படகும் சிறகும்


மனமோ சிறு படகு
உன் நினைவே பூஞ்சிறகு!
உடலோ வெறும் மெழுகு
உன் திரியே அதில் அழகு

கனவும் நனவும் கலந்து மயங்கும் 
   காரிருளில் உன் வரவு
கவிதை என்னும் புயலின் நடுவில்
   காதல் கொள்ளும் உறவு
எனைநான் உனக்குத் தரும் வேளையிலே
   எதுநான் எதுநீ இயம்பு,
எதுநான் எனினும் எல்லாம் நீயாய்
   இலங்கிக் கலங்கி முயங்கு

நொடி எல்லாமும் உன்றன் நினைவு
   நுகர்ந்தால் வளரும் நிலவு
நெருங்க நெருங்க விலகும் தொலைவு
   நெருப்பில் குளிர் உன் வடிவு
படிபோல் வானில் ஏற்றி இறக்கும் 
   பழக்கம் உனக்கும் இயல்பு,
பகலிரவெல்லாம் என்னை மறக்கப்
   பனிபோல் நிறைந்து முயங்கு

நிலவுப் பாதை தெரிகிறது
   நினைவின் பயணம் தொடர்கிறது
கலகம் எல்லாம் அறுகிறது
   கண்ணீர் மழையாய் விழுகிறது
இலைகள் கூட பூக்கிறது
   இதயம் கூட வேர்க்கிறது
பழைய வானம் புலர்கிறது
   பாடல் ஒன்று நிறைகிறது!!

மனமோ… 

-விவேக்பாரதி
20 டிசம்பர் 2022

Comments

Popular Posts