ஒருமுகப்படு மனமே


ஒருமுகப்
 படுமனமே - நாளை 
   உனக்கே உதவுமது
தெருமுகத்(து) அலையாமல் - தெளிவுத் 
   தேரை அருளுமது!

கிளைக்குக் கிளைதாவி - உனக்குக் 
   கிடைக்கும் சுகம்,எனிலும் 
விளையும் வலியதிகம் - ஓய்வு 
   வேண்டும் அதையுணர்வாய்!

அடங்கி இருப்பதுபோல் - பெரிய 
   ஆற்றல் எதுவுமில்லை!
மடங்கி இருப்பதனால் - கத்தி 
   மழுங்கப் போவதில்லை!

ஒருமுகப்படு மனமே

வானே அளந்தாலும் - சிறகு 
   வலித்தால் தரைவரணும்!
தேனே கிடைத்தாலும் - அதுவும்
   திகட்டும் காலம்வரும்!

பதுங்கல் புலிக்கழகு - மரத்தின் 
   படைப்போ சிறுவிதைதான்
ஒதுங்கும் மணல்துகள்கள் - நாளை 
   உயரும் மலைச்சிகரம்

ஒருமுகப்படு மனமே!

கவலைக் கடல்விழுந்தால் - பதறிக் 
   கைகால் அடிக்காதே
அவநம்பிக்கைக்குள் - அதுவே
   அழுத்திக் கொண்டுவிடும்!

மூச்சை மெதுவாக்கு, - சிந்தி
   மூளை தெளிவாக்கு
நீச்சல் தேவையில்லை - மனமே
   நீயாய் மேலெழுவாய்

ஒருமுகப்படு மனமே

அடுத்தவர் செய்கையினால் - உனக்குள் 
   அதிர்ச்சி பிறக்காது 
படுத்ததும் தூக்கம்வரும் - உன்றன் 
   பார்வையில் மாற்றம்வரும்!

உன்னிலை உணர்ந்திடலாம் - எல்லா 
   உணர்வும் புதுமைபெறும் 
தன்னிலைத் தெளிவுவரும் - அனைத்தும் 
   தியானம் வழங்கிவிடும்!!

ஒருமுகப்படு மனமே!

-விவேக்பாரதி
27 டிசம்பர் 2022
தியான நாள் 3

Comments

Popular Posts