பாவாடை அனுபவங்கள்


அண்மையில் நண்பர் கேப்ரியல் நடத்திய பாவாடை - கதைசொல்லல் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். தோழர்கள் அருண் கோகுலும் நிவேதாவும் நடிக்கிறார்கள் என்பதே நிகழ்ச்சிக்கு நான் செல்ல உந்துசக்தி. ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மேடை அரங்கில் முற்றிலும் வேறுபட்ட அமைப்பில் நாடகம் இழையோடிய கதைசொல்லலாக நிகழ்ச்சி அமைந்தது. அந்தப் புதிய முயற்சிக்கு கேப்ரியலுக்குப் பாராட்டுகள். 

பொதுவாக கதைசொல்லிகள் நின்று, கதையை தங்களுக்கே உரிய லயத்துடன் சொல்லிக் கேட்பவர்களைக் காட்சிக்குள் கூட்டிச் செல்வர். கேப்ரியலின் தனிப்பட்ட கதைசொல்லல்களும் அப்படிப்பட்டதுதான். இதற்கிடையில், அவர் முயன்ற பாவாடை நிகழ்வில் அவர் செய்திருந்த மாற்றம், கதை சொல்லியுடன் கதை மாந்தர்களையும் மேடையேற்றி நடிக்க வைத்தது.. அதில் கிடைக்கும் யுத்த - கதையைக் கதைசொல்லியே நகர்த்த வேண்டிய தேவை இருக்காது, கதாப்பாத்திரங்களின் வசனங்களை அவர்களே உணர்ச்சிகளுடன் வெளிப்படுத்தும்போது நாடகப்பாங்கில் கதை நன்கு பதியும். இப்படிப் பலவற்றை அடுக்கலாம். அதையெல்லாம் கச்சிதமாக செய்ய முயன்றுள்ள பாவாடை குழுவுக்குப் பாராட்டுகள். 

மேலும், கதையின் நடுவே பாடல்களை வைத்து அதை சினிமாத் தரத்திற்கும் உயர்த்தி, கதைசொல்லி கேப்ரியல் இயக்குநராகவும் மிளிர்ந்தார். பாடல்களைப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்திய இடங்கள் அழகாக இருந்தன. தமக்கே உரிய மிகவும் இயல்பான மொழியில் கதையின் ஆழத்தை குரலின் ஏற்ற இறக்கங்களுடன் வெளிப்படுத்தி, கேட்பவர் மனதில் பட்டு நெசவுபோல் பதிவு செய்தார் கேப்ரியல். அதுதான் அவரது பாணி. அதில் எள்ளளவும் குறையில்லாமல் நிகழ்ச்சி அமைந்தது கேப்ரியல் ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கும். 
கதைசொல்லலில் முதன்முறையாக நடித்த இரண்டு கதாப்பாத்திரங்கள், தேன்மொழியாக நிவேதா நித்யானந்தமும், தமிழாக அருண்கோகுலும் கதையின் உணர்ச்சியை உள்வாங்கி, தங்கள் உணர்வுகளுடன் இழைத்துத் தத்ரூபமாக வாழ்ந்து காட்டினர். இருவரும் இணைந்து முதன்முறை நடிக்கின்றனர் என்ற சிந்தனையே எழாதபடி அவர்களுக்குள் இருந்த ஒத்திசைவு இனித்தது. இடையிடையே கேப்ரியலின் குறும்புக் குத்தல்கள் கதையை நகைச்சுவையோடு பதிய வைத்தது. 

பின்புலத்தில் வலதுபக்கம் கிட்டாரும் கையுமாக இருந்த ஆகாஷ், இந்தப் படைப்புக்கு இசை அமைத்திருந்தார். அவரது இசையில் ஜீவன் இருக்கிறது. அது கதையின் பின்புலத்தில் ஒலிக்க ஒலிக்க, கதை வான நீளங்களைக் கடந்து அண்ட அதிசயங்களுக்குள் நுழைந்து செல்லும் மாயாஜாலங்களை உணர முடிந்தது. அதற்கு மிகவும் தோதாக இடதுபுறம் அமர்ந்து பாடல்களையும், பின்னணி வசனங்களையும் பேசிய பாடகியின் குரல் ரம்மியமாக இசைந்தது. கதையைத் துணை செய்ய கேப்ரியல் எழுதியிருக்கும் பாடல்களும், பொருத்தப்பட்ட இடங்களும் மிகக் கச்சிதம். 


