அதரப்பூச்சு | #நூல்நோக்கம்


கவிஞர் அக்னி பிரதீப் எழுதி, அணியம் பதிப்பகத்தின் படைப்பாக வந்திருக்கும் #அதரப்பூச்சு கவிதைப் புத்தகம் கிடைக்கப் பெற்றேன். வந்த வேகத்தில் அதன் மேலுறைகளைக் கிழித்து, அப்படியே அமர்ந்து படித்தும் முடித்தேன்.
புத்தகத்தின் தொடக்கத்தில் விக்ரமாதித்யன் மொத்த வாழ்வுக்கான அர்த்தம் கூறி வரவேற்றார். பின்னர் எடுத்த எடுப்பிலேயே அக்னியின் உரை. முதலிலேயே அவரது உரையை இட்டுச் செய்திருப்பது புதுமை. அதிலும், 

“பேரன்புள்ள, காதலிக்கத் தகுதி படைத்தவர்களே, கற்பை பொதுவில் வை என்கிறார்கள். கற்பைக் கண்ணியத்தில் வையுங்கள். பாலினத்தைப் பொதுவில் வைய்யுங்கள்”


என்ற வாசகம் என்னைப் புதிய கோணத்தில் திருப்புகிறது.


தொடர்ந்து வரும் மருது பாண்டியன் அவர்களின் வாழ்த்துரை இதுவரை நான் படித்திராத புதுமை. ஒவ்வொரு சொல்லும் கச்சிதம். சீரான அளவில் சொல்லும் பொருளும் இயைந்து வாழ்த்த உத்தி ஒன்றைப் படித்துக் கொண்டேன்.


குறிப்பாக, 


“முருங்கையில் வளரும் கம்பளிப்பூச்சாய்த் தீண்டாமை வளரும்போதெல்லாம் அதைத் தீயிட்டுக் கொளுத்த வேண்டியது நம் அனைவரது கடமை. அதற்கு எல்லார் நெஞ்சிலும் அணையாமல் ஒரு அக்னி சென்று சேர வேண்டும். அதற்குத்தான் சொல்கிறேன் அனைவரிடம் இந்த அக்னி சென்று சேர வேண்டும்.”


என்ற வாழ்த்து அக்னிக்கு காலத்துக்கொரு வாழ்த்தாக நிலைக்கும் என்று பெருமிதம் கொள்கிறேன்.


பூங்கொடி மதியரசு என்னும் தங்கக்குட்டி எழுதியுள்ள அடுத்த உரை நெஞ்சுக்கு மகிழ்ச்சியானது. அழகு ஜெகனின் பதிப்புரையில், எழுத்தாளர், கவிஞர், போராளி என்பதையெல்லாம் கடந்து, பதிப்பாசிரியர் என்பதன் பொறுப்பு தெரிகிறது.


இதோ இந்த இடத்தில்-


“வாசகர்கள் ஒவ்வொருவரும் கவிதைகளைப் படித்துப் புரிந்து மக்களீன் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள அன்போடு கேட்டுக் கொள்கிறேன்”


என்று முடித்ததில் அக்னி மேலும், இந்த இலக்கியத்தின்மேலும் அவருக்கு இருக்கும் அக்கறை வெளிப்படுகிறது. அது அழகு ஜெகனைப் போல அழகாக இருக்கிறது ! 


அக்னி, அடி முடி அறிய முடியாத விஸ்வரூபம் எடுத்திருக்கும் சிந்தனைப் பிரவாகம். அதன் சிறு முன்னோட்டம் இந்தக் கவிதைத்தொகுப்பு. அடிமுடி என்று சொன்னதன் அர்த்தம், இந்தப் புத்தகத்தில் எந்தக் கவிதைக்கும் தலைப்போ, முடியும்போது குறியீடுகளோ கிடையாது. வாசகர்கள் வசதிக்காக பதிப்பகத்தார் பாவம் பார்த்து, புதிய கவிதைகளின் தொடக்கத்தை ரிப்பன்களால் குறித்துள்ளனர். அதற்கு அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். இல்லையென்றால் ஆசுவாசம் செய்துகொள்ளக் கூட நேரம் வைக்காமல், இந்த அக்னி தனக்குள் படிப்பவர்களை மொத்தம் விழுங்கி, இதெல்லாம் ஒரே கவிதையோ என்று தோன்றும்விதம் தின்று செறித்துவிட அன்பு வாய் திறந்துக் காத்துக்கொண்டுதான் இருக்கிறார்.


