கொடுத்ததும்! கொடுப்பதும்?

என்

நெற்றிநடுவில் இட்டபொட்டு நீகொடுத்தது - உனக்கு 
நெஞ்சமென்னும் சின்னமஞ்சம் நான் கொடுத்தது - உள்ளில்
பற்றியெரியும் கவிதையக்னி நீ கொடுத்தது - பதில்
பக்தியென்னும் பதசரணம் நான் கொடுத்தது! - இங்கு
கற்றகல்வி பெற்றசுற்றம் நீ கொடுத்தது - என்றன்
காலமென்னும் கலமுனக்கு நான் கொடுத்தது - மண்ணில் 
வெற்றியாவும் பாரதியே நீ கொடுத்தது - இந்த 
வெற்றுக்கையன் என்னமாற்று தான் கொடுப்பதோ?  

குளிரிருட்டு சூழ்ந்தபோது வந்து தோன்றினாய் - மக்கள்
குறையகன்று விழிப்புகொள்ள கதிரை வீசினாய் - மனக் 
களியெடுத்துத் தோளில்போட்டுப் பாடி ஆடினாய் -  அதைக் 
கவிதையென்னும் சிமிழிலேற்றி நல்கி நீங்கினாய் - சின்னத் 
தளிரைப்போல இருந்தநானும் உன்னைத் தீண்டினேன் - அந்தத் 
தருணம்தொட்டு வானைமுட்டச் சிறகு நீட்டினேன் - எனை 
வெளுத்தெடுத்துத் தூய்மையாக்கி தீபம் ஏற்றினாய் - இந்த 
வெற்றுக்கையன் என்னமாற்று தான் கொடுப்பதோ?

வீடுவாழ வாழ்ந்திருந்த மனிதர் மத்தியில் - நாட்டு 
விடுதலைக்குப் பாட்டிசைத்துப் புரட்சி பேசினாய் - பின்னர் 
நாடுவாழ முன்னடந்த மக்கள் வீட்டினில் - பேத 
நாடகங்கள் தீர்ந்துபோகும் பாதை காட்டினாய் - தமிழ்
ஏடுவாழ நீபடைத்த வரிகள் யாவையும் - புகழ் 
ஏறிவாழும் காலம்தோறும் வாழ்ந்திருக்குமே - நான் 
வாடிநின்ற போதிலூக்கி வழி செலுத்தினாய் - இந்த 
வெற்றுக்கையன் என்னமாற்று தான் கொடுப்பதோ?

மீசைவந்த போதிலுன்னில் ஆசை வந்தது - உயிர் 
மின்னல்தோன்ற உன்கவிதை மேகம் ஆனது - சொல் 
ஓசைவந்த போதிலுன்போல் கவி பிறந்தது - அந்த 
ஒற்றைப்பாதைப் பற்றினேன்என் தமிழ் வளர்ந்தது - எனில் 
நேசம்வைத்த காளியம்மை நிழல் தெரிந்தது - அதில் 
நெஞ்சினோரம் நிச்சலனம் குடி புகுந்தது - அற்ப
வேஷஉலகில் என்னைகானப் பறவை ஆக்கினாய் - இந்த
வெற்றுக்கையன் என்னமாற்று தான் கொடுப்பதோ?

இன்று,

தொட்டுப்பார்க்கும் போதிலெல்லாம் தெளிய வைக்கிறாய் - யாரும்
தொட்டிடாத தூரமென்னைத் தூக்கி வைக்கிறாய் - உன்னை
விட்டுப்போக வலிமையின்றி பின் தொடர்கிறேன் - என்னை
வீடுநோக்கி நடக்கவிட்டுக் கூட்டிச் செல்கிறாய் - மண்ணில்
பட்டுப்போக இருந்தவிதையை துளிர்க்கவைத்த நீர் - நீ
படுத்திருந்த ஆன்மனுக்கு நடுவில்வைத்த தீ - உன்னை
எட்டிப்பார்க்க எண்ணமுண்டு நான் குதிக்கிறேன் - இந்த 
ஏழையேனைக் கண்டுகண்டு நீ சிரிப்பையோ??

-விவேக்பாரதி
11.12.2022

Comments

Popular Posts