நடிப்பைப் பொறுத்தளவில் மேடையில் தோன்றிய மூவரில் தேன்மொழியாக நடித்த நிவேதா அனைவரையும் கொள்ளை கொண்டாள். இது அவருக்கு முதல் மேடை என்று சொல்லவே முடியாது. அந்த அளவு கதைக்குள் ஆழ்ந்த நிறைவைக் கண்களிலேயே வெளிப்படுத்தி நடித்தார். வசன உச்சரிப்பு, சக நடிகர்களுடன் ஒத்திசையும் தாள லயம் என்று அனைத்திலும் தேர்ந்த நாடகக் கலைஞரின் உழைப்பும் திறமையும் தெரிந்தது. ஆனால், தன் கவிதையையே நாடகம் போல் நிகழ்த்திக் காட்டும் நிவேதா, வசனங்களையும் கவிதைகளின் தன்மையுடன் பேசியது கதையின் தன்மைக்குச் சற்றே அதிகமாக தொனித்தது. அதை அவர் குறைத்துக்கொண்டு இயல்பான தொனியில் பேச வேண்டும். மேலும், நிவேதா மேடை நாடகங்கள் நடிப்பதைத் தொடர வேண்டும் என்று அன்றுமுதல் அவரது நடிப்புக்கும் ரசிகனான எனது தாழ்மையான வேண்டுகோள். 

நண்பன் அருண்கோகுல் சிறந்த மேடைக் கலைஞன். பேச்சில் அரங்கம் முழுமையையும் தன் ஆளுகைக்குள் கொண்டுவர வல்லவன். அது நடிப்பிலும் தெரிந்தது. ஆனால், அருணிடம் ஏதோ தயக்கம் இருந்தது. முதன்முறை நடிப்பதால் ஏற்படும் தயக்கமாக இருக்கலாம். அடுத்த எந்த விமர்சனமும் வைக்க முடியாதபடி, நிகழ்வின் முடிவில் தான் பேசியபோதே தனக்கு நடிக்க வரவில்லை என்றும், அதை எதிர்பார்த்துத் தன்னை அணுக வேண்டாம் என்றும் பின்குறிப்பை அருண் உதிர்த்து நகர்ந்தாலும், அருண் என்ற கலைஞனின் மேம்பாட்டிற்காக ஒன்றுமட்டும் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன். பேச்சாளனாக மிளிரும் அருண் கோகுல், தான் உச்சரிக்கும் வசனத்தின் கடைசிச் சீர் வரை உரக்கப் பேச வேண்டும். ஒவ்வொரு சொல்லின் கடைசிச் சீரும் தொண்டைக்குள் விழுங்கிக் கொண்டதுபோல் ஒலிப்பது நாடகம் உட்பட எந்த மேடைக் கலைக்கும் அழகன்று என்பதை அவன் உணர வேண்டுகிறேன். 

கேப்ரியலின் கதை சொல்லலில் இருந்த புதுமையைப் பாராட்டும் இடத்தில், அதில் ஏற்பட்ட சறுக்கலையும் குறிப்பிடத் தவறிவிட முடியாது. கதையின் இறுதிக்கட்டம் நெருங்க நெருங்க, கதாப்பாத்திரங்களின் வசனங்கள் குறைந்து, கதைசொல்லியின் பேச்சுகள் அதிகரித்தன. அதனால் பல இடங்களில் மனம் அலைபாயத் தொடங்கியது. பார்வையாளர்கள் தங்களைக் கதையுடன் பொறுத்திக் கொள்ள முடியாமல் போனது. குறிப்பாக கதை மாந்தர்கள் இருவரின் மரணம் குறித்த காட்சிக்குப் பின் வந்த வசனங்களில் அவ்வளவாக தெளிவில்லையோ என்று தோன்றியது. இருவரின் பெயரை மட்டுமே கேப்ரியல் மாற்றி மாற்றி உச்சரித்துக் கொண்டிருந்ததாகத் தெரிந்தது. அந்தப் பகுதி வசனங்களை கேப்ரியல் இன்னும் செறிவூட்ட வேண்டும். 