இம்முறை புத்தகத்தை வாசிக்கும்போது அதிர்ஷ்டவசமாக கையில் பென்சில் ஒன்று சிக்கியது. என் உயிர் துள்ளிய வரிகளைப் புத்தகத்தில் குறித்துக்கொண்டே வந்தேன். அவற்றில் சிலவற்றை இங்கே சொல்கிறேன்.


“எங்கோ வடிக்கும் கண்ணீருக்கு 

நான் கவிதை வரைகிறேன்”


“ரணத்தின் சுமை 

அவ்வளவு கனம்”


முதலில் தன்னிலை விளக்கமாக எழுந்த வரிகள், பின்னால் அனைவருக்குமான விளக்கம் (விளக்கு) ஆனது இந்தக் கவிதையின் ராஜவரி. ஏதோ ஒரு விபத்தால் உண்டாகும் காயம், வலிக்கிறது என்று நாம் உணர்கிறோம். ஆனால் அதைத் தூக்கிச் சுமக்கும் சுமையை உணர்வதில்லை. அதன் சுமைதான் நம் வலி. இதைத் தோலுறித்துக் காட்டுகிறார் அக்னி! 


“உன் தோளில் சயனித்து

சாய்ந்து அழுததில் 

கழுத்தெலும்புப் பள்ளத்தில் 

நிரம்பிக் கிடக்கிறது 

கண்ணீர்க் குவியல்”


அதரப்பூச்சைப் படிக்கும் அனைவரும் இந்த இடத்தில் நின்று ரசித்து, சில கணங்களைத் தொலைப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. எனக்குக் கூட அடுத்தமுறை யாரையேனும் கட்டிப்பிடித்து அழுதால் கழுத்தெலும்புப் பள்ளத்தில் நீர்த்தெக்கம் ஆகும்வரை அழ ஆசை தோன்றுகிறது. 


அக்னிக்குள் இருக்கும் பாடலாசிரியர் இந்த இரண்டு வரிகளில் வெளித்தோன்றிச் சிரிக்கிறார். ஒன்றும் ஒன்றுக்கொன்று பொருளால், சொல்லால், நடையால் பின்னிக்கொண்டு தங்களுக்குள்ளேயே பூரணமாகும் வரிகள். ஒரு பாடலுக்கு இப்படித்தான் அமைய வேண்டும் என்று சொல்லப்படாத விதி ஒன்று இருக்கிறது. அதன் பிரதிபலிப்பாய் இருக்கின்றன இவ்விரு வரிகள்-


“உன் மயிரிழைத் தீண்டலிலே 

என் உயிர்நிலை அதிர்கிறது”


இந்த இரு வரிகளை எனக்குத் தோன்றிய மெட்டில் பாடியும் பார்த்தேன். ஆகா என்னே கச்சிதம். அக்னிக்கு எப்போதெல்லாம் காதல் வரும் என்று தெரிந்துகொள்ள ஆசை. அதற்குக் காரணம், இந்த வரிகள்தான். 


“இதயத்தில் 

உன் முகம் குவியும் 

போதெல்லாம் 

என் இதழ்களும் குவிகிறது 

முத்தங்களைக் 

குவித்திட” 


இதயத்தில் காதலிப்பவரின் முகம் குவியும்போதெல்லாம் இதழ் குவியும் அழகுக் காட்சியைக் கற்பனை செய்து பார்க்கிறேன். அக்னி, இனி விளையாட்டாக pout செய்வதை நான் பார்க்க நேர்ந்தால் நிச்சயம் புன்னகைப்பேன். 


“இதழை ரசிக்கும் யாரும்

மீசையை ரசிப்பதில்லையா?

