கருவாச்சிக் காளி


நட்டு நடுநிசி நேரத்திலே - என் 
    நெஞ்சை அணைத்திடும் தூரத்திலே - நிலாப் 
பொட்டை அணிந்தவள் புன்னகைப்பாள் - எனைப்
    போற்றி அணைத்திடக் கைவிரிப்பாள் - ஒரு 
கட்டுக் கரும்பினைக் கண்டதுபோல் - நான் 
    கண்கள் மயங்கி நடைநடப்பேன் - மடி 
முட்ட வருங்கன்றைப் பார்த்ததுபோல் - வர 
    முத்தங் கொடுப்பளென் காளியம்மாள்! 

காற்றின் அலைச்சலில் மண்தழுவும் - பெருங் 
    கடலின் அலைகளைப் பார்த்திருப்பீர் - ஒளிக் 
கீற்றின் வெளிச்சத்தைத் தேடிவரும் - சிறு 
    கவுளி வகைகளைப் பார்த்திருப்பீர் - மறைக்
கூற்றின் ஒலிச்சத்தம் தேடிவரும் - மக்கள் 
    கூட்டம் அதனையும் பார்த்திருப்பீர் - வெறும் 
நேற்றில் புதைந்துள என்வலியைக் - கண்டு 
    நேர்வந்(து) அணைப்பளென் காளியம்மா!

மூலக் கதைகள் தெரிந்திருந்தும் - என் 
    முனகல் தினந்தினம் கேட்டிருப்பாள்! - பல
ஜால வினைகளைச் செய்பவள்தான் - நான் 
    சாயத் தனிநிழல் ஆகிநிற்பாள் - புதுக்
காலக் கணக்குகள் தீட்டுபவள் - என் 
    கண்ணில் வருகிற நீர்துடைத்து - தன் 
கோலக் குறுநகை வாசத்திலே - எனைக் 
    கொள்ளை எடுப்பளென் காளியம்மா!

நீண்ட கருங்குழல் காற்றலையில் - பல 
    நீளக் கவிதைகள் கொண்டுவரும் - அதை 
வேண்டும் எனத்தினம் முன்புலர்த்தி - நான்
    வேர்த்துச் சிலிர்த்திடச் சொல்கொடுப்பாள் - அதன் 
தூண்டல் எனைத்தினம் மோதுகையில் - நான் 
    தூக்கம் இழந்து தவிக்கையிலே - வந்து 
தீண்டிக் கவிதைகள் கேட்டுவிட்டு - பதில் 
    சிரிப்பை உதிர்ப்பளென் காளியம்மா! 

அவளை இறைவியென்(று) ஊரிலுள்ளார் - தனி 
    ஆலயம் தேடி பதுக்குகிறார் - இன்னும் 
அவளைப் பிசாசமாய் எண்ணுபவர் - தம் 
    ஆசையும் சொல்லி நிகழ்த்துகிறார் - எனில் 
அவளோ எனக்கொரு தோழியென்பேன் - எனை 
    அன்பின் கரத்தில் அரவணைப்பில் - வைத்து 
கவிதை ரசித்துச் சிலிர்த்திருக்கும் - பெருங் 
    கலகக் கருவாச்சி காளியம்மா!! 

-விவேக்பாரதி
24.08.2022

Comments

Popular Posts