என்னருகே வாடாதே!!


எங்கோ மலர்ந்து எங்கோ கனிந்து 
என்கை அடைந்த புதுமலரே - உன் 
இளமை எனக்குத் தாமலரே  - ஒளி 
தங்கும் உனையே பார்த்துச் சிலிர்க்கும் 
தருணம் எனக்குத் தேன்மலரே - நீ 
தெம்பை அருளும் வான்மலரே!

வியர்வை சூளும் நாளில் என்மேல் 
வியக்கும் மணத்தை நீபெய்வாய் - நான்
வேர்போல் உணர நீசெய்வாய் - தினம் 
முயலும் பொழுதில் கண்ணால் சிரித்து 
முன்னால் ஊக்கும் செயல்செய்வாய் - அந்த 
முறுவலினாலே மையல்செய்வாய்!

ஒருநாள் தானே வாழ்வெனும் போதும் 
ஓயாமல் நீ சிரிக்கின்றாய் - அந்த 
உவகையிலே ஒளி நிறைக்கின்றாய் - கணம் 
திருநாளாக்கித் தீரும் முன்னம்
தித்திப்பை நீ விதைக்கின்றாய் - உள 
திசையை நீயே நிறைக்கின்றாய்

உன்னை ஏந்தும் ஒவ்வொரு கணமும்
உள்ளில் புதுமை காண்கின்றேன் - நான் 
உண்மையிலேயே பிறக்கின்றேன் - உனைத் 
தென்றல் உரசி என்னிடம் வந்து 
சேதி சொல்வதை வியக்கின்றேன் - நீ 
செய்த மாயமாய் நினைக்கிறேன்! 

உன்னிடம் கற்றது நாமாய் இருத்தல் 
உனக்கும் கொஞ்சம் சொல்கின்றேன் - என் 
உள்ளையும் உனைப்போல் நீமலர்த்து - வந்(து)
என்னருகே சிரி என்னருகே ஒளிர் 
என்னருகே நீ வாடாதே - என் 
இதயம் அதனைத் தாங்காதே!! 

-விவேக்பாரதி
25.03.2023

Comments

Popular Posts