மெல்லக் கொல்லும் மன்னிப்புகள் | #நூல்நோக்கம்


கவிஞர் மரக்கா எழுதியுள்ள மெல்லக் கொல்லும் மன்னிப்புகள் வாசிப்பவர்களை மெல்ல மன்னித்துக் கொல்லும். பின் மெல்லக் கொன்றும் மன்னிக்கும்.

வீரியம் மிக்க கவிதைகளின் வழியே நேரிய உணர்வுகளை நெஞ்சுக்குக் கடத்துவதில் இந்தப் புத்தகம் வெற்றியைக் கொடுத்துள்ளது. ஒவ்வொரு கவிதைக்குப் பின்னும் இருளும், வலியும் மட்டுமே எஞ்சி இருந்திருந்தால் இது சாதாரண படைப்பாகப் போயிருக்கும். ஆனால், அவற்றுள் ஆழமாக ஊடுருவி எல்லா வரிகளுக்குள்ளும் நிற்கும் நம்பிக்கையின் கீற்று பால் புதுமையினரின் வாழ்வை நெருங்கிப் பார்ப்பதற்கும், திருநர் சமுதாயம் கண்டிருக்கும் வலிகளைக் கண்ணாடி வழியாக நேரடியாகக் காண்பதற்கும் வழிவகுக்கின்றன. இந்தப் புத்தகத்தில் சில கவிதைகள், சில வலியின் வரிகள், சில விரக்திக் குறிப்புகள், சில எச்சரிக்கை வாசகங்கள் ஆனால் அனைத்தும் உணர்ச்சிக் குமிழ்கள். எனக்குப் பிடித்த சில வரிகளை ஒருமுறை சொல்லிப் பார்க்க நினைக்கிறேன். 

"நிர்வாணம் 
கொடுத்திடும் 
விடுதலை 
உடைகள் 
கொடுப்பதில்லை!" 

அடுத்த பக்கத்தைத் திருப்பினால் அங்கிருக்கும் இரண்டு கவிதைகளுக்கும் நன்றி சொல்லத் தோன்றுகிறது. தற்கொலை கடிதங்களை சீர்கெட்ட என்று கவிஞர் குறிப்பிட்டுள்ளது, அவர் கடந்து வந்த வலிப்பாதையையும் காட்டி, அத்துடன் அவர் பக்குவப்பட்டதன் விரிவையும் காட்டி, கடிதம் கிடைத்த கணத்தைக் குளிர்ந்த நிறத்தில் மனக்கண்ணில் உறையச் செய்கிறது. 

"என் பிறந்தநாள் இரவில் 
கனா ஒன்று கண்டேன் 
பிரசவ வார்டில்
என் குழந்தைக்குப் 
பாலூட்டிக் கொண்டிருக்கிறேன்!" 

(கவிதையை அதன் உச்சரிப்பு தொனிக்கேற்ப சீர் பிரிக்கிறேன். அதற்காகப் கவிஞர் பொறுத்துக் கொள்ள வேண்டும்) இந்தக் கவிதை எனக்குள் ஏன் அத்தனை ஆனந்தத்தைக் கொண்டு வருகிறது என்பது என்னால் எழுதி விளக்க முடியாதது. இந்தக் கவிதைக்கு அணைப்பொன்றே பரிசு! மரப்பாச்சி கவிதை கடத்திய உணர்வு கச்சிதம். 

"பேனாக்களை விட 
பென்சில்கள் தரும் வாய்ப்புகள் 
மாற்றத்தை உருவாக்கும்!" 

மாறுபட்ட கோணத்தில் வாழ்க்கையைப் பார்க்கச் செய்த இந்தக் கவிதையை வாசிக்கும் அனைவரும் நிச்சயம் மற்றவர்களிடம் சொல்லி அறிமுகப் படுத்தும் மரக்காவுக்கான அறிமுகக் கவிதை (Visiting Card) ஆக இருக்கும். இதற்குள் இருக்கும் அத்தனை துல்லியமும், அவ்வளவு விரிவும் திருக்குறளை நினைவுப்படுத்துகிறது. அடுத்தடுத்த கவிதைகளில் மரக்காவின் அடிநாதம் ஜீவகாருண்யம் என்பது தெளிவாகப் புலப்படுகிறது.

"என்னைப் பிட்டு 
எடுத்துப் புசியுங்கள்
………………
காரி உமிழ்ந்தவர்க்கும் 
கார்ப்பு இல்லாமல் 
இனிப்பாவேன்!"

என்ற கவிதை. அதிலும் இன்னா செய்தார்க்கும் நன்மை விழையும் தாய்மை உள்ளம் முத்தாய்ப்பாய் அடியில் மின்னுகிறது. அதே உணர்ச்சியை பறவைகளைக் குறிப்பிட்டுத் தாய்மைப் பிறப்பு தேடிய ஆச்சர்ய ஆசைக் கவிதையும் எதிரொலிக்கிறது. 