அந்த மீசையின் நுனியில் 

திமிரைத் தடவி முறுக்கியதைக் 

கண்டு ரசித்தேன்”


என் முறுக்கு மீசையை ரசிக்கும் அக்னி, இந்த வரியை ஏனோ எனக்காக எழுதி இருப்பதாகவே நான் நினைத்துக் கொள்கிறேன். மீசையைத் தடவி ரசிக்கும் அனைவருக்கும் இந்தக் கவிதையைப் படிக்கும்போது அனிச்சையாக விரல்கள் இன்னொருமுறை அந்த மீசையின் திமிரை வருடிப்பார்க்க நினைக்கும். எனக்கும் நிகழ்ந்தது. 


காட்சிகள் கவிதை ஆகும். கவிதைக்குள் காட்சிகளும் அடங்கும். இவை இரண்டும் நீரும், குளிரும் எனப் பிரிக்க முடியாதது. ஆனால் ஒரு சொல், அது சுமந்து வரும் காட்சியை துல்லியமாகக் காட்டி, அதன் பிரம்மாண்டத்தில் தன்னை விழுங்கிக் கொள்வது, அந்தக் கவிதைகளின் அமர வரிகள் ஆகின்றன. இதோ இப்படி- 


“இதயத்தின் துடிப்புகள்

விழி மயிரில் தெரிகிறது”


இதை வாசிக்கும் ஒருகணம், இமை அதிர, அதில் இதயத் துடிப்பு பிரதிபலிக்க, எது நடக்க எது நடந்தது என்னும் குழப்பம் உண்டாகிறது அல்லவா. அதுதான் இந்த வரிகள் நமக்கு நுணுக்கிக் காட்டும் பிரம்மாண்டம்.


இதே கவிதையில் இன்னொரு வரி என்னைத் துள்ள வைத்தது அக்னி. 


“உன் கொதிநிலை அளந்திட 

வெப்பமானிக்கு 

நான் எங்கே போவேன்”


இந்த வரிகள் எனை ஏனோ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ரசிக்கச் செய்தது. 


“Where would I go

For a thermometer 

To measure your hotness”


இதை ஆகச்சிறந்த காதல் வரி என்று என் உள்ளம் துள்ளித் துள்ளிக் கொண்டாடுகிறது. முழு கவிதையிலும் காதலுக்கு உரியவரை அக்னியே தழுவி சூடேற்றிவிட்டு, பின் அவர் கொதிநிலை அறிய வெப்பமானி கேட்பதெல்லாம் எந்த விதத்தில் நியாமோ! (உங்களுக்கும் இதையே சொல்ல ஆசைப்படுகிறேன் அக்னி!)


“இரவில்

அல்லி மொட்டு மட்டும் 

பூப்பதில்லை 

என்ற ஐயமும் விலகியது”


இந்தக் கவிதை இலக்கியத் தரமாக்க இந்த ஒருவரி போதும். மொத்த இலக்கியத்திலேயே நம் மரபின் சாயலைத் தொட்டு, புதுமைக்கும் ஒரு காலினை நட்டு எழுதியிருப்பது அருமை. 


புத்தகத்தை நான் இரவில் வாசி்த்தேன். 


“கருங்குழல் தூரிகையால் 

இரவெல்லாம் 

தீட்டிய காரிருள்!”


இந்த வரியிடம் நெருங்குகையில், என்னைச் சூழ்ந்திருந்த காரிருள் இரு கருங்கூந்தல் அடர்த்தியாய்த் தோன்றி மலைக்க வைத்தது. பூங்கொடியையும் மதியரசையும் விளித்து எழுதிய கவிதை என்னை மீண்டும் உற்சாகத்துடன் துள்ள வைத்தது. அந்தப் பேரன்பின் பெருநதியில் நாம் நீந்துவதுதான் எத்தனை இன்பகரம் என்று மீண்டும் மனம் உறுதி சொன்னது. “என் இருப்பு 

உங்களுக்கு வெறுப்பாகிறதென்றால்

உங்கள் வயிற்றில் சுரக்கும் 

வெறுப்பு அமிலம் 

உங்கள் குடலை அரித்துச்

செரிக்கட்டும்”


குயர் என்றில்லாமல் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் தன்னம்பிக்கை எழுச்சியின் குரலாய் இது காதில், பலநூறு இதழ்கள் உச்சரிக்கும் கூட்டிசையாய் ஒலித்தது. ஆனால் எனக்கு ஒலித்த வரியில் சிறு மாறுதல் உணர்ந்தேன். 


