பாஷையற்ற பாடல்


ஊடுருவும் பார்வையில் 
    உயிர் கசியும் வார்த்தையில் - நான்
மூடி வைத்த ஆசைகள் 
    முனகுவது கேட்குதா?

வியந்து நிற்கும் நொடிகளில் 
    விரல் பிசையும் வேர்வையில் - மனம் 
தயங்கி நிற்கும் நினைப்புகள்
    தவிப்பதுதான் கேட்குதா?

ஓரம் வீசும் பார்வையில் 
    உள்ளிறங்கும் மூச்சினில் - எனை 
ஈரம் செய்த கனவுகள் 
    இரையும் ஒலி கேட்குதா?

தாழ்ந்து போகும் கண்களில் 
    தடுக்கி வீழும் பேச்சினில் - உயிர் 
ஆழ்ந்திருக்கும் பயங்களின்     
    அதிர்வலைகள் கேட்குதா?

ஓசை இன்றி பேசினேன் 
    ஒதுங்கி நின்று வாழ்த்தினேன் - என் 
பாஷையற்ற பாடலின் 
    பல்லவிதான் கேட்குதா?

நேரம் கெட்ட வேளையில் 
    நெஞ்சம் இந்த வாடையில் - ஓர்
பாரம் ஏறிச் சாயுதே 
    பாவை உன்னைத் தேடுதே! 

கண் திறந்து பார்த்திட 
    கைக் கொடுத்து காத்திட - நீ 
உண்மை இல்லை ஆயினும் 
    உறக்கம் கொள்ளை போனதே!!

-விவேக்பாரதி
04-09-2022

Art by - Manojith Krishnan

Comments


 1. அருமைடா தம்பி!

  பாசையற்ற பாடலா?
  பருவத்தீயின் தேடலா?- உயிர்
  ஓசைகொண்ட வார்த்தையில்
  ஒளிந்ததென்ன ஊடலா ?

  முகநூல் கருத்தே இங்கும் பதிகிறேன் இனிய வாழ்த்துகளுடன் இவன்

  ReplyDelete

Post a Comment

Popular Posts