நான் யார்?


(கவிஞர் சாந்தினி எழுதிய ஆங்கிலக் கவிதை ஒன்றின் மொழிபெயர்ப்பு)

என்னைச் சுமப்பது எளிதல்ல, 
என் பலம் புவியுடையது!
வெறும் ஒற்றைக் கையில்
என்னையும், 
என் நினைவுகளையும், 
தூக்கிவிட முடியாது!

என் தோற்றம் பார்க்கிறீர், 
அதன் அடுக்குகளைக் கண்டு 
என்னை அறிந்துகொண்டதாய்க் 
கொக்கரிக்கிறீர்! 
உறிக்கவும் பார்க்கிறீர்!
ஆனால், 
நீங்கள் உறிக்க உறிக்க
இன்னொன்று 
இன்னொன்று
இதோ ஒன்றென
வளர்கின்றன அடுக்குகள்!

முடிவில் மூச்சிறைக்க
என்னை முழுதுரித்தால் 
மிஞ்சிக் கிடப்பதென்பது 
ஏதுமில்லை!
நானோ
நீங்கள் உணர மறுத்த அறிவீனத்தைப்
பரிகசித்தபடி 
காற்றில் சிரிக்கிறேன்..
ஆம் அனைத்தையும் 
ஊடுருவிச் செல்லும் காற்றாய்!

இப்படிக்கு 
முட்டைக்கோஸ்!!

-விவேக்பாரதி
23.03.2023

Comments

Popular Posts