உங்க சொல்! என் குறள் - 2


(Mahad Productions இன் ‘பயணம்’ கவிதைக் கூடலில் நேயர்கள் கொடுத்த சொல்லுக்குப் படைத்த குறள்கள்)

அழகு-

காகிதம் பேனா கலந்த நெருப்பிலுரு
வாகும் கவிதை அழகு!

புன்னகை-
 
புன்னகை போலோர் புதிரில்லை நெஞ்சுக்குள்
மின்னல் படைப்ப தது

வாழ்க்கை-
 
வானுக்குக் கீழே வளரழகு வாழ்க்கையில் 
நானெந்த மேக நகர்வு?

வானவில்-
 
வில்வளைக்கும் யாவும் விசைபெறுமாம் வானத்தின் 
வில்வளைத்த அம்போ நிறம்?

சிந்தனை-
 
உன்றனை என்றனை இன்றினைச் சேர்த்திட்ட 
சிந்தனை தன்னைநீ வாழ்த்து! 

டீக்கடை-
 
வாழ்க்கை வசந்தமாய் வாய்த்தொரு சொர்க்கத்தை
டீக்கடை என்றால் தகும்!

காய்ந்தநீர்-
 
காய்ந்துநீர் இன்றி கழனிவாடும் நேரமெலாம் 
சாய்ந்துபோம் இந்த சகம்! 

இரவு- 

இரவென்றால் என்ன இருட்டா? கனவின் 
வரவுக்கு வாய்த்த விரிப்பு! 

ஆனந்தக் கண்ணீர்-

ஆனந்தக் கண்ணீர் அகம்விட் டெழுகையில் 
ஞானங்கள் தோற்பும் நயம்

காதல் -

நான்மறையும் ஆன்மிகம் நல்லஎன் காதலே
நான்மறைய இல்லையே நாண்

தனிமை-

தனியேதான் வந்தோம் தனிப்போவோம் ஆனால் 
தனித்தில்லை தோழரே நாம்

முலை-

முலைகடித்த இன்பத்தில் மூச்சுவிட வில்லை 
தலைமார்பில் சாய்த்த தளிர் 

வண்ணம்-

வண்ணத்திற் கெல்லை வரம்புண்டோ? கண்மூட 
எண்ணத்தில் பூக்கும் உலகு

வளையல்- 

கலகலக்கும் கைவளையின் காதல் விழைவேன்
உளமுருகி ஓடும் விதம்

காமம்-

தொட்டுத் தொடங்கித் தொலைந்து வியர்வைகள் 
விட்டுக் கலக்க விழை

மோகம்-

முனகிடும் உச்சத்தில் மூச்சிறைத்த போது 
மணந்தநம் தேகம் மலர்

ஆழி-

ஆழத்தின் இன்பத்தை ஆழியென்று சொல்லிவைத்தார்
வாழியஃ துள்ள மனம்! 

-விவேக்பாரதி
19.03.2023

Comments

Popular Posts