வலியின் முகவரிகள், தாய்மையின் அகவரிகள் மட்டுமா என்றால், அடுத்த சில கவிதைகள் சவுக்கடியின் காயங்களையும் உண்டாக்குகிறது. மரக்காவின் சொற்சவுக்கு தவறு செய்வோருக்குத் தண்டிக்கும் ஆயுதமாகவும், மீட்க ஆளற்ற உள்ளங்களுக்கு மேலேறும் கயிறாகவும் தொனிக்கிறது. குறிப்பாக, ‘சொல்கிறேன்… சொல்கிறேன்’ என்று அழுத்திச் சொல்லப்படும் கவிதை. (முழு கவிதையை புத்தகத்தை வாங்கித்தான் படிக்க வேண்டும் என்று நான் நினைப்பதால் வரிகள் இங்கே கொடுக்கப்படவில்லை) ஆணுறை கவிதையும் அத்தகைய சவுக்கடியே. 

"ஓட்டை உடைசலாய் 
இருந்தால் என்ன?
ஈயம் பூசி இன்னும் 
மெருகேற்றுவேன் 
அளக்கும் மரக்காவை 
அழகாக்குவேன்!" 

சுயத்தைத் தேடித் திரியும் மனம் ஆன்மிகத் தெளிவைத் தொடுவதே இயற்கை. அத்தகைய ஆன்மிகக் கவிஞராக பிரமிளைப் பிரதிபலிக்கும் கவிதைகளும் மரக்காவின் மெல்லக் கொல்லும் மன்னிப்புகள் தாங்கி நிற்கிறது. அதில் இருக்கும் விரக்தி வழி கண்ட ஞான வெளிச்சம் கவிஞரை அடிமுடி அறிய முடியாத நெட்டுக்கு உயர்த்திக் காட்டுவதை வாசிப்பவர்கள் உணரலாம். 

"தனலாய் இரு மனமே
எரிந்து சாம்பல் ஆவதை விட 
கொதிப்படங்காத
தனலாய் இரு! "

"உடனே வலிகள் நீங்கிவிட்டால் 
காயங்கள் 
வெறும் கழிவுதானே!" 

என்னே ஆழம்! அதன் ஒவ்வொரு சொல்லுக்கு இடையேயும். ஊழிகளைக் குடியமர்த்தும் பேராழம் கண்டீர்களா! வலி, அரவணைப்பு, தண்டனை, தேடல் அனைத்தும் காதலில் சங்கமிக்கும் அழகும் இந்தக் கவிதைத் தொகுப்பில் சுகமாய் நேர்கிறது. கற்பனைக் கலவி குறித்த கவிதை கொள்ளை அழகு. அடுத்தடுத்த காதற் குற்றாலங்களும் அனைத்து அங்கங்களையும் தவறாமல் நனைக்கும் திறம் படைத்தன. உடையைப் பிழிந்து கோபம் ஆற்றக் கேட்கும் கவிதையும், பிரதிப் பெயர் மாற்றி விளிக்கப்பட உருவாகும் எரிச்சல் சொல்லும் கவிதையும் திருநர் சமுதாயத்தின் சொத்துக் கவிதைகள். (Pronoun-க்கு பிரதிப் பெயர் என்ற சொல்லைப் படித்தறிந்து கொண்டேன். நன்றி மரக்கா டீச்சர்!) 


முத்தாய்ப்பாய் முடிந்த கவிதையும் சபாஷ். இப்படிக் கவிதைக் கனிகளைச் சுவைக்கக் கொடுத்த புத்தகம் கவிதைகளின் ஊடாய்த் தெரியும் எழுத்து, சொல், கருத்துப் பிழைகளையும் காட்டாமல் இல்லை. அதைச் சுட்டாமல் விடவும் மனமில்லை. போராளிக்கு இலக்கணம் எதற்கு என்பார்கள். இலக்கணம் உடைத்தெழுதும் உணர்ச்சிகளுக்குள் சொற்பிழை நோக்குவது சரியா என்பார்கள்.  பிழை சொல்வது எளிது, பிழைக்க வழி சொல்லுங்கள் என்பார்கள். இத்தகைய எந்த வாதத்திலும் எனக்குச் சம்மதமில்லை. நான் ஏன் பிழை இல்லாமல் எழுத வேண்டும் என்று வாதிப்பவர்களிடம் கூற விழைவது ஒன்றே, மொழிகள் ஒருபுறம் நம்மேல் திணிக்கப்படும்போது எதிர்த்துப் போராடும் நாம், மறுபுறம் நம் தாய்மொழியைப் பிழையற எழுதி, படித்து, அதைப் பேண வேண்டியதும் போராட்டங்களுக்குள் ஒன்றாகிறது. ஆக, பிழைகளற்ற எழுத்தும், பேச்சும் மொழிப்போரில் மிக முக்கியம் என்பதை இன்றைக்கு எழுதும் என்போன்றோர் உணர வேண்டியதாகும். 

மரக்காவின் இந்தப் படைப்பு உணர்ச்சித் தளங்களைத் தொட்ட ஆழம் அடுத்த படைப்பில் இன்னும் மெருகேறும் என்பது உறுதி. அப்படி நடக்க எல்லா வகையிலும் பராசக்தியைப் பிரார்த்திக்கிறேன். ஆனால், அது கூடுமானவரை சொல், எழுத்து, வாக்கிய சறுக்கல்கள் அற்ற செம்படைப்பாக வர ஆசைப்படுகிறேன். தன்னைத் தானே நிறுவி, சமுதாய அழுத்தத்தையே பலமாகக் கொண்டு வைரமாக வெளிவரும் மரக்காவுக்கு என் வாழ்த்தும் நேசங்களும். 

விவேக்பாரதி
04.03.2023

Comments

Popular Posts