பிடித்த பாடல் எது??


பிடித்த பாடல் எதுவென்று 
கேட்கப்படும் கேள்வி 
கடலுக்குள் தள்ளி விட்டு 
துளி பொறுக்கச் சொல்வதாய்த் தெரிகிறது! 

கடலில், 
ஆழ்கடல் அழுத்தம் பிடிக்குமா?
மேல்கடல் காற்று பிடிக்குமா? 
கரைதரும் வாசம் பிடிக்குமா? 
எனப் பகுத்தறியுமா மனத் திமிங்கலம்?

மனிதர் வாழ்க்கைபோல் 
அலைந்தோடித் திரியும் மேகத்தில் 
எந்தத் துளி விழுந்து 
முத்தாகும் தெரியுமா? 

குடுவை நிரப்பிக் கிடக்கும் 
பேனா மையில் 
எந்தத் துளி 
இந்தக் கவிதையின் 
உயர்காந்த வரியை எழுதிவிடும் என 
எவர் சொல்லக்கூடும்? 

வளைபோட்டு வாழும் 
சிறுவோட்டு நண்டு 
எத்துளியைப் பிடித்துக்கொண்டு 
கடலோடு போகும்? 

படர்ந்து சிரித்திருக்கும் 
மலர்க் கிரீட பனித்துளிகளில் 
எத்துளியில் சூரியனின் 
தாகம் தணிக்கப்படும்? 

நங்கூரத்தைக் 
கடலில் வீசியெறிந்துவிட்டு 
பாட்டுக் கடலோடும் என் பயணத்தில் 
எந்தத் துளிக்கடியில் நிற்பேனென 
தவறியும் கேட்காதீர்கள்! 
கப்பலே உடைந்தாலும் 
மிதவையாய்த் தொடருவேன் நான்!!

விவேக்பாரதி 
09-09-2022

Comments

Popular Posts