முதல் சேலைப் புன்னகை


அணியம் அறக்கட்டளையின் ‘குயர் கஃபே’ நிகழ்ச்சியில் படைத்த கவிதை

அதுவொரு மதியப் பொழுது - எனை
அண்டிவந்தாள் ஒரு நிலவு - அவள்
கதவடைத்ததாய் நினைவு - நான்
காணவில்லை அப்பொழுது! 

வீட்டில் ஆளற்ற தனிமை - உடை
விலங்கை நான் தீர்த்த நிலைமை - ஒரு
கூட்டில் கிளிபார்த்த இனிமை - எனக்
கொஞ்சிநின்றாள் அப் பதுமை! 

என்ன இப்போது என்றேன் - நான் 
ஏங்கி மிகநாணி நின்றேன் - அக்
கன்னி எனைத்தொட்டுத் தூக்கி - உன்
கனவு நிறைவேற என்றாள் 

தலையைப் புரியாமல் ஆட்ட - அவள்
தன்கையை முன்பு நீட்ட - அதில்
கலகலத்தொரு புடவை - நல்ல
கறுப்பு வண்ணத்தில் அழகை! 

பார்த்து மகிழ்ச்சியில் கண்கள் - நீர்
பளபளக்க நான் நின்றேன் - எனைச் 
சேர்த்தணைத்த என் தோழி - வா 
சேலை கட்டுவோம் என்றாள்! 

தங்க நிறத்திலோர் ரவிக்கை - உடன்
தகுந்த பாவாடை நகைகள் - என 
அங்கம் எனதாசை உணர - அவள்
அடுக்கிக் கொண்டுவந்திருந்தாள் 

முதலில் முடிபோட்டு செருக - என் 
இடையை லேசாகத் திருக - நான் 
குதித்து நாணத்தில் மருக - அவள் 
குழைந்து எனைப்பார்த்து உருக 

ஒருமுனை சேலையின் உட்புறம் வைத்தெனை
ஒருமுறை சுற்றுகிறாள். - ஆகா
உலகை மறக்கின்றேன் - இன்
னொருமுனையைத் தன் பல்லால் கவ்வி
இருமுறை சுற்றுகிறாள் - அம்மா 
இதயம் குழைகின்றேன்! 

மிஞ்சிய சேலையைக் கைவிரல் இரண்டில்
மீட்டி மடிக்கின்றாள் - ஐயோ
மின்னல் படைக்கின்றாள் - பின்
எஞ்சியதெல்லாம் ஒன்றாய்ச் சேர்க்க
எடுத்துத் தொடுக்கின்றாள் - இடையே
என்னை ரசிக்கின்றாள்! 

முடிவினில் துணியை முறையில் அடுக்கி
முன்புறம் செருகுகிறாள் - அடடா 
மூர்ச்சை அடைகின்றேன் - பின் 
எடுப்பாய்ப் புடவையின் தலைப்பை மடித்து
என்மேல் சூட்டுகிறாள் - புதிதாய்
என்னை உணர்கின்றேன்! 

பின்னோர் இருக்கை அமர்த்தி ரவிக்கை
பின்னால் முடிபோட்டாள் - என் 
பெண்மை எடைபோட்டாள் - அவள்
தன்னரும் விரலால் என்முகம் அழகாய்த்
தழுவி எழில்போட்டாள் - கண்ணில்
தரமாய் மைபோட்டாள்! 

காதில் ஜிமிக்கியை மாட்டிவிட்டாள் என் 
கனவினைப்போல் என்னை ஆக்கிவிட்டாள்
ஏதும் பதிலின்றி விக்கிவிட அவள் 
என்னைக் கண்ணாடி முன் நிற்கவிட
 
கண்ணில் வழிந்தன நீர்த்துளிகள் எனில்
கன்னத்திலோ தெய்வப் புன்னகையாம் 
பெண்மை வெடித்தது பேரழகில் வந்து
பேணியவள் என் பார்வதியாம்! 

கன்னத்திலும் ஒரு பொட்டுவைத்தாள் அதில்
கால இருட்டினைத் தொட்டுவைத்தாள்
எண்ணத்திலும் இனி செய்கையிலும் அச்சம்
ஏதுமில்லை என நட்டுவைத்தாள்! 

வானவில்லில் இல்லாத வண்ணச் சேலை 
வாழ்க்கையிலே முதன்முறையாய் சூடிக்கொண்டு
நாணனிந்து பூத்தகதை சொன்னேன்! அந்த
நயமுணர்வோர் இன்பமுடன் ரசிக்க, ஆனால்
ஏனணிந்காய் என்றெண்ணைச் சினப்பாருக்கும்
ஏ!சீ!சீ! என்பார்க்கும் ஒன்றே சொல்வேன்!
ஊனணிந்த உயிருக்குப் பால்கள் இல்லை
உடைகளுக்குள் எப்போதும் பேதம் இல்லை!!

-விவேக்பாரதி
04-03-2023

Comments

Post a Comment

Popular Posts