இருநிலை


வெறுக்கிறாயா
 விலகிவிடு
விருப்பம் என்றால் நெருங்கிவிடு
வெறுப்பும் விருப்பும் கலந்து குழப்பி
விளையாட்டெல்லாம் செய்யாதே

அழுக்கென்றால் எனைத் தள்ளிவிடு
அழகே என்றால் அள்ளியெடு
அழுக்கில் அழகாய்அழகில் அழுக்காய்
அடுக்கு மொழிகள் பேசாதே

உறவென்றால் வா முத்தமிடு
பிரிவென்றாலோ எத்திவிடு
உறவே பிரிவாய்பிரிவே உறவாய்
உணர்வைப் பித்தன் ஆக்காதே

கனவென்றால் நீ கவியாகு
நனவென்றால் புதுப் பாடம்தா
கனவும் நனவும் கூடிக் களித்துக்
காலக் கிறுக்கன் ஆக்காதே

பூவென்றால் எனைச் சூடிக்கொள்
புழுவென்றால் எனை மிதித்துக்கொல்
நோவேன் என்று நீயாய் எண்ணி
நூறு தோற்றம் மாற்றாதே

தோழமை என்றால் கட்டிக்கொள்
தொந்தரவென்றால் எட்டிச்செல்
தோழமைக் கண்ணில் தொல்லைப் பார்வை
தோய்த்துப் பார்த்துத் தொலைக்காதே

சாமி என்றால் வாழவிடு
சாத்தான் என்றால் வீழவிடு
பூமி மேலே நன்றில் தீதில்
புரட்டிப் புரட்டி எடுக்காதே

நடுவில் எடைக்கோல் நீயாகி
நாடகம் செய்யும் லீலையினால்
இடதும் வலதும் எனையே வெட்டி
எடையைச் சமனில் வைக்கின்றேன்

சமனில் உண்மை இருப்பதிலை
சத்தியம் ஊர்க்குப் புரிவதில்லை
அமைந்த பிறப்பே சமனில் இல்லை
அறிவாய் அடைவாய் ஓரிடமே!! 

-விவேக்பாரதி
28 டிசம்பர் 2022
தியான நாள் 4


Comments

Popular Posts