மண்செழிக்க வீழ்ந்தவிதை பாரதிமண்செழிக்க வீழ்ந்தவிதை பாரதி - அது 
மரமாய் விரிந்தபுதிர் பாரதி 
எண்ணத்தில் வைத்தசுடர் பாரதி - தனை 
எரியாய் எரித்தநிழல் பாரதி 
கண்ணுக்குள் காந்தமெங்கள் பாரதி - தமிழ்க் 
கவிதைக்குப் புதுச்சிறகு பாரதி 
தண்ணீரில் பற்றும்தீ பாரதி - தொடத் 
தண்ணெனும் மின்சாரம் பாரதி

அரசியலில் அற்புதன்தான் பாரதி - தனி
ஆன்மிகத்துத் தத்துவனும் பாரதி
நிரந்தமாச் சொல்லலழகன் பாரதி - பெரும் 
நிச்சலனப் புயற்சீற்றம் பாரதி
சுரமிசைத்த வீணையெங்கள் பாரதி - அதில் 
சூடுவைத்து விழிப்புதந்த பாரதி
வரமெனவே வந்ததவம் பாரதி - நம் 
வாழ்க்கைக்குப் பாதையந்த பாரதி!

ஆதியொளி கண்டவனாம் பாரதி - அதற்கு
ஆணைபல போட்டவனும் பாரதி 
போதைதரும் சொற்கலைஞன் பாரதி - தனி
போதநிலை விற்பனனும் பாரதி 
நாதவெள்ளம் நிற்குமணை பாரதி - எலாம் 
நானெனவே சொல்லுமொழி பாரதி
வேதனையில் புன்சிரிப்பு பாரதி - சோம்பும்
வேளையிலே சாட்டையடி பாரதி

மனைவிக்குள் சக்தியுரு கண்டவன் - தன் 
மார்போடு கழுதையை அணைத்தவன்
கனவுக்குள் தேரோட்டிச் சென்றவன் - அதில் 
கண்டவற்றில் ஞானரதம் சொன்னவன்
தினந்தினமும் தேய்ந்தே வளர்ந்தவன் - உள்ள 
திக்கணைத்தும் மூலையிலே கண்டவன் 
வினைகளினால் காலத்தில் நின்றவன் - ஒளி 
வீதிகளில் வந்தே நடந்தவன்!

வேதத்தை எளியதமிழ் செய்தவன் - நாட்டு 
வேள்விக்குள் தன்வியர்வை பெய்தவன்
பூதங்கள் தானென்(று) உணர்ந்தவன் - ஒரு 
புல்லாங்குழல்போல் உழைத்தவன் 
காதலையும் தெய்வீகம் செய்தவன் - இந்த 
கலியுகத்தில் கவிதைமழை பெய்தவன்
சேதமற்ற பாரதத்தைக் கேட்டவன் - அதைச்
செய்யுமச்சில் தனையுருக்கிப் போட்டவன்!!

-விவேக்பாரதி
05-12-2022

Comments

Popular Posts