“உங்கள் குடலையே அரித்துச் 

செரிக்கட்டும்”


என்றொரு ஏகாரம் இட்டிருந்தால், இந்த அம்பின் கூர்மை இன்னும் பன்மடங்காகி இருக்கும் என்று தோன்றுகிறது. அழகியல், காதல், ஆவேசம், காமம், வலி இதை மட்டும் கடத்துகிறாரா அக்னி என்று கேட்டால், இல்லை. இலக்கணமும் படைக்கிறார். 


“கைகளுக்குள் அகப்பட்ட கன்னங்கள்

கன்னக்களில் நிரைந்த முத்தங்கள்

முத்தங்கள் கொஞ்சும் உன்னிதழ்கள்

……..”


என நீண்டு ஒரு நாளின் சுழற்சிபோல் காதலை அந்தாதியைக் காட்டும் கவிதை.


கவிஞர் சமூக அவலகத்தைக் கண்டால் பாடாதிருத்தல் சாத்தியமா? அக்னி சீறுவது இப்படி இருக்கிறது.


“கல்வி கரையில என்பாரே

தெள்ளிதின் ஆராய்ந்தமைவீரோ?

கல்வியின் கரைக்கு அப்பால் 

சிறுமி நிற்பதைக் கண்டேன்”


“ஆண்மை என்பது காலுக்கு 

இடையில் இருப்பதல்ல

மாண்பைக் காப்பதில் உண்டு”


“மிருகத்திடம் மனிதம் உண்டு

மனிதனிடம் மிருகமே மிச்சம்”


“துப்புரவாளர் பாத்து 

பரிதாபப்பட்டார்

இவ்வீதி வாசிகளே நீங்கள் பாவம்”


இப்படி இன்னும் பல சொல்லலாம். அனைத்திலும் நெருப்புச் சாட்டையின் தனல் அடி, பிற்போக்குத் தனத்தின் மார்பிலும் முதுகிலும் ரணம் செய்யும் ரகத்தவை.


அக்னி, தாய்மையைக் கொண்டாடுவதே அழகாய் இருக்கிறது. 


“நட்சத்திரமில்லாத 

கார்வானம் பார்த்த வண்ணம் 

உடல் பூசும் உஷ்ணம் உணர்ந்தபடி

முலைப்பால்வழி அண்டத்தின் 

கீழுள்ள பனிக்குடக் கண்டத்தில் 

பத்து திங்கள் மிதந்த நான்”


என்று தம் கருவறை வாசத்தை எப்படியோ நினைவுப்படுத்திப் பதிவு செய்திருக்கிறார். அந்த உஷ்ணம்தான் அவரை அக்னி செய்ததோ என்னவோ!


பாரதியார் இசையை வியக்காத நாளில்லை. “நீ அண்ட பகிரண்டங்களை எல்லாம் படைத்ததைக் காட்டிலும் இசையைப் படைத்தாயே அதுதானடா உனது தனித்திறமை” என்று குயில்பாட்டில் பிரம்ம தேவனைப் போற்றுவார். அக்னி இசைக்குத் தரும் விளக்கம் அதை இன்னும் நெருக்கமாக உணரச் செய்கிறது. 


“பிக்பேங்கின் கருப்பையிலே 

பிறந்த முதல் பிள்ளை 

இசையே”


இன்னும் எத்தனை எத்தனையோ வண்ணங்களைக் காட்டிய அதரப் பூச்சு என் இதழ்களில் ஒவ்வொரு வண்ணமாய்ப் பூசிப் பூசி மறைந்தது. நான் உச்சரித்த வார்த்தைகள் அவ்வளவு வண்ணமயமானவை. நானே வண்ண நெருப்பில் ஒருமுறை புனிதமுற மூழ்கி எழுந்த அனுபவம்.


சபாஷ் அக்னி. தனன்றுகொண்டே இருங்கள்!


விவேக்பாரதி

10.03.2023


Comments

Popular Posts