மேலும் முக்கியமாக, நாடகத்தன்மை இழைந்த இந்தக் கதை சொல்லலை இன்னும் கொஞ்சம் நாடகப்பாங்கில் வடிவமைக்க வேண்டும். கதாப்பாத்திரங்கள் மேடையில் நகர்தல், கதை சொல்லி நகர்தல் போன்ற இடங்களில் மேடையை சரியாகக் கையாள முடியாத தன்மை தெரிந்தது. மேடை நாடகமோ, எந்த மேடைக் கலையோ பார்வையாளர்களுக்கு பின்புறத்தைக் காட்டக் கூடாது என்ற விதி உண்டு. அதை கேப்ரியல் கவனத்தில் கொண்டு அப்படி தன் மற்றும் தன் பார்த்திரங்களின் நகர்வுகளை இன்னொருமுறை கவனமாக உற்றுநோக்கி வடிவமைக்க வேண்டும். 

ஆழ்வார்பேட்டையின் ‘மேடை’ அரங்கத்தில் நடந்த முதல் நிகழ்வில் பார்வையாளர்களுக்கு ஏற்பட்ட இன்னொரு அசௌகர்யம், பார்வையாளர்கள் இருக்கைகளில் அமர்த்தப்பட்டபோது சமதளமான தரையில் கதை மாந்தர்கள் விழுந்ததும், அதன் பின் நடந்தவையும். இதனால் கதையுடனும் ஒட்ட முடியாமல், எழுந்து என்ன நடக்கிறதென்றும் பார்க்க முடியாமல் பார்வையாளர்கள் கதையுடனான தொடர்பை இழக்க நேரிட்டது. இதையும் கவனத்தில் கொண்டு இயக்குநர் கேப்ரியல் வடிவமைப்பைச் செறிவு செய்ய வேண்டும். 

கதை மாந்தர்கள் மேடையில் நகரும் இடங்களுக்குத் தகுந்தபடிதான் மேடையின் விளக்கொளி வடிவமைப்பு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், குவியொளி எனப்படும் Spot lightஐ இயக்கியவருக்கு, மேடையில் நகர்பவர்களின் அசைவுகள் முன்னரே தெரியாததுபோல் இருந்தது. அருணோ, நிவேதாவோ, கேப்ரியலோ போய் நின்று பேசத் தொடங்கியதன்பிறகுதான் குவியொளி அவர்கள் பக்கம் திரும்பியது. இதையும் துரிதப்படுத்த முறையான பயிற்சிகளை குழு மேற்கொள்ள வேண்டும்.

தொடக்கத்தில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் பட்டாசு போல் வெடித்துச் சென்றது அழகாய் இருந்தது. இன்னும் எத்தனையோ சொல்லலாம் ஆனாலும், கேப்ரியலின் புது முயற்சி நெஞ்சுக்கு நெருக்கமான தோழர்களின் நடித்தல் முயற்சி இரண்டும் உச்சிமேல் ஏற்றிப் பாராட்டத் தக்கது. வழங்கப்பட்ட கதையில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்திருக்கலாம். ஆனால் நான் மேலே குறிப்பிட்டவற்றைப் பார்வையாளர்கள் அனைவரும் உணர்ந்திருப்பார்கள். இதை கேப்ரியல் உற்று நோக்க வேண்டும் என்று விழைகிறேன். 

பாவாடை கதை சொல்லல் இன்னும் செறிவாய்ப் பல மேடைகளைக் காண எனது பரிபூரண வாழ்த்துகள்! நன்றி! 

-விவேக்பாரதி
04.04.2023 | இரவு 7.30

Comments

Popular Posts