 
காணாமல் போனபோது!

முழுக்கறுப்பும்
கரும்பழுப்புமாய்க் காணும் 
எல்லா அவன்களையும் 
அவனாகவே நினைத்துக் கடக்கிறேன்
ஏமாற்றிக் கொண்டுபோய் 
இறக்கவிட்ட துக்கத்தில் !

ஆங்கிலம் 
ஷேகி எனும் அவன் பெயரை 
அழுக்கென்கிறது! 
ஆனால் 
அவன் நினைவெனும் ரத்தத்தில் 
அழுக்காகி நிற்பதெல்லாம் 
நான்தான்!!

விவேக்பாரதி
25-09-2022

Comments

Popular Posts