அடிநாதம்


தீராதோடும் ஓட்டத்தில்
    திக்கித் திணறி ஓடுகிறேன்
திரும்பிப் பார்க்கும் திசையெல்லாம்
    தீயே துரத்தக் காண்கின்றேன் 
வாரா இலக்கின் வாசத்தை
    வழியாய் வைத்தே நடக்கின்றேன்
வண்ணம் இருட்டு வெளிச்சமெலாம்
    வந்து போகப் பார்க்கின்றேன்! 

மேகம் என்போல் வானத்தில்
    விளையாட்டாக மிதக்கிறது
விருட்சம் பிரிந்த இலையொன்று
    வினைகள் என்போல் செய்கிறது!
வேகம் எடுக்கும் காட்டாறு
    விதிகள் எல்லாம் முன்னுடைத்து
வேறே உலகம் இருக்குமென 
    விரும்பி என்போல் பாய்கிறது!

யாருக்காக சேர்ப்பதென்றும்
    யாருக்காக உழைப்பதென்றும்
அறியா எறும்பும் என்னைப்போல்
    அணுவும் சோராதுழைக்கிறது
தேருக்கடியில் தெருவோரம் 
    தெரிந்தும் தெரியாக் கருநிழலாய்
தேங்கித் திரியும் ஓரெருமை 
    சோம்பி என்போல் கிடக்கிறது

முதிர்ச்சிக்கு எதிராய் இளையமனம்
    முன்னால் பொருதி நிற்கிறது
மூளைப் பேச்சும் மனச்சொல்லும்
    முந்தி முந்தி ஒலிக்குறது
அதிர்ச்சி ஏதும் அதிர்வதில்லை 
    ஆழ்ந்த மௌனம் பிடிக்கிறது
அனுபவித்தே அறிவதெனும்
    அடிநாதம் மிக இனிக்கிறது!!

-விவேக்பாரதி
22-10-2022

Comments

Popular Posts