விடைபெறுங்கள்


விடைபெறுங்கள்! 

நீங்கள் என்னைப் பிரிந்து 
இரட்டிப்பு தூரம் கடந்திருக்கும்
போதுதான் 
நான் உங்களுக்கான 
விடைக்குறிப்பையே 
எழுதத் தொடங்குகிறேன்! 

முதலில், 
உங்களிடம் இருந்து 
விடுதலையான என்னைக் கூட்டிக்கொண்டு
நானே இரவுலாவுக்குச் செல்கிறேன்!
அதில் எனக்கென்று நானே 
இருக்கை இழுத்துப்போட்டு 
என்னை அமரச் செய்து 
அழகு பார்க்கிறேன்! 

எனக்குப்  பிடித்த உணவைக் கேட்டு, 
பீட்ஸா நிரம்பிச் சிரிக்கும் 
மேஜையின் மேல் வைத்துதான்
ஆசுவாசத்தோடு உங்களுக்கான 
விடையனுப்பு வார்த்தைகளை எழுதுகிறேன்! 

வெகுநேரம் ஆகிப்போனதால் 
இந்த விடைக்குறிப்பில் அப்படி 
என்னதான் இருக்கும் என்ற 
கவலை உங்களுக்கு வேண்டா!
வழக்கம்போல் இதிலும் 
நிறைய நான்தான் இருக்கிறேன்!

உங்களை எண்ணி நான் 
பிரிவுழலும் ஒவ்வொரு முறையும் 
இப்படித்தான் என்னை 
ஏதோ தொலைவுக்குக் கூட்டிச் சென்று
பேசுவேன்! 

உங்களைப் பற்றிய மதிப்பீடுகளே
அப்போதுதான் நடக்கும்!
எங்கோ நீங்கள் காரணமின்றி 
கமறினால் 
இப்பக்கம் நான் என்னுடன் 
உங்களைப் பற்றித்தான் 
பேசிக்கொண்டிருக்கிறேன் 
என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்! 

நீங்கள் உங்கள் நாக்கைக்
கடித்துக் கொண்டீரா?
திட்டியது நாங்கள்தான்! 

புதிதாக ஒரு 
புன்னகை அரும்புகிறதா?
மெச்சியதும் நாங்கள்தான்! 

ஒரு விடைபெறுதல் குறிப்பு
கண்ணீர், கோபம், 
கட்டிப் பிடித்தல், பெருமூச்சு 
என எத்தனையைக் கொடுத்தாலும் 
அதிலிருந்து விடைபெற்றுக் கொள்ளவே பார்க்கிறேன் 
அடுத்த விடையனுப்புதலுக்குத் 
தயாராகவும்
என்னை நான் விடையனுப்பி விடாமல் வாழ்ந்திடவும்!  

எப்படியும் We die
அதற்குள் எத்தனை விடை!! 

-விவேக்பாரதி
02.04.2023 | 10.45 PM

Comments

Popular Posts